ராகம் தானம் பல்லவி – பாகம் 8

Standard

சென்ற கட்டுரையின் முடிவில் ரா.தா.ப. உருப்பிடியில், கச்சேரியில், பல்லவியின்  நிரவலுக்கு பின் ஸ்வரகல்பனை (கற்பனைத்திறனுக்கேற்ப ராகத்தில் ஸ்வரக்கோர்வைகளாக பாடுவது) செய்வார்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். இதில் திருத்தம். அதாவது, அனுலோமம் பிரதிலோமம் என்று இக்கட்டுரையில் விவரிக்கப்போகும் அங்கத்தை மேடையில் பல்லவி பாடுகையில் ஒதுக்கிவிடும் பாடகர்களே, நிரவலுக்கு பின் நேரடியாக ஸ்வரகல்பனைக்கு செல்வர். தேர்ந்த பாடகர் ரா.தா.ப.வில் எடுத்துக்கொண்ட பல்லவியில் அனுலோமம் பிரதிலோமம் செய்த பிறகே ஸ்வரகல்பனை அங்கத்திற்கு செல்வார்.

அனுலோமம் பிரதிலோமம் பற்றி நிறைய வீடியோ டெமோக்களுடன் சமீபத்திய சொல்வனம் இணைய இதழில் விரிவாக எழுதியுள்ளேன். சாராம்சம் இங்கு மீள்பதிவாய்.
Continue reading

ராகம் தானம் பல்லவி – பாகம் 7

Standard

கர்நாடகசங்கீதத்தில்  நிரவல் (தெலுங்கில் நெரவு) என்றால் நிரப்புதல், பரப்புதல், பல்கிப்பெருக்குதல் போன்ற அர்த்தங்கள் தொனிக்கும். நிரப்புதல் என்கிற தமிழ் அர்த்தத்திலேயே இதை அணுகலாம். கீர்த்தனையை, பாடலை, கெடச்ச gapப்பில் இசையால் கொட்டி நிரப்புதல் என்று அறிமுகவிளக்கமாக கொள்ளலாம். ஒரு ஐடியாவை பலவகைகளிலும் குலுக்கி புரட்டிப்போட்டு அலசும் மனித மனதின் செயல்பாட்டின் இசைவழி வெளிப்பாடாகவும் பார்க்கலாம். பாடலின் ஒரு வரியை, சாஹித்தியத்தை, எடுத்துக்கொண்டு, அதை நீட்டி, முழக்கி, புரட்டி, சுருக்கி, ராகத்தின் ஸ்வரூபத்தை, பரிமாணங்களை, அந்த வரி வடிக்கப்பட்டிருக்கும் ராகத்தால், இசையால், பலவகைகளிலும் அலசி நிரப்பிச்சொல்வது நிரவல்.

சங்கதி பற்றி சொன்னோம். அதை மனதில் வைத்து இப்படிச்சொல்லலாம். ஒரு கீர்த்தனையை, பாடலை, படைப்பவரின் கற்பனைத்திறன், கிரியேடிவிட்டி, படைப்பூக்கம், சங்கதி. அந்தக் கீர்த்தனையை பாடுபவரின் படைப்பூக்கம் நிரவல்.

நிரவல் பாடுவது கடினம். சில வித்வான்கள் தங்கள் கச்சேரி வாழ்க்கையயே நிரவலை தவிர்த்து ஒப்பேற்றியிருக்கிறார்கள். மரபிசையிலேயே இப்படியென்றால் திரையிசையில் நிரவல் செய்யமுடியுமா என்ன?

இதோ ஒரு திரையிசை உதாரணம். கீழே கொடுத்துள்ளதே நண்பர் ராம் ஓர் இரவு தேடியெடுத்தது.

சிவசங்கரி சிவானந்தலஹரி என்பது பாடல். ஜகதலப்பிரதாபன் திரைப்படத்திலிருந்து. அந்த பாடல் வரிகளையே எடுத்துக்கொண்டு கடினமான நிரவல் அங்கத்தை சுருதிவிலகாமல் பாடுபவர் யாரென்பது பொருட்டல்ல.

http://www.youtube.com/watch?v=lw7oGHq1Qng

நிரவலை கவனியுங்கள். சிவசங்கரி சிவானந்தலஹரி என்ற பதங்களை நீட்டி முழக்கி, குறுக்கிச் சுருக்கி, தடுக்கி உடைத்து, மூன்று மூன்றாய் ஸ்வரக்கோர்வையாய் பதங்களை உபசொற்களாய் (’தான’ மாய்) உடைத்து பாடி, அடுத்த ரவுண்டில் சடாரென்று வழுக்கி சி , வா, நந், த, ஹரி என்று விரித்து இழுத்து, “ஸ்தம்பான் அரோஹன் நிபபாத பூமௌ” என்று மந்தோதரியை சீதை எனநினைத்த ஆஞ்சவேயரின் ரியாக்ஷன் போல ஒரு சமயம் தரஸ்தாயிவரை குரல் எழும்பி கம்பத்தின் உச்சிவரை ஏறி, சர்ரென்று குதித்து கீழே விழுந்து மந்தர ஸ்தாயிவரை இறங்கி, பிரவாகித்து, அனைத்தையும் தாளக்கட்டுக்கோப்பிலிருந்து விலகாமல், ஒரே ராகத்தினுள்ள ஸ்வரங்களுக்குள், அன்னியஸ்வரங்கள் வராமல் பாடி…

ஒரு கோடி தான் காட்டுகிறார் அமரராகிவிட்ட பாடகர். சினிமாவில் அவ்வளவுதான் செய்யமுடியும். இவரது டாக்டர் மகன் இன்றும் டிசெம்பர் சீசனில் தமிழ் பாடல்களை முன்னிறுத்தி ஒரு 15 கச்சேரிகளாவது செய்கிறார். நிரவலோடு. கேட்டுப்பாருங்கள்.

நிரவலை இன்னமும் சற்று டெக்னிகலாய் விளக்கிவிட்டு உதாரணங்கள் தருவோம். மீண்டும் சங்கதியின் விளக்கப்படத்தில் இருந்து தொடங்குவோம்.

rtp-sangathi-02

இந்த படத்தில் நின்னுக்கோரி என்று தொடங்கும் வர்ணத்தின் முதல் வார்த்தையை மட்டும் சங்கதிகள் வைத்து பாடுவதில், மோஹன ராகத்தின் ஸ்வரங்களிலேயே வேறு வேறு தினுசுகளாக ஸ்வரக்கோர்வைகள் வைத்துப் பாடுவது என்பதைக் கண்டோம் (படத்தில் gray நிற கோடுகளில் வழியாக பாடினால் ஒரிஜினல் மெலடி; majentha நிற கோடு வழியாக பாடுவது முதல் சங்கதி).

பாட்டின் பல்லவியை இவ்வாறு சங்கதிகள் வைத்துப் பாடுகையில், பல்லவி ஒரு தாளத்தில், ஒரு ஆவர்த்தத்தில் அமைந்திருந்தால், சங்கதிகள் போடுகையிலும் அதே ஒரு ஆவர்த்தத்திற்குள் வருமாறு பல்லவியை அமைத்து பாடவேண்டும். உதாரணமாக, மேலே குறிப்பிட்டுள்ள வர்ணம் இவ்வாறு உள்ளது.

நின்னுக் கோரியுனா நுரா நிகிலலோக நாயகா

நன்னுபாலிம்ப ஸமயமுரா நாமிதி க்ருபாஜூடரா

ஸன்னுத்தாங்க ஸ்ரீநிவாஸ

இதில் நின்னுக்கோரியுனா நுரா எனும் பல்லவி (முதல்) வரி ஆதிதாளத்தில் ஒரு ஆவர்த்தத்திற்கு அமைந்திருக்கிறது. இதற்கு ஸ்வரக்கோர்வைகளாக சங்கதிகள் அமைக்கையிலும் மீண்டும் ஒரே ஆவர்த்தத்திற்குள் பாடவேண்டும். பல சங்கதிகள் இருக்கின்றன என்றால், பல முறை ஒரு ஆவர்த்தன அவகாசத்தில் அமைந்த பல்லவி வரிகளாக பாடிக்கொண்டே செல்லவேண்டும்.

நிரவல் கட்டுமானம் சற்று மாறுபடும்.

சங்கதிகள் போல, நிரவலிலும் ஒரு பாடல் வரியை எடுத்துக்கொண்டு ராகஸ்வரங்களைக்கொண்டு பிரஸ்தாபிக்கவேண்டும். அந்த வரி பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று ஏதாகவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு கீர்த்தனையில் நிரவல் வரியை எப்படி தேர்வுசெய்யவேண்டும் என்று விதிகள் இருக்கிறது. பொதுவாக தெய்வப்பெயர்கள் அடங்கிய, அத்தெய்வத்தை, அது உறையும் இடத்தை, தெய்வாம்சங்களை, தெய்வீகத்தை, போற்றும் பொருள் அமைந்த வரிகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது நியதி. நல்லதை, உன்னதத்தை மீண்டும் பாடி இசையால் நிரப்பி விருத்திசெய்து கிளர்ச்சிகொள்வதே நிரவல் நியதி. அமங்கள சொற்களுக்கு இடமில்லை. பலாச்சுளையைத்தான் மேலும் தேனில் முக்கிச் சாப்பிட அனுமதி.

மேலேயுள்ள நின்னுக்கோரி வர்ணத்தில் சங்கதிகளை பல்லவி, அனுபல்லவி மற்றும் சரணம் எதில் வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் நிரவல் செய்யவேண்டுமென்றால் பொதுவாக, சரணமான, ஸன்னுத்தாங்க ஸ்ரீநிவாஸ எனும் வரியை எடுத்துக்கொள்வார்கள். ஸ்ரீநிவாஸ என்பது தெய்வப்பெயர்.

இந்த வரியில் நிரவல் என்றால் படத்திலுள்ளதுபோல் அனுமானிக்கலாம்.

rtp-neraval-01

படத்தில் மேலே ஸன்னுத்தாங்க ஸ்ரீநிவாஸ எனும் வரியை ஒரிஜனலாய் எப்படிப்பாடவேண்டும் என்று (என் மனதிற்கு தோன்றிய சில) ராகஸ்வரங்களில் அமைத்திருக்கிறோம். சரியாக பாடினால், இது தாளத்தில் 1 ஆவர்த்தத்தில் முடிந்துவிடவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். படத்தில் கீழே இந்த வரியை நிரவல் செய்வதென்றால் எப்படி என்று பாருங்கள். அதே பாடல் வரிதான். தாளமும் அதன் காலப்பிரமாணமும் அதேதான். ஆனால் வரியை அதன் வார்த்தைகளை நீட்டி முழக்கி வெட்டி சுருக்கி ராகஸ்வரங்களுக்கேற்ப எப்படிவேண்டுமானாலும் (கேட்பதற்கு இனிமையாக) பாடிக்கொண்டே போகலாம். பல ஆவர்த்தங்களுக்கு. இங்கு நான்கு ஆவர்தங்களுக்கு அமைத்திருக்கிறோம்.

முக்கியமாக, ஒரிஜினல் மெலடி (மேல் படம்) வார்த்தை வரி தொடக்கமும் முடிவும் சரியாக சமத்தில் அமைந்திருந்தால், நிரவல் பல ஆவர்த்தங்களுக்கு செய்தாலும் முடிக்கையில் கரீட்டாய் தாளத்தினுள் ஆவர்த்தம் மிச்சம் வராமல் பொருத்திவிடவேண்டும். அடுத்த ரவுண்டு இதே வரியை பாடுகையில் சமத்தில் இருந்து தொடங்கிக்கொள்வதற்கு ஏதுவாக.

முதல் விடியோவில் சீர்காழி கோவிந்தராஜன் நிரவல் பாடுவதை மீண்டும் கேட்டுப்பாருங்கள்.

நிரவல் படத்தையும், முன்னர் கொடுத்துள்ள சங்கதி படத்தையும் ஒப்பிடுங்கள். சங்கதி என்பது ஒரிஜினல் பாடல் வரி எவ்வளவு ஆவர்த்தத்தில் அமைக்கப்பட்டுள்ளதோ அதே ஆவர்த்தத்தில்தான் அமையும். நிரவல் அதே வரியை எவ்வளவு ஆவர்த்தத்திற்கு வேண்டுமானாலும் இழுத்து, விஸ்தரித்து நிரப்பலாம். முடிக்கையில் சரியாக தாள ஆவர்த்தத்தினுள், எடுப்பு பிசகாமல் முடிக்கவேண்டும்.

சங்கதி நிரவல் இரண்டுமே கீர்த்தனையை, பல்லவியை, பாடல் வரிகளை மெருகூட்டுவதற்கான அழகியல் சமாச்சாரம்தான். சங்கதி படைப்பாளியின் படைப்பூக்கம். பல சங்கதிகள் வைக்கலாம். ஆனால் பாடகரின் படைப்பூக்கத்திற்கு பெரிதாக இடமில்லை. நிரவல் மொத்தமும் பாடகரின் படைப்பூக்கம் சார்ந்தது. பாடகருக்கு வித்தை எவ்வளவு பரிமளிக்கிறதோ, அந்த ராகத்தில் சம்பத்து எவ்வளவோ அவ்வளவு செய்து நிரவலாம்.

ஆனால் கச்சேரியின் முதல் உருப்படியாகப் பாடப்படும் வர்ணத்தில், அரிதாகத்தான் நிரவல் செய்கிறார்கள். தொடக்கப் பாடலிலேயே அனைத்து கர்நாடக இசை அங்கங்களையும் ஒருசேர செய்யவேண்டாம் என்பதாலோ என்னவோ. முதல் சீனிலேயே மொத்த கதையையும் சொல்லிவிடக்கூடாது இல்லையா.

அதற்காக தமிழ் சினிமா போல எந்த சீனிலேயுமே கதையை சொல்லாமல் இருக்கக்கூடாது. அட்லீஸ்ட் படம் முடிவதற்குள் சொல்லிவிடவேண்டும். ஏனெனில் சில வித்வான்கள் தங்கள் கச்சேரி வாழ்க்கையயே நிரவலை தவிர்த்து ஒப்பேற்றியிருக்கிறார்கள்.

*****

நிரவல் என்பதே இசை வைத்து நிரப்புதல் என்கையில் புரியவேண்டியது, ஒரிஜினல் பாடல் வரிகள் முதலில் அதற்கேற்றவாறு தாளத்தினுள் நிறைய அவகாசங்களுடன் சுருக்கமாக பொருந்தியிருக்கவேண்டும். இடைவெளிகள் இருந்தால்தானே நிரப்பமுடியும். பல்லவி உருவாக்குகையில் இதைமனதில்கொண்டு நிரவல் செய்வதற்கு தகுந்தவாறு வரிகளை  வார்த்தைகளுக்கிடையே வேண்டிய அவகாசங்கள், அருதிகள் வைக்க முடியுமாறு அமைக்கவேண்டும்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி வார்த்தைகளை போட்டு தாள நேரம் மொத்தத்திற்கும் அடைத்து அந்தண்டை இந்தண்டை இசைவைத்து இழுத்தாலும் இசைந்துகொடுக்காமல் பல்லவி அமைத்தால் அதற்கு யதி பல்லவி என்று பெயர். பெரிதாக நிரவல் செய்யமுடியாது. பல்லவி வாக்யத்தை பாடிவிட்டு முடித்துகொள்ளவேண்டியதுதான். கணக்கு காட்ட முடியாது. பல்லவி பாடிவிட்டேன் என்று வேண்டுமானால் கணக்கு காட்டலாம்.

குறையாய் தெரியவேண்டிய இது இன்று சில மேடையஸ்தர்களுக்கு நிரை. சுருக்க பல்லவி பாடிமுடித்துவிடுவார்கள்.

தெய்வப்பெயர்கள் அடுத்து தெய்வம் உறையும் இடத்தை போற்றும் வரிகளையும் நிரவலுக்கு எடுத்துக்கொள்ளலாம். பூலோகவைகுண்டமிதியினி என்பது ஒரு பாப்புலர் நிரவல் வரி. ஓ ரங்க ஸாயி என்று தொடங்கும் காம்போதியில் அமைந்த கீர்த்தனையில் அடிக்கடி எடுத்துக்கொள்ளப்படும் நிரவல் வரி. பூலோக வைகுண்டத்தின் (எந்த ஊர் என்று தெரியும்) மகத்துவமும் தெய்வீகமும் எப்படி இருக்கும் என்பதை இசையால் விஸ்தரித்து, வார்த்தைகளினூடே காம்போதிக் கூழை அச்சில் இட்டு இட்டு நிரப்பி, தாள ப்ரமாணங்கள் குலையாமல், பாடகர்கள் பலதினுசுகளில் கச்சேரியில் கூழ்வடாமாக பிழிந்து, மொத்தமாக சாஹித்தியமாகவும் இல்லாமல், ஸ்வரக்கோர்வைகளாகவும் இல்லாமல் அரைப்பதமாக காய்ந்த நிலையில் துணியிலிருந்து உறித்து ரசிகர்களுக்கு கற்பனைசெய்ய ஊட்டுவார்கள். தேர்ந்த நிரவல் காரத்தில், கேட்பதற்கு ஜிவ்வென்று இருக்கும்.

அதேபோல கண்ணுலார ஸேவின்சி என்பது மற்றொரு பாப்புலர் வரி. தியாகையரின் எந்தநி நே வர்னெய்ந்துனு (சபரி) என்று தொடங்கும் முகாரி ராகத்தில் அமைந்த கீர்த்தனையின் நிரவல் வரி. பாடல் தெய்வாம்சமான ராமலக்‌ஷ்மன ர்களை நேரில் கண்டு அவர்களுக்கு உணவளித்து மோக்‌ஷத்திற்கு சென்ற சபரியின் பாக்யத்தை வியக்கிறது. நிரவல் வரி தெய்வப்பெயர்களை விஸ்தரிக்காமல், சபரி பார்த்துப்பார்த்து உவகித்து கண்கள்கொள்ளாமல் ராமரை சேவிக்கும் பாக்யத்தை, அந்த உன்னத நிலையை இசையால் நிரப்பி விஸ்தரிக்கிறது. இதில் முசிறி சுப்பிரமண்ய ஐயரின் நிரவல் பிரசித்தி.

இங்கு ஒரு விமர்சனக்கருத்தை குறிப்பிடவேண்டும். பாடலோ சபரியின் பாக்யத்தை வியப்பது. நிரவல் வரியும் அதே மாதிரி. ஆனால், முகாரி ராகம் என்பதற்காக பாடுகையில் வாயைக்கோனியபடி கண்ணுலாஆஆஆஆஆற… என்று மேடையில் அலறி அழக்கூடாது. சிரிச்சா ஸித்தார் அழுதால் ஷெனாய் என்பது எப்படி ஒரு திரையிசை, பரப்பிசை, சௌகர்யத்திரிபோ, அதேபோல்தான் முகாரி ராகம் சோகத்தைச்சொல்வதற்கு, அழுவதற்கு மட்டும் எனும் புரிதலும். தெய்வத்தை நேரில்கண்டு மோக்‌ஷத்திற்கு போகும் உன்னத களிப்பான நிலையில் சபரியை விவரிக்கப் பாடுகையில், முகாரியில் சோகரஸத்தை பிழிந்து ரசிகர்களை அழவைக்க எத்தனிக்கக்கூடாது. பொருள் தெளிந்த ரசிகர்கள் மேடையில் இப்படி தத்துபித்தாகச் செய்வதினால்தான் (தியாகையருக்காகவும், கர்நாடக இசைக்காகவும்) அழுவார்கள்.

*****

நிரவல் செய்ய லயத்திலும் தாளத்திலும் நல்ல தேர்ச்சி வேண்டும். நிரவல் அங்கம் மூலமாக கச்சேரியில் விறுவிறுப்பு ஏற்படுத்தமுடியும். ஸ்ரீசுப்ரமண்யாய நமோஸ்தே யின் வாசவாதி யில் தொடங்கும் அரியக்குடியின் நிரவல் ஃபேமஸ். ராம்நாட் கிருஷ்னன் இன்னொரு நிரவல் விற்பன்னர். தற்போது பாடுபவர்களில் டி.எம்.கிருஷ்ணாவின் நிரவல் ஒரு க்ளைமாக்ஸ் வரை சென்று தூங்குபவர்களையெல்லாம் அதட்டி எழுப்பி உட்காரவைக்கிறது.

கச்சேரி சர்க்யூட்டில் நிரவல் சூரிகள் சூரர்கள் இருக்கிறார்கள். தொடவே முடியாத நிரவல்களை செய்து அசத்தியிருக்கிறார் எம்.எஸ்.சுப்புலக்‌ஷ்மி. ஒரு சாம்பிள் இங்கு தருகிறேன். யாரும் பாடவே தயங்கும் புஷ்பலதிகா ராகத்தில் அமைந்த இகநைன என்று தொடங்கும் கீர்த்தனை.

இந்த ராகத்தில் இவர் நிரவலே செய்கிறார்.

http://www.youtube.com/watch?v=CvMCILupjhQ

ராகம் தானம் பல்லவி உருப்பிடியில், பல்லவி வரி(களு)க்கு நிரவல் பாடுகையில், தாளப்பிரதானமாய் பாடிக்கொண்டே இருந்தால் போர் அடித்துவிடும். தாளமே தெரியாதவர்களும் பல்லவியை பாடுகையில் கேட்பதற்கு போரடிக்காமல் இருக்வேண்டும். மூன்றுவிதமாய் நிரவல் காட்டமுடியும். எம்.எஸ்.சுப்புலட்சுமி செய்துள்ளார்.

1. மெதுவான காலப்பிரமாணத்தில், கீழ்காலம் நிரவல் பாடுகையில் ப்ருகாக்கள் அதிகம் வரலாம். உருட்டல்கள். (நிறைய ராக ஆலாபனை, மெலடி அங்கங்கள் சேர்க்கமுடியும்) 2. அடுத்த வகையாக நிரவலை வர்ணம் மாதிரி இழுத்து இழுத்து பாடுவது (கொஞ்சமாய் தாள, லய விஷயங்கள் அதிகரிக்கும்; ராக அனுபவம் குறையும்) 3. மூன்றாவது வகையாக மெலடி மறைந்து, தாள தட்டுகளுக்கு ஏற்ப வரிகளும் உடைக்கப்பட்டு நிரவலில் மொத்தமாக ரிதம் முக்கியத்துவம் பெறும். சவுக்க காலத்திலிருந்து புறப்பட்டு துரித காலத்தில், க்ளைமாக்ஸ் ஸ்பீடில் உருட்டி, மலையேற்றி, வாய்ப்பாட்டும் வயலினும் போட்டிபோட்டு வாசித்து உச்சத்திற்கு ஏற்றி முடிப்பது.

***

நம்ம உதாரண ராகமாலிகை ராட்டைப்பல்லவிக்கு வருவோம். பல்லவி ஒரு ராகத்தில் அமைந்திருக்கிறதென்றால் அந்த ராகத்தை மட்டும் விஸ்தாரம் செய்து காட்டினால் போதும். பல்லவியின் வரியையும் எங்குவேண்டுமானாலும் தொடங்கி ஜாலியாக அப்படி பல ஆவர்த்தங்கள் நிரவல் செய்துவிட்டு பல்லவியை (சம எடுப்பாய் இருக்கையில்) தாளம் ஒரு சுற்றின் தொடக்கத்தில் வந்து முடித்துகொள்லலாம்.

ஆனால் ராகமாலிகை பல்லவியில் நிரவல் செய்வதற்கு எந்த ராகத்தில் நிரவலோ அந்த ராகத்தில் பாடப்படும் சாஹித்திய பகுதியில் தொடங்கவேண்டும். பல ஆவர்த்தங்கள் மொத்த பல்லவியையும் இந்த ராகத்தில் விஸ்தரித்து பாடி, தாளத்தின் ஒரு ஆவர்த்தத்தில் பல்லவியின் அந்த ராகத்தில் சாஹித்யம் அமைந்த இடத்திலேயே கொண்டுவந்து முடிக்கவேண்டும்.

உதாரணமாய், நாம் ஏற்கனவே உலலாகட்டிக்கு ஆதி தாளத்தில் வகுத்துக்கொண்ட ராக தான பல்லவியே, கொண்டுவா பல்வலியே என்ற பல்லவி, இப்போது இரண்டு ராகத்தில் அமைந்திருக்கிறது என்போம். முதல் ராகத்தில் ஆதி தாளத்தில் முதல் நான்கு அக்‌ஷரங்களுக்கு ராக தான பல்லவியே வார்த்தைகளையும், இரண்டாவது ராகத்தில் மிச்ச நான்கு அக்‌ஷரங்களுக்கு கொண்டுவா பல்வலியே வையும் பாடுவதுபோல் அமைகிறது என்போம்.

நிரவல் செய்கையில் முதல் ராகத்தில் செய்தால், ஆதி தாளத்தின் தொடக்க தட்டிலிருந்து நிரவலை தொடங்க வேண்டும். ராக தான பல்லவியே என்று பாடியபடி. பிறகு மொத்த பல்லவியையும் இதே ராகத்தில் பல சுற்றுக்கள் விஸ்தரித்து பாடி முடிக்கையில் ஆதி தாளம் ஒரு சுற்று முடியும் இடத்தில் கொண்டுவந்து முடிக்கவேண்டும்.

இரண்டாவது ராகத்தில் நிரவல் செய்கையில், ஆதி தாளத்தின் ஒரு சுற்றில் நான்கு அக்‌ஷரங்கள் விட்டு, முதல் லகு தொடங்குகையில் கொண்டுவா பல்வலியே என்று பாடத்தொடங்கி, பல்லவி மொத்தத்தையும் இந்த ராகத்திலேயே பல சுற்றுக்கள் பாடி, முடிக்கையில் மீண்டும் சமத்தில் இருந்து நான்கு அக்‌ஷரங்கள் விட்டு லகுவின் தொடக்கத்தில் முடிக்கவேண்டும்.

இவையெல்லாம் பாட்டும் தாளமும் சம எடுப்பாய் இருக்கையில். இப்படியில்லையேல் செம கடுப்பாய் இருக்கும்.

[மேலே லகு த்ருதம் சம எடுப்பு ஆதி தாளம், ஆவர்த்தம், களை, சவுக்ககாலம், அக்‌ஷரம் போன்ற டெக்னிக்கல் வார்த்தைகளுக்கு நான்காம் பாகத்தில் விளக்கங்கள் கொடுத்திருக்கிறோம்.]

இப்போது நம் நான்கு ராக, இரட்டை ஆவர்த்த, இரண்டு களை ஆதி தாள ராட்டைப் பல்லவியை யோசித்துப்பாருங்கள். சமத்திலேயே தொடங்கவில்லை. முதல் சங்கராபரண ராகமே, சங்கராபரணனை என்று முக்கால் இடம் தள்ளித் தொடங்குகிறது (இந்தப்பல்லவியின் அமைப்பை மூன்றாம் பாகத்தில் விளக்கியுள்ளோம்). எந்த தனி ராகமும் சமத்தில் தொடங்கும் சாஹித்தியம் பெற்றிருக்கவில்லை. சங்கராபரணணை என்று நிரவல் தொடங்கினால் எது ஏற்கனவே குறிப்பிட்டப்படி சமத்திற்கு முக்கால் தள்ளி தொடங்கும். இங்கு தொடங்கி, பல ஆவர்த்தனங்கள் நிரவல் செய்தபின், அங்கே வந்து, அதாவது, சமத்திற்கு முக்கால் இடம் தள்ளி, முடிக்கவேண்டும். அழைத்தோடி, வாடி கல்யாணி, தர்பாருக்கு என்று எந்த சாஹித்திய பகுதியும் அந்த ராகத்தினை நிரவல் செய்வதற்கு சமத்திலோ, ஏன், தாளத்தின் எந்த அக்‌ஷர தட்டிலோ (அதாவது, விரல் எண்ணிக்கை இடையிலேயே அனைத்து ராக சாஹித்யமும் தொடங்கும்) தொடங்கமுடியாதவை.

இதை லயத்தில் கைதேர்ந்தவர்கள் ஜிண்டாமிர்தம் செய்வார்கள். அரியக்குடியாரே அமர்க்களமாய் செய்திருப்பார். மேலே கொடுத்துள்ள பல்லவி அடங்கிய அவரின் கச்சேரி கமர்ஷியலாக கிடைக்கும். கேட்டுப்பாருங்கள். இங்கு யூடியூபில் இருக்கும் சாம்பிளைத் தருகிறேன். நிரவல் பகுதியில் முடிந்தால் ஆதி தாளம் போட்டுப்பார்த்து கேளுங்கள். நான் கூறுவது மேலும் விளங்கும்.

http://www.youtube.com/watch?v=lT9nD9C1gQc

இவ்வகை நிரவலுக்கு பிறகு, ஸ்வரகல்பனை செய்வார்கள். ஸ்வரங்களாக கற்பனைத்திறனை வெளிப்படுத்துவது. சதுர் ராக பல்லவியில் ஒவ்வொரு ராகத்திலும் செய்வார்கள். இதற்கு பிறகு இன்னொரு பிரமிக்கும் கணக்குவழக்கு இருக்கிறது. அனுலோமம், பிரதிலோமம் எனும் வகைகள். தாளத்தையும் பல்லவியையும் பல வேகங்களில் ஒருங்கிணைத்து காட்டுவது. பொறுப்பாய் ஒழுங்காய் செய்யவேண்டும் என்றால் இதற்கே 20 முதல் 30 நிமிடங்கள் பிடிக்கும்.

*****

ராகம் தானம் பல்லவி – பாகம் 6

Standard

சென்ற பாகத்தின் இறுதியில் மேற்கத்திய செவ்வியல் இசையில் முக்கியமான அங்கமாய் இடம்பேறாத, கர்நாடக சங்கீதத்தில் முக்கியமான கற்பனைத்திறன் வெளிப்பாடாய் தோன்றும் அங்கம் நிரவல் என்றோம். ஆனால் அந்த இசையில்தான் இதைசெய்யவேண்டும் என்று கட்டாயமில்லை. நிரவல் பற்றி விளக்கும் முன் அதன் முன்கதைசுருக்கமான சங்கதி என்பதின் சங்கதியை ஓரளவு இங்கு சொல்வோம். சங்கதி என்னவென்று விளக்குவதற்கு முன் இப்பாடலை முழுவதும் கேளுங்கள்.

மன்னவன் வந்தானடி.

http://www.youtube.com/watch?v=5-y-J9Pabq8

பாடலின் முடியும் தருணங்களில் பல்லவி “மன்னவன் வந்தானடி தோழி” என்பதை பலவிதங்களில் பாடுவதை கவனியுங்கள். ராகம் அதேதான். பாடல் வார்த்தைகளும் அதேதான். தாளமும், தாள ஆவர்த்தமும், தாள நடையும், களையும், காலப்பிரமாணமும் மாறவில்லை. மாறாது. பாட்டின் மெலடி என்கிற ட்யூன் மட்டும் ராகத்திற்குள், ராகத்தை வெளிக்கொணருமாறு சற்று அப்படி இப்படி போய் வரும். மீண்டும் மீண்டும் பாட்டின் ஒரே வரியை (பல்லவியை) பாடுகையில், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சங்கதியாக பாடுகிறார் என்று பொருள்.

இசை விடுத்து, மனப்பிம்பத்திற்காக உதாரணம் வேண்டுமென்றால், தாத்தா கடையில் வாங்கும் (அந்தகாலத்தில்! ஹும்…) ஒரு கலிடாஸ்கோப்பிலுள்ள வளையல் துண்டுகளும், சைஸ்களும், அதன் நிறங்களும் அதேதான். ஆனால் ஒவ்வொரு குலுக்கலிலும் ஒவ்வொரு பாட்டர்ன் தெரியுமே. அதுதான் சங்கதி.

(இதே உதாரணத்தை வைத்து ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் என்று வாணி ஜெயராமுக்கு அடுத்தபடி வியக்கலாம். சற்று குழப்பிவிடும். பிறகு பார்ப்போம்)

இன்னமும் விரிவாக சங்கதியை விளக்க, ஸ்கேல், ராகம், என்பவைகளையும் சற்று விளக்குவோம். அருகில் உள்ள படம் உதவும்.

rtp-sangathi-02

படத்தில் நாம் கேள்விப்பட்டுள்ள (இல்லையென்றால் பரவாயில்லை) நின்னுக்கோரி என்று தொடங்கும் வர்ணத்தின் முதல் அடியின் (பல்லவி போல) ஸ்வரங்களை கொடுத்துள்ளேன்.

இந்த வர்ணம் மோஹனம் என்கிற ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், இவ்வர்ணத்தின் பாடல் வரிகள் மொத்தமும் மோஹன ராக ஸ்வரங்களுக்குள் அமைக்கப்பட்டு பாடப்படும். கீழ் ஸா வில் தொடங்கி, ஸ, ரி, க, ப, த, என்று போய், மேல் ஸ்தாயி ஸா வில் முடியும். அதாவது, ஒரு ஸ்தாயியில் (ஆக்டேவினுள்), மோஹன ராகத்திற்கு ஐந்து ஸ்வரங்கள்.

ஸ்வரங்கள் என்றவுடன் புரியாதோ என்று முகம் சுளிக்காதீர்கள். ஜஸ்ட் எந்த சப்தத்தில் (324 ஹெர்ட்ஸ், 486 ஹெர்ட்ஸ் என்பதுபோல்) ஒலி எழுப்பவேண்டும் என்பதற்கான ஒலிக்குறிகள்.

மோஹன ராகத்திற்கான ஸ்வரங்களை படத்தில், ஒவ்வொரு செங்குத்தான கோட்டின்மீதுள்ள ஆறு புள்ளிகள் குறிக்கின்றன. பாட்டின் சொற்களை, ஒரு சந்தத்தில், தானத்தில் (முன்னர் தானம் பாகம் படித்துக்கொள்ளுங்கள்) இந்த ஸ்வரங்கள் குறிக்கும் ஒலியோசைகளில் அமைத்துப் படித்தால், மோஹனம் ஸ்கேலில், கிட்டத்தட்ட மோஹன ராகத்தில், பாடல் ட்யூன் ரெடி. அப்படி அமைத்த பல்லவி வாக்கியத்தைத்தான், லிரிக்ஸுக்கு ஏற்ற ஸ்வரங்களையும் சுட்டிக்காட்டி படமாய் போட்டிருக்கிறோம். நின்னுக்கோரி என்று வார்த்தையை பாடுகையில், க க ரி, ஸ, ஸ, ரி, ரி, என்பதற்கான ஒலி சப்த அளவுகளில் பாடவேண்டும் என்று பொருள்.

இப்படி ஒரு டியூனில் ஒரு மெலடி வரியாக அமைத்த பல்லவியை, படைப்பாளியே இன்னொரு மெலடி வரியாக வடிக்கமுடியும். நின்னுக்கோரியை க, க, ரி, ஸ, ஸ, ரி, ரி, என்று ஒலிக்குறிகளுடன் சொல்லாமல், வேறு மாதிரி ஸ்வரக்கோர்வையாய், ஆனால் மோஹனராகத்திலேயே உள்ள ஸ்வரங்களை வைத்து, வடிவமைக்கமுடியும். படத்தில், கிரே நிறத்தில் உள்ள ஸ்வரக்கோர்வை வளைகோடு ஒரு மெலடி சங்கதி என்றால், மஜெந்தா நிறத்தில் உள்ள ஸ்வரக்கோர்வை வளைகோடு இன்னொரு சங்கதி.

முக்கியமாக மனதில் கொள்ளவேண்டியது, ராகம் அதன் ஸ்வரங்களும் அதேதான். பாடும் வரியின் ஸ்வரக்கோர்வைகள் மட்டும் வேறு வேறு. அதேபோல், வார்தைகள் இன்றி வாயால் ஆ காரம் செய்து ஆலாபனை போல் வார்த்தை இடைவெளிகளை ஒரு ராகத்தில் அல்லது ஸ்வக்கூட்டல்களாக நிரப்பிக்கொண்டே போவது சங்கதியல்ல. வார்த்தை இருக்கவேண்டும். அதை ஒரு ராகத்தில் பாடுகையில் வேறு வேறு மாதிரி பாடவேண்டும்.

இப்படி ஒரு ட்யூனில் சங்கதிகள் பொருத்துவது, அழகியல் சார்ந்த கேள்வியனுபவத்தை, ரசிகானுபவத்தை கூட்டும் அங்கம். ஆங்கிலத்தில் எம்பெலிஷ்மெண்ட். மீண்டும் மேலே வீடியோவில் கேட்ட மன்னவன் வந்தானடி தோழி வரியை யோசித்துப்பாருங்கள்.

தியாகராஜர் காலத்தில்தான் இப்படி மெருகூட்டும் சங்கதி விஷயம் தோன்றியுள்ளதாய் ரங்கராமானுஜ அய்யங்கார் தன் இசைஉரையில் அபிப்பிராயப்படுகிறார். அதற்கேற்றவாறு தியாகரஜாரின் கீர்த்தனைகள் சங்கதிகளுக்கு பெயர்போனவை.

ஒரு பாடலில் எவ்வளவு சங்கதி வரலாம்? கணக்கெல்லாம் கிடையாது. உதாரணமாய் தியாகராஜரின் மரி மரி நின்னே என்ற காம்போஜி ராக கீர்த்தனையில் முதல் பல்லவியை மட்டும் 22 சங்கதிகளில் பாடமுடியும்.

சங்கதிகளுக்கு பிரசித்தி பெற்ற கீர்த்தனை, சக்கனி (த்ஸக்கனி என்று எழுதவேண்டும்) ராஜ என்று தொடங்கும் தியாகராஜரின் கரஹரபிரியா ராக கீர்த்தனை.

மதுரை மணி அய்யர் பாடுவதை கேளுங்கள்.

http://www.youtube.com/watch?v=7CsU7X5g35U

முதலில் எவ்வளவு முறை சக்கனிராஜமார்கமுலுண்டக என்று சொல்கிறார் என்று எண்ணிக்கொள்ளுங்கள். பிறகு மீண்டும் ஓட்டி, முதல் முறை சொல்வதற்கும் இரண்டாம் முறை சொல்வதற்கும் சற்றே வித்தியாசம் எங்கு வருகிறது என்று கவனியுங்கள். இப்படிச் செய்ய கரஹரபிரியா ராகமெல்லாம் தெரிந்திருக்கவே அவசியமில்லை. ஆண்டவன் கொடுத்த காது, கேட்கும் நிலைமயிலும், மனதில் அவசரமற்ற அமைதியும், பொறுமையும், ஆர்வமும் போதும்.

பேச்சுமொழியில் தற்குறியாய் எழுதும் என் குறை எழுத்தையே பொறுமையாக படித்து அதன் மூலம் இசையை அணுகமுடியும் என்று நம்பிவரும் உங்கள் அனைவராலும் இதுவும் நிச்சயம் முடியும்.

கச்சேரியில் கனகனவென மிருதங்கத்துடன், கடம் கஞ்சீரா என்று கூடவே வாசிக்க, வயலின் நிழலாய் தொடர, தேர்ந்த பாடகர் அனைத்து சங்கதிகளையும் தொட்டு சக்கனிராஜமார்கமுலுண்டக (அதுதான் முதல் வரி) என்று பாடிமுடிக்கையிலேயே, மனது பரவசமாகி வேறு எந்த ஸந்துலவிலும் சஞ்சாரம் செய்ய மறுத்து தூரனேல விலகிவிடும்.

யானைகள் பீடுநடையிடும் ராஜபாட்டை இருக்கையில் சாக்கடைச்சந்தில் வலிய எவனாவது புகுவானா சார் – இது மதுரமணி பாடும் பல்லவியின் பொருள்.

தியாகராஜரின் கீர்த்தனைகளில் மற்றொரு உதாரணம் நா ஜீவாதார என்று தொடங்கும் பிலஹரி ராக கீர்த்தனையில் அநேக சங்கதிகளுண்டு. விளையாட்டில்லை. நல்ல குரல் தேர்ச்சியும் அப்பியாசமும் இல்லையெனின் படைப்பாளி படைத்துள்ள சங்கதிகளை பாடகரால் வெளிக்கொணரமுடியாது. சமீபத்தில் (2008 என்று நினைக்கிறேன்) டி.எம்.க்ருஷ்ணா மியூசிக் அகதெமியில் இப்பாடலை திறம்பட பாடினார்.அதிலிருந்து இந்தப்பல்லவியை சங்கதிகளுடன் பாடும் இடத்தைமட்டும் ஒலிக்கோப்பாக கொடுத்துள்ளேன், கேளுங்கள்.

நா ஜீவாதார பல்லவி ஒலிக்கோப்பு

பல்லவியை (கீர்த்தனை முதல் வரியை) தியாகராஜர் அமைத்துள்ள சங்கதிகளுடன் பாடிமுடிக்கவே ஐந்து நிமிடம் பிடிக்கும்.

இது படைப்பாளியின் படைப்பூக்கம். கச்சேரியில் இவற்றை பாடிவிட்டு, தொடர்ந்து, பாடகரும் தன் படைப்பூக்கத்திறனுக்கேற்றவாறு (அவரின் குருவிடம் கற்றோ, அவராகவே ஸ்பாட்டிலேயோ) பல சங்கதிகள் வழியாக பல்லவியை மெருகேற்றலாம்.

“என்னய்யா அது ஒர்ரே வரியவே திருப்பித்திருப்பி பாடிகிட்டேருகரானுவ, எவ(ன்)ய்யா கேப்பான் இத்த,எதுக்கு இப்படி உருவேத்தி நமக்கு வெறியேத்துரானுங்க…” என்கிற ரீதியில் என்னிடம் அவ்வப்போது நண்பர்கள் குறைபட்டுள்ளனர். சங்கதியை படித்து, அறிந்து, காதைதீட்டி மீண்டும் கேட்க முயற்சி செய்தால், நாகூர் ஹனீஃபாவின் வார்தைகளில் சொன்னால்,

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள், அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.

யோவ், என்னவோ பல்லவின்னு ஆரம்பிச்சே. எங்கெல்லாமோ சுத்திசுத்தியடிக்கறயே என்றால், அதையும் தொட்டுகொள்வோம்.

நம்ம அரியக்குடியாரின் சதுர்ராகமலிகை பல்லவியில் இப்போது சங்கதி எப்படி வருகிறது என்று கேட்டுப்பாருங்கள். நான்கு ராகங்களிலும் வரும் (பல்லவியின் பெருமைக்கும் பிரித்தாளுமைக்கும் முன் பாகங்களை பார்த்துக்கொள்ளுங்கள்).

அரியக்குடி ஒலிக்கோப்பு.

அவ்வளவுதான் சார் சங்கதி மேட்டர்.

இப்போது சார்ந்த சில தெளிவுரைகள்.

*****

ஓகே சார், சங்கதி படைப்பாளிகளின் படைப்பூக்க கருவி, புரியுது. இருபது சங்கதியெல்லாம் வைத்து டியூன் ரெடி. ஆனால் கேட்பவர்க்கு இந்த ட்யூன் புரிந்து, பிடிக்கவேண்டுமே என்றால், அது தனி விஷயம்.

துரத்ருஷ்டவசமாக, இசையமைப்பாளர்கள், நான் படைப்பதைத்தான் படைப்பேன், உனக்கு புரியவில்லை, பிடிக்கவில்லையென்றால் உன் அறிவை விருத்திசெய்துகொண்டுவா என்று இப்போதிருக்கும் ஒருசில இலக்கியவாதிகள் போல் திட்டவட்டமாய் ரசிகர்களையே சாடமுடிவதில்லை.

ஒரு சீசனில் கச்சேரிகளில் வெகுஜன ரசிகர்களுக்கு புரியாமல் நிறைய பாடிவிட்டாலோ, இசையமைத்த இரண்டு படம் ஊத்திக்கொண்டாலோ, அம்புட்டுதேங். காரியரெல்லாம் வெறும் டிபன் காரியராகி, வூட்டுக்கு போகவேண்டியுள்ளது. போதாக்குறைக்கு அவர்களது இசை அறிவையே உணர்ச்சிக்குவியலான படிமத்தில் மட்டும் நின்று சப்ஜாடாய் தூக்கியடிக்கும் பலர் வாயில் வேறு புகுந்து புறப்படவேண்டியிருகிறது.

இசையை பொறுத்தவரையில் மட்டும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கருதி (இலக்கியத்திற்கு இப்படியில்லையாம். அங்கு மக்கள் அறிவிலிகளாம்), தொடருவோம்.

சங்கதி கர்நாடக இசையில் மட்டும்தானா? இல்லை, ஹிந்துஸ்தானியிலும் முக்கியமான அழகியல் அங்கம். மேற்கத்திய செவ்வியலிலும் சீஃப் வயலினிஸ்ட் ஸ்பாட் இம்ருவைசேஷனாய் காட்டக்கூடிய அங்கமே. இந்த சங்கதி மேட்டர் பொதுவாக இசையில், பாட்டின் நளினத்தை, அழகியலை ஏற்றிச்சொல்லி, கேள்வியனுபவத்தில் கிளர்ச்சி கூட்டும் என்பதால், நம் திரையிசையிலும் விரவியுள்ள அங்கம். மன்னவன் வந்தானடி பார்த்தீர்களல்லவா? என்னம்மா கண்ணு சௌக்கியமாவையும் ஏழு விதமாய் பாடுகையில் சங்கதிகள்தான் போடுகிறார்கள்.

அப்ப கர்நாடக இசை வர்ணங்களில் சங்கதி வருமா? கர்நாடக இசையில், கீர்த்தனைகளில்தான் அதிகம் சங்கதி வரும். கீர்த்தனை பல்லவி, அனுபல்லவி, சரணம் எதிலும் சங்கதிகள் அ மைக்கலாம். வர்ணத்தில் வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலே குறிப்பிட்ட நின்னுக்கோரி வர்ணத்தில் சில சங்கதிகளை புகுத்த முடியும். கச்சேரிகளில் செய்வார்கள்.

இன்னொரு இசை விஷயத்தையும் விலக்கிவிடுகிறேன். பாடகருக்கு குரல் போகிறது என்றால் என்ன?

ஒரு ராகத்தில் பாடகர் பாட்டை பாடுகிறார் என்றால் பாடல் வார்த்தைகளை ராகத்தின் ஸ்வரங்களுக்கான ஒலியோசைகளுக்குள் புகுத்திப்பாடுகிறார் என்று, மேலே மோஹன ராக நின்னுக்கோரி சங்கதி விள க்கப்படத்தில் பார்க்கையில் புரியும். பாடகருக்கு குரல் போகிறது என்றால், ஒரு ராகத்தின் ஸ்வரங்களில் நிலையாக நிற்காமல் அங்குமிங்கும் அலைகிறது என்று பொருள். அதாவது மோஹன ராகம் பாடுகையில் மேலே படத்தில் புள்ளிகளின் ஸ்வரங்களின் ஒலியோசையை விட்டு விலகி, வேறு ஸ்வரங்களில் (புள்ளிகளுக்கு இடையில், வேறு புள்ளிகளிலான ஸ்வரங்களில்) பாடுகிறார். மோஹன ராகத்தில் இல்லாத வேறு புள்ளிகள், ஸ்வரங்கள் என்பதால், அந்நியஸ்வரங்கள் வருகிறது என்று பொருள்.

பெரிய பாட்டில், இப்படி ஒரே ஒரு முறை ஒரு ஸ்வரத்தில் மட்டும் நடக்கலாம். கேட்பவற்கு சட்டென்று தெரியாது. மீண்டும் மீண்டும் நடந்தால், மரபிசைபற்றியெல்லாம் அறியத்தேவையில்லாத என்னைப்போன்ற சாதாரண ரசிகரே, கேள்வியறிவிலேயே கண்டுகொண்டுவிடுவார்.

காலேஜில் கல்சுரல் நிகழ்ச்சிகளில் நாமும் எஸ்.பி.பி.தான் என்று மேடையில் ”எங்கேயும் எப்போதும்” என்று யுவதிகள் கிறங்க மைக்கையெல்லாம் கையில் தூக்கிபோட்டு பிடித்து சகாக்கள் பாடுகையிலும், குரல் ஒத்துழைக்காமல் சற்றே அந்நிய ஸ்வரங்கள் ஒலிக்குமாறு மாற்றிப்பாடினாலும், ”டேய், மேல போரச்ச வாய்ஸ் நிக்கல, மாமு சொதப்பிட்டாண்டா” என்று மாட்டிக்கொள்வரே, அதுதான் குரல் போவது. கர்நாடக இசை கச்சேரியில், கேடுக்கேட்டே காதுதேய்ந்த தேர்ந்த தாத்தா ரசிகர்கள் ஒருமுறை ஒரு ஸ்வரத்தில் சொதப்பினாலும் ”ஸ்ருதியே நிக்கல” என்று கண்டுபிடித்து உதட்டைபிதுக்கிவிடுவர்.

மொத்தத்தில் ஸ்ருதி விலகுதல், குரல் போதல், என்பது அகவயமான உணர்ச்சிக்குவியல் படிமத்தின் மதிப்பீடு இல்லை. எனக்கு அப்படித் தோன்றுகிறது என்று என் கருத்தாய் அதை போகிறபோக்கில் சொல்வதற்கு.

மோஹனத்தின் ஸ்வரங்கள் ஸ வென்றால் ஒரு கட்டை ஸ்ருதியில் 240 ஹெர்ட்ஸ், ரி என்றால் 270 ஹெர்ட்ஸ் என்று (உதாரணத்திற்காக எண்களை கொடுக்கிறேன். சரியான ஃப்ரீக்வென்ஸி தேவையெனில் சொல்லமுடியும்) திட்டவட்டமாய் அறிவியல்ரீதியாய் நிர்ணயிக்கமுடிந்த இடைவெளிகளில் ஒலிக்கும் ஸ்வரக்கூட்டு. புறவயமான விஷயம். இ ந்தச் ஸ்வரங்களை பாடவேண்டும் என்று பாட்டில் இருக்கையில், இதிலிருந்து விலகி, வேறு மோஹன ராக ஸ்வரங்களையும் விடுத்துப் பாடினால் குரல் போகிறது என்று புறவயமாக, துல்லியமாக, அனைத்து ரசிகர்களும் ஆமோதிக்கும் வகையில் மதிப்பிட முடியும்.

ஆனால், மோஹனராகத்திலேயே ஒரு ஸ்வரத்திற்கு பதிலாய் வேறு ஸ்வரங்களைகொண்டு பாடியபடி சென்றால், பாடகர் வேரியேஷன், ப்ருகாக்கள், கமகங்கள், கார்வைகள் கொடுத்து சங்கதிகள் காண்பித்திருக்கலாமோ என்று முதலில் நம்மை நாமே சரிபார்த்துக்கொள்ளவேண்டும். பல்லவி வார்தைகளுக்கு நடுவில் வாய்திறந்து சொற்களற்ற ஆ காரத்தில் மோஹன ராக ஸ்வரங்களை நிரப்பிக்கொண்டே சென்றாலும் தவறில்லை. ஏனெனில் இப்படியெல்லாம் பாடுகையில் இங்கு ஸ்ருதியும் விலகவில்லை. ராகமும் மாறவில்லை. அதனால் குரலும் போகவில்லை.

மேலுள்ள விளக்கம் உங்களுக்கு உபயோகமாகலாம். உதாரணமாய், ” இன்னாராகிய பாடகர் பாடிய திரையிசையை கேட்டிருக்கிறேன், அவ  ருக்கு குரல் போகுங்க” என்று ஒருவர் சொன்னால், அது உண்மையென்றால் இதுவரை அப்பாடல்களை கேட்டவர்கள் அப்படிச் சொல்லவில்லையே, ஒருவேளை அவர்களனைவருக்கும் காது லேதா, இல்லை இசையின் புறவய அங்கத்தை, அகவயமாய் அள்ளித்தெளிக்கும் குறைசொல்பவரின் இசையறிவு செம்மையடையவில்லையா என்பதை பாகுபடுத்தி நீங்களே உணர்ந்துகொள்லலாம். நீங்களே உங்கள் கேள்திறன், அறிவை வைத்துக் கேட்டுச் சரிபார்த்தும் கொள்ளலாம்.

*****

சரி, சங்கதிகள் பற்றி அறிந்துகொண்டுள்ளதால், இப்போது இசை பற்றி எந்த இலக்கணமும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அவசியமில்லாமல், பாட்டின் மெலடியை பாடகர் பலவிதமாய் பாடுவதை, அதனால் மனதில் ஏற்படும் கிளர்ச்சியை என்னுடன் சேர்ந்து உங்களாலும் ரசித்து அனுபவிக்கமுடியும் இல்லையா?

இப்படியே ஒரு நூறு திரையிசை பாடல்களிலாவது சங்கதிகளை தேடிக் கண்டுகொண்டு ரசித்தீர்களென்றால், பாட்டை அவசரமாய் கேட்டுவிட்டு, அதில் கமகங்கள், ப்ருகாக்கள் கார்வைகள் கலந்து சங்கதிகள் வருவதை கவனிக்க அவகாசமின்றி, பாடகர் குரல் நடுங்குகிறது என்றெல்லாம் என்னைப்போல் பகீரங்கமாய் இசை அறியாமையை பறைசாற்றத்தேவையற்ற ரசிகானுபவத்தை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள்.

கூடவே இந்த பாடலின் சிறு-சங்கதியின் தேர்ச்சி மகாத்மியம் உங்களுக்கே புரியும்.

http://www.youtube.com/watch?v=PedLzIREx1Q

உதாரண மாக, பல்லவியிலேயே, ”கை வண்ணம்” என்று பாடும் இடத்தை கவனியுங்கள். பாடலின் மிச்ச ரசனையை, வார்த்தையில் விளக்கிச்சிதைக்காமல், உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

*****

அடுத்து சங்கதியின் நீட்சியாய், நிரவல். பல்லவி பாடுவதில் முக்கியத்தேவை.

இப்படிச்சொல்லலாம். படைப்பவரின் கற்பனைத்திறன், படைப்பூக்கம், கிரியேடிவிட்டி, சங்கதி. பாடுபவரின் படைப்பூக்கம் நிரவல்.

அடுத்த பாகத்தில்.

*****

ராகம் தானம் பல்லவி – பாகம் 5

Standard

சென்ற நான்காகவது பாகக் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல சதுர்ராகமாலிகை பல்லவி ரிப்பீட்டு.

சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு

சென்ற பாகங்களில் விளக்கியுள்ள சங்கீத வார்த்தைகளை நினைவில் கொண்டு, சென்ற பாகம் தொடக்கத்தில் நீங்கள் என்னை அடிக்க வரும்முன் நான் குறிப்பிட்ட கீழ்வரும் பத்தியை இப்போது மீண்டும் படித்துப்பாருங்கள்.

இந்த ராட்டை பல்லவி சதுஸ்ர ஜாதி திரிபுடை (ஆதி) தாளத்தில், சதுஸ்ர நடையில், இரண்டு ஆவர்த்தத்தில், இரண்டு களை சௌக்கத்தில், அமைக்கப்பட்டு, சமத்தில் இருந்து முக்கால் இடம் தள்ளி அனாகத எடுப்பில் தொடங்குகிறது.

இப்படி எழுதியிருந்தோம், இல்லையா?

பல்லவி கட்டமைப்புபற்றி ஏற்கனவே மூன்றாம் பாகத்தில் விளக்கியுள்ளோம். நான்காம் பாகம் படித்தபிறகு, நிச்சயம் ஆவர்த்தம், ஆதி தாளம், களை, சதுஸ்ர நடை இவையெல்லாம் இப்போது புரியும். என்னை அடித்ததற்காக ஸாரியெல்லாம் வேண்டாம். இட்ஸ் ஓகே. விட்ட இடத்திலிருந்து மேலே செல்வோம்.

அடுத்து, எடுப்பு. இதை புகுசிகு புகுசிகு புகுரயிலே ஓட்டி கோடிகாட்டியிருந்தோம். இப்போது சில உதாரணங்களுடன்.
Continue reading

ராகம் தானம் பல்லவி – பாகம் 4

Standard

ராகம், தானம், பல்லவி வரலாறு சாஹித்யம் செய்முறை என்று இதுவரை ஓரளவு எழுதியுள்ளோம். இங்கு ஒரு சற்று கடினமான பல்லவி அறிமுகப்படுத்துவோம். பல்லவியை இந்த, அடுத்த பாகங்களில் முழுவதும் பிரித்து விளக்குகையில் மேலும் பல விஷயங்களை பகிர்ந்துகொள்ளமுடியும்.

ஏன் இப்படி தடாலடியாக கடினமான பல்லவி என்றால், நமக்கு (எனக்கு) நீச்சல் கத்துகரதுன்னா தொபுகடீர் என்று குதித்து அப்படி இப்படி கையை காலை உதறி, வாய் மூக்கு நிறைய தண்ணீர் குடித்து, புகுந்து புறப்பட்டு, மூச்சு முட்டி, உயிரே போச்சா என்கிற ரீதியில்தான் கற்றுக்கொள்ளமுடியும். இடுப்பில் ரப்பர் ஃப்ளோட் அணிந்துகொண்டு Baby poolலில் பாதம் மட்டும் இரண்டு வாரம் நனைவதில் தொடங்கி. சாரி, எனக்கு அம்முறையில் அப்பியாசமும், நம்பிக்கையும், பொறுமையும், இல்லை. மேலும், எனக்கு என் வாசகர்கள் புத்திசாலிகள் என்றும், கோடிகாட்டினால் சூட்டிகையாக புரிந்துகொள்வார்கள் என்றும் ஸ்திரமான நம்பிக்கை.

இனி நேரடியாக பல்லவி பாடம்.

எச்சரிக்கையாக ஒன்று. நான் பாடம் நடத்துகையில் ஜோக் அடிக்கமாட்டேன். ஆளைத்தான். ரொம்ப கறார். இப்பவே சொல்லிவிட்டேன். பக்கத்தில் 15 செ.மீ. ஸ்கேல் கூட வைத்திருக்கிறேன். முடிந்தால் படிக்கும்வரை கையை கட்டிக்கொள்ளுங்கள். சிரிப்பு வந்தால், கட்டுரைக்கு வெளியே போய் சிரித்துவிட்டு, கனமான இலக்கியம் ஏதையாவது தொட்டு கண்ணில் ஒத்திக்கொண்டுவிட்டு (படிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை), மீண்டும் உள்ளே வரலாமா என்று கேட்டுக்கொண்டு, அனுமதி கிடைத்ததும் படியுங்கள்.

இப்போது முதல் பாகத்தில் தொட்டிருந்த பிரபலமான ஒரு சதுர் ராகமாலிகை பல்லவியை எழுதிக்கொள்வோம்.

சதுர்த்தி, சதுர்தண்டிப்ரகாசிகா, சதுரகராதி, சதுஸ்ரம், என்ற வரிசையில் சதுர் என்றால் நான்கு; நான்கு ராகங்களில் அமைந்த பல்லவி. சிறப்பு, ராகங்களின் பெயர்களையே சாஹித்தியமாக, பாட்டின் வார்த்தைகளாக பொருள்பட அமைந்துள்ள பல்லவி.

சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு

எந்த நான்கு ராகங்களில் இதைப்பாடவேண்டும் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். கேட்டுக்கொண்டே கீழே எழுதியுள்ளதை படியுங்கள்.

இந்த ராட்டை பல்லவி சதுஸ்ர ஜாதி திரிபுடை (ஆதி) தாளத்தில், சதுஸ்ர நடையில், இரண்டு ஆவர்த்தத்தில், இரண்டு களை சௌக்கத்தில், அமைக்கப்பட்டு, சமத்தில் இருந்து முக்கால் இடம் தள்ளி அனாகத எடுப்பில் தொடங்குகிறது.

இப்பல்லவி மொத்தமாக ஒரு பூர்வாங்கம், ஒரு உத்திராங்கம் நடுவில் பிரிப்பது போல் வருவது ஒரு அருதி என்று கட்டமைப்பு (போன பாகத்தில் சொன்னது) இல்லை. சற்று கடினமாக, இரண்டு ஆவர்த்தங்களிலும் அறுதி கார்வை இரண்டரை அக்‌ஷரம் வருகிறது. சங்கராபரணனை சொல்லுக்கும் அழைத்தோடி சொல்லுக்கும் இடையே இரண்டரை அக்ஷரம், கல்யாணி மற்றும் தர்பாருக்கு சொற்களிடையே இரண்டரை அக்‌ஷரம். இரண்டு, மூன்றாவது ராகங்களை அழைத்தோடி வாடி கல்யாணி என்ற ஒரே சொற்றொடரில் ஒட்டியும், நான்காவது, முதலாவது ராகங்களை தர்பாருக்கு சங்கராபரணனை என்ற சொற்றொடரில் ஒட்டியும் அமைத்திருக்கிறார்கள். அதுவும் சமத்தில் இருந்து தள்ளி தொடங்கியபடி. அப்படியே தாளம் போடப் போட பாடப் பாட, நிறுத்தவே முடியாது.

பல்லவி ஒரே வரிதான். ஆனால் சங்கீத அங்கங்களை உன்னிப்பாக நோக்கினால், சிம்ப்ளி அமேசிங் கம்போஸிஷன்.

இருங்கள், அடிக்க வராதீர்கள். மேல்வாக்கியங்களில் எப்படி பல்லவியை ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சங்கேத வார்த்தைகளுடன் குறிப்பிட்டேன். அதில் உள்ள அனைத்து சில்ஃபான்ஸ் கில்ஃபான்ஸ் மேட்டர்களையும் சிலுக்குசிக்கான்சிக்கான்னு ஓரளவு கட்டுரையின் இப்பாகத்தில் புட்டுவைப்போம். படித்து முடிக்கையில், தொடங்கியதிலிருந்து விலகி வேறு எங்கோ போய்விட்டது போல் இருக்கலாம். பொறுமையுடன் இருங்கள். நிச்சயம் அடுத்த பாகத்தில் மீண்டும் இதே பல்லவிக்கு வந்து, இங்கு விளக்கியதையெல்லாம் புரிந்துகொண்டும், ரசிப்போம்.

*****

முதலில் ஆவர்த்தம்; என்றால், சுற்று. ரவுண்ட். ஒரு ஆவர்த்தம் என்றால் ஒரு சுற்று. ஆவர்த்தம் இசைக்கு, பாடலுக்கு, மிக உபயோகமான கால அவகாசம். தாளத்தின் அங்கங்கள், கால இடவெளிக்கேற்றவாறு ஆவர்த்தத்தின் அவகாசம் கூடவோ குறைந்தோ மாறுபடும். பாட்டின் அவகாசத்தை நீட்டவோ குறைக்கவோ, பாட்டின் கட்டுக்கோப்பை, வரிகளில் வார்த்தைகளை நிர்ணயிக்கவோ, ஆவர்த்தங்கள் இன்றியமையாதவை.

சில உபயோகங்கள் பார்ப்போம்.

மிருதங்கம் தனி ஆவர்த்தம் 16 ஆவர்த்தங்கள் வாசிக்கிறார் என்றால், ஏதோ ஒரு தாளத்தை (பக்கத்தில் பாடகர்) 16 முறை முழுவதுமாக போட்டுமுடிக்கும் கால அளவுவரை மிருதங்கத்தில் வாசிக்கிறார் என்று பொருள். ஒரு தீர்மாணம் 2 ஆவர்த்தங்களில் வாசிக்கிறார் என்றால், ஒரு தாளத்தை இரண்டு முறை போட்டுமுடிக்கும் காலம் வரை தொம்தரிகிட, திம்தரிகிட, தத்தும்தரிகிட என்ற ரீதியில் ஒரு பெரிய லய சொல்கட்டை (மிருதங்கத்தில் தட்டி) வாசிக்கிறார் என்று பொருள். அதையே வாயால் சொன்னால் கொன்னக்கோல்.

அதேபோல பாடகர் கீர்த்தனையின் முடிவிலோ இடையில் ஏதோ ஒரு இடத்திலிருந்தோ ராகத்தின் ஸ்வரங்களை சொல்லி ஸ்வரக்கோர்வைகளை பல ஆவர்த்தங்கள் பாடுவார். வயலின் வித்துவான் மீண்டும் இதை வாசிப்பார். பாடகர் 2 ஆவர்த்தம் பாடினால், வயலினும் 2 ஆவர்த்தங்கள் அப்படியே ரிப்பீட்டு.

சரி இது போதும். கீழே வீடியோவில் இதற்கு உதாரணம் கொடுத்துள்ளேன். மீண்டும் பல்லவிக்கு வருவோம்.

எந்த ஒரு தாளத்தையும் முழுமையாக ஒரு சுற்று போட்டு முடித்தால் அத்தாளத்தில் ஒரு ஆவர்த்தம் என்று பொருள். ஒரு கீர்த்தனை, பாடல் வரிகளை, ஒருமுறை முழுவதும் பாடி முடிக்க பல ஆவர்த்தங்கள் ஆகும் இல்லையா. பல்லவிகள் பொதுவாக ஒரு தாளத்தில் ஒரு ஆவர்தத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும். விதிவிலக்காக நம் பல்லவி இரண்டு ஆவர்த்தங்களில்.

[அதான் சொன்னேனே, உதாரணத்தையே கடினமானதாக எடுத்துக்கொண்டால் பலதைச் சொல்லலாம் என்று.]

அடுத்து ஆதி தாளம்.

ஆதி தாளம் உங்களில் பலருக்கு தொடையில் கைவத்து போடத்தெரிந்திருக்கும். தெரியாவிடின், இப்படி செய்யவேண்டும்.

முதலில் கூன் போடாமல், நிமிர்ந்து சம்மனம் போட்டு (சப்ளாமூட்டி) உட்காருங்கள். முகத்தை சீரியஸாய் வைத்துக்கொள்ளுங்கள். முதலில் உள்ளங்கையால் தொடையில் செல்லமாக ஒரு தட்டு (நம் தொடையில் கொசு உட்கார்ந்திருந்தாலோ, தொடை அடுத்தவரதென்றாலோ படார் என்று அடித்துக்கொள்ளலாம்). பிறகு சுண்டுவிரலில் தொடங்கி மூன்று விரல்களை கட்டைவிரலால் தொட்டு எண்ணிக்கொள்ளுங்கள்.

தொடையில் தட்டு + 3 விரல் எண்ணிக்கை = 4.

அடுத்து மீண்டும் தொடையில் உள்ளங்கையால் தட்டு. அடுத்து திருப்பிப்போட்டு புறங்கையால் தொடையில் தட்டு.  இது ஒரு 1 + 1 = 2 எண்ணிக்கை.

மீண்டும் இக்கை-தொடை தட்டுக்களை செய்தால், மீண்டும் ஒரு 1 + 1 = 2 எண்ணிக்கை.

இப்போது மொத்தமாக 4+2+2=8 எண்ணிக்கை பூர்த்தியாக, ஆதி தாளத்தை ஒரு ஆவர்த்தம் போட்டுமுடித்துள்ளோம்.

மொத்தம் 8 அக்‌ஷரம் உள்ள இத்தாளத்தை ஒரு வேகத்தில் செய்தால் (இரண்டு அக்‌ஷரத்தின் இடையில் சம கால இடைவெளி), ஒரு “களை”யில் தாளம் போடுகிறோம் என்று பொருள். இரண்டு அக்‌ஷரத்தின் நடுவில் உள்ள கால அளவை வேறுபடுத்தினால் களை மாறும். பாட்டின் ‘களை’யும் (விறு விறு, இழுவை) மாறும்.

பாட்டு முடிகிறவரை தொடர்ந்து இப்படி தொடை-கை கால அளவு கணக்கை செய்து கொண்டே போகவேண்டும். ஸ்வர-ராகத்தின் (பாட்டின்) கூடவே லயம் வருகிறது என்று பொருள்.

இதோ நம்ம கைவண்ணத்தில் ஆதிதாள வீடியோ.

[http://www.youtube.com/watch?v=SkkshFo7aHc ]

[வீடியோவே இருக்கிறது, எதற்கு எழுதவேண்டும் என்றால் வீடியோ பார்க்கமுடியாதவற்காகவும் (பிரிண்ட் போட்டு படிப்பவர்களுக்காகவும்) எழுத்திலும் விளக்கியுள்ளேன். அதேபோல் நான் வீடியோ வல்லுனரில்லை. சும்மா இந்த கட்டுரைக்காக ஆர்வக்கோளராய் ஒத்தகையில் கேமிராவை பிடித்தபடி ஷேக் வெல் வைல் இன் யூஸ் என்று எடுத்துள்ளேன். இதெற்கெல்லாம் டொஸ்க்சொல்லி விமர்சனம் இடது கையால் எழுதிப்பழகுங்கள்.]

இனி ஆதிதாளத்தையே சற்று டெக்னிகலாக விளக்குவோம்.

*****

ஆதி தாளத்தை சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் என்பர். சதுர் போல சதுஸ்ரம் என்றாலும் நான்கு. ஜாதி என்றால் வகை. திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்ற ஜாதி வகையில் சதுஸ்ரம். திரிபுடை (த்ரிபுடம்) தாளத்தின் பெயர்.

தாளத்தை பற்றி சுருக்கமாக: ஏகம், ரூபகம், த்ரிபுட, ஜம்ப, மட்ய, அட, துருவ என்று ஏழு வகை தாளங்கள் இருக்கின்றன. இவற்றில், மேலே சொன்ன ஐந்து ஜாதிகளிலும் அமைக்கலாம். 5 x 7 = 35 ஆயிற்றா. இசை கற்றுக்கொள்கையில் அதனால்தான் அலங்காரங்கள் என்ற விஷயத்தை அப்பியாசம் செய்யச்சொல்லுவார்கள். அலங்காரம் 35 இருக்கிறது. ஒவ்வொன்றும் மேலே குறிப்பிட்ட ஒவ்வொறு தாள வகையில். அனைத்தும் சதுஸ்ர நடையில்.

நடையா, அதுவேறா? இந்த 35 தாளங்களிலும், பஞ்ச (5) நடைகளை அமைக்கலாம். பஞ்ச நடைகளின் பெயர்களும் திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்பதுவே. (கீழே நடைகளை உதாரணத்துடன் வீடியோவில் விளக்கியுள்ளேன்.) இதனால் 35 x 5 = 175 வகை தாளங்கள் செய்யமுடியும் என்றும் கூறலாம்.

அதேபோல், தனியே ஆதிதாளம் அடுத்து, சாப்பு தாளங்களான கண்டசாப்பு, மிஸ்ரசாப்பு, சங்கீர்னசாப்பு என்றும் இருக்கிறது.

அதேபோல், முன்னர் குறிப்பிட்டபடி, நம் தாளங்கள் அனைத்திலும் லகு துருதம் இரண்டும் அங்கங்களாக அநேகமாக இருக்கும். பல தாளங்களில் அனுத்ருதம், ப்ளிதம், காக்கபாதம், குரு போன்ற பல அங்கங்களும் வரும். பல வித்தியாசங்கள், எளிமையான சட்டத்திற்கு கட்டுப்படாதவைகள் இருக்கிறது. உதாரணமாய், குரு என்பது கல்லுரலில் மாவாட்டுவது போல அப்படி கையை சுத்தி போடுவது.

[மழுப்பலாய் நான் இங்கு எழுதுவது அறிமுகமாக கோடிகாட்ட மட்டும்தான். விஷயம் மிக்கவர்கள் (விஷ-மி-கள்) பொருத்தருள்க.]

எப்படியும் நம் தாள வகைகள் நூற்றுக்கணக்கில் வரும்.

எதில் வேண்டுமானாலும் பல்லவி (கீர்த்தனை, பாடல்) அமைக்கலாம்.

ஆனாலும் பல ராகங்களை இலட்சணமாய் கையாளும் நம் திரையிசையமைப்பாளர்கள், தாள வகைகளை அவ்வப்போதே தொடுகிறார்கள்.  முக்காலவாசி ஆதி தாளம்தான். நடைகள் மட்டும் மாறும். கச்சேரிகளில் தாளத்தில் சூரர்கள் இருக்கிறார்கள். பாட்டை கேட்கையில் சுலபமாக தோன்றும். கையில் தாளம் போடுவதை கவனித்தால், தலை சுற்றும்.

தாளங்களை அப்பால தனிக்கட்டுரையாக பார்ப்போம். இப்போதைக்கு இதையெல்லாம் விடுத்து ஆதியை மட்டும் மேலும் அலசுவோம். நம்ம பல்லவிக்கும் அது போதும்.

ஆதி தாளத்தை விளக்க லகு த்ருதம் இரண்டு அங்கங்கள் மட்டும் போதும்.

தாளத்தின் அங்கமான த்ருதம் லகுவை, துண்டங்களாக உடைக்கமுடியும். செய்தால் அக்‌ஷரங்களாக விழும்.

அக்‌ஷரம் தாளத்தின் உப-கால இடைவெளிக் குறியீடு. இக்குறியீட்டை எட்டு முறை சமகால இடைவெளிவிட்டு வாயால் சொன்னாலோ, தொடையில் கையால் தட்டினாலோ, தலையில் குட்டினாலோ, ஒரு ஆவர்த்தம் (சுற்று) ஆதிதாளம் போடுகிறோம் என்று பொருள்.

அக்‌ஷரங்களையும் உடைக்கலாம். மாத்திரைகளாக. மாத்திரை என்றால் உச்சரிப்பின் ஒரு கால அளவு.

அடடா எங்கெங்கோ சுற்றி தமிழிலக்கணத்திற்கு வந்துவிட்டீரே என்றால், அதான் சொன்னேனே, கர்நாடக சங்கீதம் தமிழர்களின் பொக்கிஷம்.

சரீர, சாரீர ஆரோக்யம் கருதி மாத்திரையையும் பொடித்து சூர்ணமாக்கவேண்டாம். இப்போதைக்கு அப்படியே முழுங்குவோம்.

தாளத்தின் த்ருதம் எப்போதும் 2 அக்‌ஷரம் கொண்டது (தொடையில் உள்ளங்கையையும் புறங்கையையும் அடுத்தடுத்து தட்டும் இரண்டு அக்‌ஷரம்). அல்ஜீப்ராவின் X போல லகுவின் அக்‌ஷர மதிப்பு மாறும். ஒவ்வொரு தாளத்திலும் சில பல லகுக்களும் த்ருதங்களும் இருக்கலாம். கூட்டினால் வருவது தாளத்தின் மொத்த அக்‌ஷரங்கள். இதை வைத்து ஒரு ஆவர்த்தத்திற்கு அந்த தாளம் போடப்படும் நேரம் நிச்சயமாகும்.

திரிபுடை தாளத்தின் இலக்கணம் ஒரு லகு இரண்டு த்ருதம். அதாவது X 2 2. இதில் X மட்டும் 1, 3, 4, 5, 7, 9 என்று இருக்கலாம். இந்த “X = எண்கள்” விதி அனைத்து தாளத்தின் லகுவிற்கும் பொருந்தும்.

படித்தவுடன் வரும் டவுட்டிற்கு பதில்: 2 நான்கில் பாதி, 8 இரு நான்குகள், 6 இரு மூன்றுகள், அவைகள் ஏற்கனவே இருக்கும் எண்களின் ஒருவகை ரிப்பீட்டு என்பதால் சேர்க்கத்தேவையில்லை.

சரி, X = 3ஆய் இருந்தால் திஸ்ரம் என்று பெயர். அதாவது, X, 2, 2 என்பது X=3, 2, 2 என்று வந்தால் அத்தாளத்தின் பெயர் திஸ்ர ஜாதி திரிபுடை தாளம். அதைப்போல X = 4 என்பது சதுஸ்ரம், அதனால் சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம். அதுதான் நம்ம ஆதி தாளம். வீடியோவில் ஆதி தாளம் போட்டதை இப்போது சரிபாருங்கள். ஒரு ஆவர்த்தத்தில், முதலில் 4 அக்‌ஷரம் போட்ட விதமும், அடுத்த இரண்டு த்ருதங்கள் போட்ட விதமும் புரியும்.

சதுஸ்ரம் அடுத்து, மிச்சம் X = 5 கண்டம், X = 7 மிஸ்ரம், X = 9 சங்கீர்னம். பின்னால் இருமுறை 2, அதாவது இரண்டு த்ருதம் வருவதால் திரிபுடை தாளம்.

இப்போது நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம், சங்கீர்ன ஜாதி திரிபுடை தாளத்திற்கு எத்தனை அக்‌ஷரங்கள், எப்படி தொடையில் போட வேண்டும் என்று. (பதில்: நோ, சொல்லமாட்டேன். உங்களுக்கே நிச்சயம் தெரியும், போடவும் வரும். செய்துபாருங்கள்.)

சரி, அடுத்து களை, சுருக்கமாக.

ஆதி தாளம் ஒரு ஆவர்த்தத்திற்கு 8 அக்‌ஷரங்கள். ஒரு களை சவுக்கத்தில் போட்டால், 8 மாத்திரைகளே. இரண்டு களை சவுக்கத்தில் போட்டாலும் அதே 8 அக்‌ஷரங்கள்தான். ஆனால் இரண்டு அக்‌ஷரங்களுக்கிடையே உள்ள இடைவெளி 2 மாத்திரைகளாக நீண்டு, ஒரு ஆவர்த்தத்தில் மொத்தம் 16 மாத்திரைகள் ஆகிவிடும்.

அப்டீனா, இரண்டு களையில் ஒரு ஆவர்த்தம் போடப்படும் அதே ஆதி தாளம், ஒரு களையில் ஒரு ஆவர்த்தம் போடும் அதே ஆதிதாளத்தின் நேர அளவை காட்டிலும் இரண்டும் மடங்கு நீண்டு இருக்கும்.

மீண்டும் படித்துக்கொள்ளுங்கள். இந்த சூட்சுமம் புரிந்துவிட்டால் தாளத்தில் பாதி கிணறு கிராஸ்டு.

அவ்ளோதான் சார் ஆதிதாள மேட்டர்.

*****

ஸ்டாப்ப்ப்ப் என்று நீங்கள் அலறுவது புரிகிறது.

ஒப்புக்கொள்கிறேன், மூச்சுமுட்ட விஷயத்தை கொட்டிக்கொண்டே போகிறேன். வேறுவழியில்லை. வாழ்க்கையில், கட்டுரையில், எங்காவது இதையெல்லாம் ஏதாவது ஒரு களையில், வேகத்தில், சொல்லித்தான் ஆகவேண்டும்.

[யோவ், மேலே சொன்ன பல்லவி என்னவாயிற்று? அதான் சொன்னேனே, அடுத்த பாகத்தில்ங்னா.]

*****

இப்போது மேலே விளக்கிய வார்த்தைகளுக்கு சிலவற்றிற்கு உதாரணங்கள்.

ஆதிதாளம், ஒரு களை சவுக்கத்தில் ஒரு பாட்டு. அதிலேயே ஆவர்த்தம், குறைப்பு, தீர்மாணம் போன்றவற்றை விளக்குகிறேன். எனக்கு பாட வராது, அதனால் டி.எம்.எஸ்ஸை துணைக்கு கூப்பிட்டுக்கொள்கிறேன். தன் பங்கிற்கு அவர் கே.வி.மகாதேவனையும், சிவாஜி கணேசனையும் துணைக்கு கூட்டிக்கொள்வது அவர் இஷ்டம்.

[பாட்டும் நானே http://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0 ]

இசை, பாடகர், வாயசைத்து நடித்தவர் என்று ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் அரங்கேற்றிய பாட்டும் நானே பாவமும் நானே என்று கௌரிமனோஹரி ராகத்தில் அபாரமான பாட்டு நமக்கு பரிச்சயம். இப்பாடலின் இறுதியில் கொன்னக்கோல், மற்றும் வாத்தியங்கள் ஆதி தாளத்தில் சில ஆவர்த்தங்கள் எப்படி வாசிக்கின்றனர் என்பதை இசையை ரசித்துக்கொண்டே அனுபவியுங்கள்.

என் பங்கிற்கு சில விளக்கங்களை இந்த வீடியோவில் கொடுத்துள்ளேன்.

[பாட்டும் நானே, குறைப்பு விளக்கம் – http://www.youtube.com/watch?v=v7xUDzIkVu4 ]

பாட்டும் நானே, தீர்மாணம் விளக்கம் – http://www.youtube.com/watch?v=EEjEdtoRy10 ]

கச்சேரியில், மெயின் பாட்டில் இந்த விஷயங்களை செய்வார்கள். ரா. தா. பல்லவியிலும் தீர்மாணம் போன்றவற்றை செய்வார்கள்.

இப்போது நடை பற்றி இன்னொரு விளக்க வீடியோ

நடை என்பது ஒரு பேஸ், ஸ்பீட், வேகம். ஆனால் ஒரு தாளத்தின் இரு அடுத்தடுத்த அக்‌ஷரத்திற்கிடையே அமையும். மேலே தாள வகைகளின் பெயர்களில் வருவது போல், பஞ்ச நடைகள் உள்ளன. கேள்விப்பட்டிருக்கலாம்.

திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்னம்.

ஒரு தாளத்தில், இவை முறையே 3, 4, 5, 7, 9 என்று இரண்டு அக்‌ஷரங்களுக்கு இடையே உள்ள காலத்தை குறுந்தட்டுக்களக நிர்ணயிக்கும். ஒரே கால இடைவேளைகளை இப்படி மாறும் குறுந்தட்டுக்களாக பிரிப்பதால் பாட்டின் நடையை சுலபமாக மாற்றலாம்.

கவனிக்கவும், தாளம் அதே தான். நடை தான் வித்தியாசம். அதாவது, மேலே விளக்கிய ஆதி தாளத்தை இந்த பஞ்ச நடைகளிலும் போடலாம்.

படித்தால் மட்டும் உடனே புரியாதுதான். இருங்கள், இந்த வீடியோவில் ஆதி தாளத்தை சதுஸ்ர நடைக்கும், கண்ட நடைக்கும் வித்தியாசப்படுத்தி ஒரு சிறு விளக்கம் கொடுப்போம்.

[யூடியூப் வீடியோ சுட்டி – http://www.youtube.com/watch?v=2vAokb919Ts ]

இப்போது கீழே இரண்டு ஒலிக்கோப்புகளை கேளுங்கள். இரண்டும் கரஹரப்பிரியா ராக திரையிசை. இரண்டும் ஆதி தாளம். ஒன்று சதுஸ்ர நடையில், மற்றொன்று திஸ்ர நடையில். நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.

மஹாராஜன் உலகை ஆளலாம்

மாதவிப்பொன்மயிலாள்

சரி, இப்போது பஞ்ச நடையும் இதோ மிருதங்கத்தில், உன்னால் முடியும் தம்பி படத்திலிருந்து (முன்னே பின்னே வேறு சீன்கள் உள்ளன; பார்த்து ரசியுங்கள்).

[யூடியூப் சுட்டி – http://www.youtube.com/watch?v=ryvkxiGrvIQ]

(என்னைவிட வயதில் சிறியவருக்கு மட்டும் சொல்கிறேன்) நடைகளை புரிந்துகொள்ள உன்னால் முடியும் தம்பி. சரிதானே?

*****

பிரேக். இளைபாறுவோம். இதுவரை ஆவர்த்தம், ஆதிதாளம், டெக்னிகலா அது இன்னா, அதை எப்படிப்போட வேண்டும், களை, அக்‌ஷரம், மாத்திரை இவைகள் இன்னா, பஞ்ச நடைகள், ஒரே தாளத்தில் பல நடைகள் இவற்றை பார்த்துள்ளோம்.

*****

முடிக்கப்போகிறேன். அதற்குமும், அடுத்த பாகத்திற்கு முன்னுரை.

ஆதிதாளம், சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம். 4, 2, 2 என்ற அக்‌ஷரங்கள், மொத்தம் 8 அக்‌ஷரங்கள் கொண்டது. விளக்கினோம். அதில் கட்டுரை தொடக்கத்தில் சொன்ன சதுர் ராக பல்லவி இரண்டு ஆவர்த்தத்திற்கு வரும். அப்படியென்றால் இருமுறை 8 அக்‌ஷரங்கள், மொத்தம் 16 அக்‌ஷரங்களுக்குள் பல்லவி அமைந்திருக்கிறது. நான்கு ராகங்களும், ஒரு ஆவர்தத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு ராகம் என்று வரும்.

ஏன் கிட்டத்தட்ட என்றால் பல்லவி தாளத்தின் சமத்தில் தொடங்கவில்லை.

பல்லவியின் சாஹித்தியமும் (பாட்டும்) தாளமும் அதே நேரத்தில் தொடங்கினால் பல்லவி சமத்தில் ஆரம்பிக்கிறது என்று பொருள். பாட்டு தாளம் தொடங்கிய பின், அதைத் தாண்டித்தான் தொடங்குகிறது என்றால் அனாகத எடுப்பு. அதீத எடுப்பு என்றால் பாட்டு தாளம் தொடங்குவதற்கு முன்னரே தொடங்குகிறது என்று பொருள்.

இதைப்பற்றியும், இன்னபிற பல்லவி விஷயங்களையும் அடுத்த பாகத்தில் விளக்குவோம். லைட்டாய் ஒரு திரையிசை சர்ப்ரைஸ் உதாரணம் கொடுத்து இப்பாகத்தை முடிப்போம்.

நம்ம ஏ.ஆர். ரஹ்மானையே குறிப்பிடவில்லையே இதுவரை. செய்துவிடுவோம்.

ஜெண்டில்மேன் படத்தில், ரஹ்மானின் சிக்குபுக்கு ரயிலே பாட்டு பிரபலம், நமக்கு பரிச்சயம். மேலே படிக்கும்முன் சட்டென்று சொல்லுங்கள், பாட்டு எப்படி தொடங்கும்? அதாவது, சுரேஷ் பீட்டர்ஸ் பாடுகையில், பாட்டு எப்படி தொடங்கும்? சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்றுதானே?

இந்தாருங்கள் வீடியோ. கேட்டுப்பாருங்கள்.

[http://www.youtube.com/watch?v=NYoByJiOTDM ]

சரி, முதலில் தாளத்தை கவனித்து பாருங்கள், மேலே சொன்ன அதே ஆதிதாளம் தான். ஒரு களை சவுக்கம். சதுஸ்ர நடையில்.

தொடக்கத்தில் கொயந்தை பாடிமுடித்ததும் வரும் இசைக்கு ஆதிதாளம் போடுங்கள். நான்கு ஆவர்த்தத்தில் முடிந்துவிடும். ஆனால் முடிகையில் இரண்டு அக்‌ஷரம் அமைதி. பிறகு சமத்தில் சுரேஷ் பீட்டர்ஸ் பாட, பாடல் தொடங்கும். ஆனால் பாட்டு சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்று தொடங்காது. புகு சிகு புகு சிகு புகு ரயிலே என்று தொடங்கும்.

அடுத்த சுற்றில், இரண்டாவது முறை பல்லவியை சொல்கையில், சமத்தில் டிரம்ஸ் அடி விழுந்ததும், சற்று காலம் தள்ளியே, சிகு புகு சிகு புகு ரயிலே என தொடங்கும். இதை சரிகட்டதான் சுரேஷ் பீட்டர்ஸ் முதல் சுற்று தொடக்கத்தில், சமத்தில், ஒரு புகு சேர்த்து தொடங்குவார்; சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா என்றெல்லாம் கேட்டுவிட்டு மீண்டும் பல்லவியை தொடங்குகையில் புகு சிகு புகு சிகு என்று கோரஸாய் தொடங்கும்.

ஆதி தாளம் தான். அதன் சமத்தில் இப்பாடலை தொடங்க வேண்டுமென்றால் புகு வில் தான் தொடங்கமுடியும். விட்டு சிகுவில் தொடங்கினால், சமத்தை விட்டு சற்று தள்ளி தொடங்கவேண்டும். இப்படி செய்தால் அனாகத எடுப்பு என்று பெயர்.

இந்தாருங்கள் என் விளக்க வீடியோ.

http://www.youtube.com/watch?v=iMC8x9NWb08

ஒரு களை சவுக்கத்தில் ஆதி தாளத்தில் இப்பாடல் அரை இடம் தள்ளி தொடங்குகிறது. அதாவது கையை தொடையில் சமத்தில் தட்டிய முதல் அக்‌ஷரத்திற்கும் அடுத்து சுண்டுவிரலை விடும் இரண்டாம் அக்‌ஷரத்திற்கும் நடுவில் சிகு வருகிறது.

ஸோ (ஆகையால்), சிகு புகு சிகு புகு ரயிலே என்று பாட்டை சொன்னால், இப்பாடல் ஆதி தாளத்தில் அனாகத எடுப்பு பாடல். மேலும் பல உதாரணங்கள் அடுத்த பாகத்தில்.

இப்போது பாருங்கள். கட்டுரை தொடக்கத்தில் சொன்ன சதுர் ராக மாலிகை பல்லவி இரண்டு ஆவர்த்தம், இரண்டு களை சவுக்கம் (இரண்டு அக்‌ஷரங்களுக்குள் ஒரு களையை விட இரு மடங்கு நேர அவகாசம்). இப்பல்லவியும் அனாகத எடுப்பே. தாளத்தின் சமத்தில் இருந்து முக்கால் இடம் தள்ளி.

கர்நாடக இசையா கொக்கா. அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

*****

ராகம் தானம் பல்லவி – பாகம் 3

Standard

ராகம் தானம் ஆயிற்று. இப்பாகத்தில் பல்லவி பற்றி அறிமுகம்.

தொடங்கும்முன் அறிமுகத்திற்காகவே இக்கட்டுரைகளை படிப்பவர்களுக்கு ஒரு வார்னிங். பல்லவிக்கு நேரடியாக பல சம்பந்தமில்லா விஷயங்களை சொல்வதுபோல் முதலில் தோன்றும். ஆனால் இவைகளை ஒரளவு அறிமுகம் செய்துகொண்டால்தான் பல்லவியின் உன்னத கட்டுக்கோப்பை கோடிகாட்டலாம். புரிந்து ரசிக்கலாம். அநேகமாக கட்டுரையின் அடுத்த இரு பாகங்களுக்குள் அனைத்தையும் ஒருங்கிணைத்துவிடுவேன். அதேபோல் அன்பர்கள் கேட்டதில் ஓரிரு கேள்விகளுக்கு இங்கு பதில் கூறவில்லை (சிலவற்றிற்கு கட்டுரையினூடே கூறியுள்ளேன்). அடுத்த பாகம்வரை பொறுத்திருங்கள். ஆங்காங்கே புரியவில்லையென்றால் தயங்காமல் அப்பத்தியை விட்டு மேலே படித்துக்கொண்டே செல்லுங்கள். ஒலிக்கோப்புகளையும் கேளுங்கள். நம் சங்கீதம் என் விளக்கங்களையும் மீறி நமக்கு நிச்சயம் புரியும். சந்தேகம்/தவறுகள் இருந்தால் மடலிடுங்கள் அடுத்த பாகத்தில் சரிசெய்துவிடுவோம்.

பல்லவி என்றால் பதம் லயம் வின்யாசம் (ப-ல-வி) இவற்றின் கூட்டு என்பர். இப்படி யார் முதலில் வகுத்தது என்று தெரியவில்லை. பதம் என்றால் சாஹித்யம் அல்லது பாட்டு வரிகள். லயம் என்றால் என்ன தாளம், கால இடைவெளிகளில் பாடுகிறோம் என்பது. வின்யாசம் என்றால், கற்பனைவளஞ்செரிய ராகத்தையும், லய கணக்குகளையும் இசையாய் வெளிக்காட்டுவது.
Continue reading

ராகம் தானம் பல்லவி – பாகம் 2

Standard

முதல் பாகக் கட்டுரையில் எனக்குத் தெரிந்தமட்டில் மூன்று பிழைகள் இருந்தன (திருத்திவிட்டேன்). எம்.எஸ்.ஷீலா கர்நாடகா. வாக்கியத்தில் ஆந்திரப்பாடகர்களுடன் சேர்த்துவிட்டேன். ஆனாலும் அவரும் அநேக கச்சேரிகளில் ரா.தா.ப. பாடுவார். 1965 கலாநிதி ஆலத்தூர் வெங்கடேச ஐயர் என்று குறிப்பிட்டுவிட்டேன். சரியானது ஆலத்தூர் சகோதரர்களே. அதைப்போல அரியக்குடி ஐம்பதுகளில் (1950) கொண்டுவந்த கச்சேரி பாணி என்று எழுதியிருந்தேன். 1930 40 களிலே அவர் அதைசெய்துவிட்டாராம். முன்னூறு வயது மதிக்கத்தக்க என் இசைநண்பர் குட்டுகிறார். மகிழ்ச்சி.

அடுத்து, ராகம் தானம் பல்லவி அங்கத்தில் பாடப்படும் ராக ஆலாபனை, கச்சேரியில் வேறு கீர்த்தனை முன் பாடப்படும் ஆலாபனையிலிருந்து வித்தியாசப்படுமா?

அடிப்படையாக வித்தியாசப்படாது. அதே ராகம் அதே ஆலாபனைதான். ஆனால் பாடும் முறையில் சிறு வித்தியாசம் இருக்கிறது. ஆலாபனை என்றால் ராக ஸ்வரங்களை ஸ, ரி, க என்று சொல்லாக்காமால், ஆ , உம், நும், என்பதுபோல சப்தங்களாக தொடராக கற்பனைத்திறனுக்கேற்ப படிப்படியாக பாடுவது. ஒவ்வொரு ராகத்திற்கும் சிறப்பு ஸ்வரக்கோர்வைகள் (பிடிகள்), கமகங்கள், கார்வைகள் இருக்கிறது. அவற்றையும் ஆலாபனையில் வெளிப்படுத்தவேண்டும். ஒரு உதாரணம் ஒலிக்கோப்பில்.

மேலே காம்போஜி ராகத்தில் டாக்டர் எஸ். ராமநாதன் தானத்திற்கு முன் ஆ லாபனை செய்கிறார். முதலில் வரும் ஸ்வரக்கோர்வை காம்போதியின் பிடி. பாடியவுடன் இது காம்போதி ராகம் என்று தெரிந்துவிடும்.

கீர்த்தனை முன் ஒரே டேக்கில் பாடகர் ராக ஆலாபனை, பின் வயலின் ஆலாபனை. ரா.தா.ப. ஆலாபனையில் இரண்டு மூன்று சுற்று பாடகரும் வயலின்காரரும் பரிமாறிக்கொள்வர். இதனால், முதல் சுற்றில் மெதுவாகவும், மிதவேகத்திலும் (மத்தியமகாலத்தில்), அடுத்த சுற்றுக்களில் வேகமாகவும் (துரிதகாலத்தில்) பாடலாம். விலம்பகாலத்திலேயே (மிகமெதுவாக) ஆலாபனை மொத்தத்தையும் செய்துமுடிக்கலாம். பாடகரை பொறுத்தது.

அடுத்ததாக தானம் எனும் அங்கத்தின் உபயோகம் என்ன? உதாரணமாக, வர்ணம் கச்சேரி முதலில் பாடுவது, தொண்டையைப் பதப்படுத்திக் கொள்வதற்கேற்ற வகையில் இருக்கும். இதுதான் அதன் தேவை  என்று ஒரு கருத்து உள்ளது. இதே போல் தானம் என்பதின் அவசியம் என்ன, எதற்கு இதை செய்துகட்டவேண்டும்?

தானம் பற்றி விளக்கம் கூறுவதற்கு முன் வர்ணம் பற்றி நிலவும் கருத்திற்கு ஒரு சிறிய ம்ஹூஹும். டி.ஆர்.சுப்பிரமணியன் நல்ல குரலில் கச்சேரி முதல் பாட்டாய் மங்களமும், இறுதியாய் வர்ண மும் பாடியுள்ளார். இப்படி குரல் பதப்படுத்தல் சமாச்சாரங்களை உடைத்தெறியவே. சமீப கச்சேரிகளில் டி.எம். கிருஷ்ணா கணீரென்று வர்ணத்தை மூன்றாவதாயும், கச்சேரியின் பிரதான உருப்படியாகவும் (2006 என்று நினைக்கிறேன், மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், கானடா வர்ணம்), ரா.தா.ப. வாகவும் (2008 மியூசிக் அகதெமி – விரிபோணி பைரவி ராக வர்ணம்) பாடியுள்ளார். வர்ணம் = கச்சேரி முதல் பாட்டு = குரல் பதப்படுத்துதல் என்பதெல்லாம் ஒரளவே சரி. சங்கீத சட்டமில்லை.

தானம் என்பதும் ஒருவகையில் குரல் சரிசெய்தல், அல்லது விருத்திசெய்யும் பயிற்சியாகவே இருந்திருக்கிறது. சரளிவரிசை, ஜண்டைவரிசை, வர்ணம், பிறகு தானம் என்று கொள்ள லாம். ஆலாபனையில் ஆ  என்று சப்தம் தொடர்சியாய் வருவது போல் ராக ஸ்வரங்களை ராக லக்‌ஷணத்திற்கு (இலக்கணம்) ஏற்ப கோர்த்து பாடுவார்கள். இதை மொத்தமாக கீதம், மெலடி, என்று புரிதலுக்காக வைத்துக்கொண்டால், தானத்தில் இவ்வாறு இல்லை. ஸ்வரமும் (கீதமும்) லயமும், மெலடியும் ரிதமும் சேருகிற இடம் தானம். சொல்லற்ற இசைவடிவிலிருந்து ராகத்தை சொற்களோடு உறவாட வைக்க எத்தனிக்கும் கருவி தானம்.

அதனால் ராக ஸ்வரங்களை தானத்தில் வேறுவிதமாய் சற்று சந்தம் வருவதுபோல பாடவேண்டும். ஆங்கிலத்தில் ஸ்டக்காட்டொ (staccato) என்பார்கள். ஸ்வரங்களை 3, 4, 5, என்று (ராகம் அனுமதித்தால்) சிறு சிறு ஸ்வரக்கோர்வையாய் உடைத்து உடைத்து பாடுவது. இப்படி பாடுகையில் அனந்தம் என்ற சொல்லையும் அதற்கேற்றவாறு உடைத்து பொருத்தி பாடவேண்டும். முடிவில் வழுக்கி இழுத்து ராக ஸ்வரூபம் தெரியுமாறு முடிக்கவேண்டும். ஆ …னந்தத்…..தா…னம்…தந்த… ஆஅஆஅ        ஆ   அ  ஆ  அ   ந ந்   த   த் தக  அ  அ  த க அ  அ  இப்படிப் போகும்.

கீழே கமலமனோஹரி ராகத்தில் சேஷகோபாலன் தானம் ஒலிக்கோப்பை கேட்டுப்பாருங்கள். தீக்‌ஷதரின் கஞ்சதலாயதாக்‌ஷி கீர்த்தனையை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

மிருதங்கத்திற்கு தத்தகாரம் போல கீர்த்தனைக்கு தானம். எங்கெங்கு பல்லவியில் வார்த்தைகளை ஒதுக்கி அமைக்கவேண்டும் என்பதற்கு தான ஸ்வரக்கோர்வைகளை உபயோகித்துதான் வகுப்பார்கள்.

தானத்தின் மூலம் கீர்த்தனை எப்படி தோன்றும் என்பதற்கு திரையிசையில் ஒரு கிட்டத்தட்ட உதாரணம் எம்.எஸ்.வீ./கண்ணதாசனின் சிப்பியிருக்குது முத்துமிருக்குது (வறுமையின் நிறம் சிவப்பு படப்) பாடல்.

இப்பாட்டிலிருந்து சிறு உதாரணம். மெட்டையே தனனா தனனா தானா என்கையில் மூன்று, மூன்று, இரண்டு ஸ்வரங்களாய் பிரிப்பது புரியும் என்று வைத்துக்கொள்கிறேன். இத ற்கு கவிஞர் (வேறு யார் செய்வர்?) உடனே மழையும் வெயிலும் என்ன என்று வார்த்தைகள் தருகிறார். ம-ழை-யும் வெ-யி-லும் என்-ன  என்று 3, 3, 2 ஸ்வரங்களுக்கு பொருந்துமாறு வார்த்தைகளின் அக்‌ஷரங்கள் வருகிறது பாருங்கள்.இசையா, சாஹித்தியமா, இசையமைப்பாளரா கவிஞரா யார் முந்தி? சொல்வது கடினம்.

இதையே தியாகையர் ஒருவரே செய்கையில் வெளிப்படுவது பஞ்சரத்ன கீர்த்தனைகள், ரத்தினங்கள், அபாரங்கள். வார்த்தைகள் தமிழா தெலுங்கா, இசை ஸ்வரம் என்ன ராகம், ரகம், என்றெல்லாம் கவலையின்றி திளைக்கவைக்கும் ஸ்வர-சாஹித்திய (இசை-வரி) பெர்ஃபெக்ட் மாட்ச். இவ்வகையில் அஜ, , கஜ , மயூர என்று ஏற்கனவே குறிப்பிட்ட பல வகை தான வகைகளை அடக்கியுள்ளது தியாகைய்யரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள். சுருதியும் லயமும் பிரிக்கமுடியாதவகையில் ஒருங்கே அமையப்பெற்ற ஸ்வர-ராக-லய -சாஹித்திய இசை கற்பனைவெளிப்பாட்டின் உன்னதம். ஒரு சாம்பிள் கீழே.

திரையிசையில் தானத்தை கொண்டே இசையமைத்தவர்களையும் கூடவே ஏற்ற வார்த்தைகளை பாட்டாய் பொருத்தியவர்களையும் பாட்டைவைத்தே சுலபமாக கண்டுகொள்ளமுடியும். இன்னொரு காம்பினேஷனில் சட்டென்று ஞாபகம் வரும் இன்னொரு உதாரணம் சிந்துபைரவி திரைப்படத்தில் தானமாகவே தொடங்கி, வரிகளை தானம்-த என்று தானமாகவே உடைத்து, வார்த்தைகளை மோ-க—ம் என்–னும் என்று ஒதுக்கி ஒதுக்கி பாடப்பட்டு உச்சியை அடைகையில் அகாரமாகிவிடும் மோகம் என்னும் தீயில் என்மனம் வெந்து வெந்து உருகும் என்ற பாடல். விடியோவில் கேட்டுப்பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=rd8_rwlUWCE

எனக்குத் தெரிந்து கனகாங்கி ராகத்தில் வந்துள்ள முதல் (கடைசியுமான?) திரைப்படப்பாடல் இது. வெங்கடமஹி வகுத்த மேளகர்த்தா வரிசையில் கனகாங்கி முதல் ராகம். ஸ, ரி1, கா1, ம1, ப, த1, நி1, ஸ  என்று ராக ஸ்வரங்கள். ஸ  ரி1 க1 அனைத்தும் அருகருகே ஸ்வர ஸ்தானங்கள் (ஒலிகள்) கொண்டது. அதேபோல ப த1 நி1 அருகருகே ஒலிப்பவை. சேர்த்து பாடுகையில் காதால் பாகுபடுத்தி கேட்க முடிந்தாலும், மனதில் சற்று நாராசமாய் ஒலிக்கும். இதைப்போல் ஸ்வரக்கூட்டல்கள் உள்ள ராகங்களை விவாதி ராகம் என்பார்கள். விவாதியில் பாடுவது கடினம். பாலமுரளிகிருஷ்ணா, தஞ்சாவூர் கலியாணராமன் போன்ற சிலரே கச்சேரி மேடைகளில் திறம்பட செய்திருக்கிறார்கள். வேரொருசமயம் விரிவாய் பார்ப்போம்.

மேலே பாடலை கவனித்தால் இளையராஜா ஒரே இசை வாக்கியத்தில் (மெலடியில்) அனைத்து ஸ்வரங்களையும் ஒன்றுசேர்த்து வடிக்காமல், ஸ  ரி1 க1 ம இவற்றில் சில ஸ்வரக்கோர்வைகளையும், பின் தாண்டிபோய், ப த1, நி1 ஸ  என்றும் அமைத்திருப்பார். கேட்கவும் நாராசமாய் தோன்றாது. சிலிர்ப்பாய் இருக்கும். பாட்டின் முடிவில்தான் ஒரே மூச்சில் ஒரே வரியில் ராக ஸ்வரங்கள் மொத்தத்தையும் பாடி மேல்ஸ்தாயிவரை சென்று பஞ்சமம் தொட்டு, பளிச் என்று தந்தி அறுந்துவிடும். யேசுதாஸின் அபார அகார பயிற்சி வெளிப்படும் பாடல்.

(எம்.எஸ்.வி., ராஜா, என்று ரஹ்மானை விட்டுவிட்டீரே என்று சண்டைக்குவராதீர். வேறு விஷயத்தில் வேறு இடத்தில் குறிப்பிடுகிறேன்)

அருணகிரிநாதரின் திருப்புகழ் அநேகமாக அனைத்துமே சந்தத்தாளங்கள். இன்றைய கச்சேரிகளில் இறுதியில் மங்களத்திற்கு முன் திருப்புகழ் பாடுவார்கள். வார்த்தைகளை நீக்கி ஸ்வரங்களாக நினைத்துப்பார்த்தால், தானம் பாடுவது போலவே இருக்கும்.

திருப்புகழ் பாடப்படுகையில் இன்று நாம் அநேகமாக சீட்டின் நுனியில், கையில் பை, குடை, பிடித்தபடி, எப்படா ’பெருமாளே’ வரும் என்று எழுந்துசெல்ல காத்திருக்கிறோம்.

இப்போது ஆர்வமிருப்பவர்களுக்கு சற்று ஆராய்ச்சி விஷயங்கள் கூறி, சில ஒலிக்கோப்பு உதாரணங்களுடன் இப்பாகத்தை முடிக்கிறேன்.

தானம் என்றால் அனந்தம். முடிவில்லாதது. பரதமுனிவர் தானத்தை ஒரு வகை மூர்ச்சனையாகத்தான் (ஸ்வரக்கோர்வை) கருதியுள்ளதாக தெரிகிறது. ஆனால் பின்னால் சாரங்கதேவர் தன்யந்தே விஸ்தார்யந்தே இதி தானஹ எனும்போது தானம் என்பது விஸ்தாரமாக, விவரமாக செய்யப்படவேண்டியது என்று புரிகிறது. டாக்டர் வேதவல்லி தானத்தை பற்றி பலவிஷயங்களை தன் Ragam Thanam Pallavi – their evolution, structure and exposition (1995) புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் ஆலாதிகளில், கட்டாலாதி தா அ  அ  ந அ  அ  தத் தத் தா அ  அ  நம் தத் தா அ  அ  என்று சிறு ஸ்வரக்கோர்வைகளாக ஒலிக்கையில், இன்று இருக்கும் தானம் வடிவத்திற்கு ஒப்பானது என்று குறிப்பிடுகிறார்.

தானத்தை மத்தியமகாலத்தில்தான், மிதமான வேகத்தில்தான் பாடவேண்டும் என்று ஒரு நியதி இருக்கிறது. அப்பொழுதுதான் கேட்க நன்றாக சுகமாக இருக்கும் என்று. இல்லை, பல  காலப்பிரமாணங்களில் பாடலாம் என்றும் ஒரு கட்சி இருக்கிறது. அட்லீஸ்ட் மூன்று வேகங்களில் (த்ரிகாலத்தில்) பாடமுடியும். மெதுவாக பாடுவதற்கு ராக ஞானம் சூட்சமங்கள் வேண்டும். வேகமாக பாடுவதற்கு அப்பியாசம் தேவை.

மேலே சிந்து பைரவி பாட்டு கூட அநேகமாக மத்தியமகாலத்தில்தான் இருக்கும். கேரளத்தில் ஸ்வாதித்திருநாள் குடும்பத்தவரின் நவராத்திரி உற்சவத்தில் தானம் தாளத்துடன் மத்தியமகாலத்தில் பாடப்படும். சிலசமய ம் மிருதங்கம் துணையுடன். கீழே டாக்டர் எஸ்.ராமநாதன் பாடியுள்ள காம்போஜி ராக தானத்தின் தொடக்கம். மத்தியமகாலத்தில் மிருதங்க பக்கத்துடன் (வயலின் வாசிக்கையில் மிருதங்கம் நன்றாக கேட்கும்).

முன்னர் குறிப்பிட்டபடி வேதவல்லி மத்தியமகால தானத்தில் நிரம்ப அப்பியாசம் பெற்று தேர்ந்தவர், சிறந்தவர். கேட்கையில் நம்மை அறியாமல் கண்ணைமூடியபடி எழுந்து ஆடவைத்துவிடுவார்.

சேஷகோபாலன் போன்றோர் பல  காலப்பிரமாணங்களில் தானம் செய்து உலுக்கிவிடுவர். கேட்கும் நமக்கும் வியர்த்துகொட்டிவிடும். இதோ ஒரு சேஷு ஸ்பெஷல்.

அதேபோல ராகங்களுக்கு ஏற்றவாறு தானத்தின் வெளிப்பாடு சற்று மாறும். நாட்டை ராகத்தை உடைத்து உடைத்து ஸ்வரத்துண்டுகளாய் தானம் பாடுவது நன்று. எளிது. ஆனால் வராளியை இழுத்து இழுத்துதான் பாடவேண்டும். இதற்குமேல் வார்த்தையில் இதை விளக்கமுடியாது. வீணையில் மைசூர் துரைசுவாமி ஐயங்கார் வாசிப்பதை கேட்டுப்பாருங்கள்.

1) நாட்டை

2) வராளி

தானம் பாடுவதின் அடிப்படை தான வர்ணங்களில் உள்ளது என்று கொள்ளலாம்.இவ்வர்ணங்களில் வரும் சாஹித்திய வார்த்தைகளை நீக்கி தானக்‌ஷர  அனந்தம் வார்த்தையை உடைத்து பொறுத்தி பாடினால் தானம் போலவே இருக்கும். இவ்வகையில் பச்சிமிரியம் ஆதியப்பா இயற்றிய பைரவி ராக விரிபோணி வர்ணம், தான வர்ணம்.இதை ராகம் (ஆலபனை), தானம் செய்து பிறகு பிரதானமாக டி.எம்.கிருஷ்ணா 2008 அகதெமி கச்சேரியில் பாடியது பொருத்தமே. பிரதான அங்கத்திற்கான அனைத்து விஷயங்களூம் கொண்டது இப்பைரவி ராக வர்ணம். என் போன்ற விமர்சன அல்லக்கைகளை விட்டு, விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள். ஏன் வர்ணத்தை பிரதான உருப்பிடியாக பாடுகிறார் என்று, சபையில் ரசிகர்களாய் நாம் விஷயம் பிடிபடாத ஆச்சர்யத்தில் புருவத்தை உயர்த்தலாம். முகத்தை சுளிப்பது, அறியாமை கலந்த ஒருவகை அடாவடித்தனம்.

*****

ராகம் தானம் பல்லவி – பாகம் 1

Standard


ஆழ்வாரின் கிளரொளி இளமையொத்த தற்கால கச்சேரி மூட்டைகளில் வழக்கொழிந்துபோய்கொண்டிருக்கும், கர்நாடக சங்கீதத்திற்கு இன்றியமையாத அங்கங்களில் ஒன்று, ராகம் தானம் பல்லவி. சுருக்கமாக ரா.தா.ப. (RTP). சென்ற வருடத்தில் சொல்வனம் இணைய இதழில் கட்டுரைத்தொடராய் இதைப்பற்றி எழுதிக்கொண்டிருந்தேன் (தொடர் இன்னும் முடியவில்லை). இவ்வலைப்பதிவில் என்னைத்தொடர்ந்து வாசித்துவருபவர்களுக்காகவும், தமிழில் எழுதியவைகளை ஓரிடத்தில் திரட்டும் முழுமைக்காகவும் இங்கு  சொல்வனம் கட்டுரைகளின் சற்று திருத்திய, பத்திகளை விளக்கங்களை சற்று மாற்றியமைத்த வடிவத்தை வெளியிடுகிறேன். மூலத்தை என்றும் சொல்வனத்தில் படித்துக்கொள்ளலாம்.

கட்டுரைத்தொடரில் கர்நாடக சங்கீதத்தையே அறிமுகத்தளத்தில் விளக்க முற்படவில்லை. அதைப்பற்றிய கேள்வியறிவும், அதைக் கேட்பதற்கான நாட்டமும் உள்ள ரசிக வாசகர்களிடம் கச்சேரியின் பிரதான உருப்படியான ரா.தா.ப. வை பற்றி ஒரளவு விவாதித்து, விமர்சித்து, ரசித்து, திரையிசை உதாரணங்களையும் இல்லார்வல விளக்க வீடியோக்களையும் உபயோகித்து, அறிமுகப்படுத்துவதே நோக்கம். அதாவது, ராகம் தானம் பல்லவியை ஏற்கனவே இசை தெரிந்தவர்களுக்காகத்தான் அறிமுகம் செய்கிறது. அதில் சந்தேகம் வேண்டாம். எவ்வளவு தெரியவேண்டும் என்பதில்தான் அபிப்பிராயபேதம். சில சங்கேதவார்த்தைகள் புரிதலுக்கு இடையூறு போல் தோன்றும். உதாரணமாய், சௌககாலம் என்று கட்டுரையில் வரும் சங்கீத பிரத்யேக வார்த்தைக்கு சட்டென்று அர்த்தம் தெரியவில்லையென்றால், அதை விடுத்துக் கடந்து படித்துக்கொண்டே சென்றாலும்  ஓரளவு கட்டுரை விஷயங்கள் புரியுமாறே அமைத்திருக்கிறேன்.

ஆனால் இசையை படித்தே புரிந்துகொள்ளமுயல்வது, நீச்சலையோ சைக்கிளோட்டுவதையோ புத்தகத்தில் மட்டுமே படித்துவிட்டு கற்க எத்தனிப்பதைப்போன்றது. சைக்கிளோட்டுவது எப்படி என்ற புத்தகத்தில் சைக்கிளைபற்றி ஹாண்டில்பார், பால்ரஸ், பெடல் என்று அன்றாடம் அதுவரை பேசும் மொழியில் இல்லாத சில சைக்கிள் ஓட்டும் துறை சார்ந்த வார்த்தை பிரயோகங்கள் இருந்தே தீரும். ஹாண்டில்பார் என்றால் என்ன என்று சந்தேகம் வரலாம். சைக்கிள் பற்றி தெரிந்தவரிடம் கேட்டுதெரிந்துகொள்ளலாம். ஆனால் விளக்குபவர் சைக்கிள் முன்னாடி வளைந்து கையால் பிடித்துகொள்வதுபோல் இருக்குமே என்று விளக்குகையில் அவர் கேள்விகேட்பவர் சைக்கிளை ஏற்கனவே பார்த்திருப்பார் என்றே விளக்குகிறார். இல்லையெனின் இவ்வகை விளக்கம் வீண். அதுபோல்தான் என் ரா.தா.ப.. கட்டுரை அறிமுகமும். கர்நாடக இசை சற்றேனும் கேட்டிருக்கவேண்டும். ராகம், ஆலாபனை ஸ்வரங்கள், தாளம் போன்ற வார்த்தைகளின் இசை அர்த்தங்களுடன் பரிச்சியம் இருக்கவேண்டும். ரா.தா.ப.. என்பதை மட்டுமே விளக்குகிறேன். கர்நாடக இசையையே அல்ல.அதையும் செய்யலாம், ஆனால் தனிக்கட்டுரைகளில்.

அதனால், சிலவார்த்தைகள் புரியவில்லை என்றால், கவலையின்றி, அவ்வார்த்தைகளை விட்டுவிட்டு நம்பிக்கைவைத்து சைக்கிளை குரங்குபெடல் அடித்தாவது ஓட்டிப்பாருங்கள். முடிந்தவரையில் கட்டுரையை அப்படித்தான் அமைக்கமுயல்கிறேன். ஆனால் கூடவே உங்கள் பங்கிற்கு ரா.தா.ப. வருகிற சில கச்சேரிகளுக்கு நேரடியாக செல்லுங்கள் (சேஷகோபாலன், சஞ்சய், ரவிகிரண், காயத்ரி, டி.எம்.கிருஷ்ணா போன்றோர் அநேக கச்சேரிகளில் செய்வர்). வயதான தாத்தா பாட்டிக்கள் அருகில் அமருங்கள். இதுதான் ரா.தா.ப. வா என்று தயங்காமல் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள். இல்லை ஒத்தவயதுடைய இசைநண்பர் அழைக்கையில் ஒரு கச்சேரிக்காவது உடன் செல்லுங்கள். அவரை கேட்கவிடாமல் சன்னமாய் கேள்வி கேட்டுதுளையுங்கள். கை தட்டுகையில், ஆஹா பேஷ், உச் உச் என்கையில், ஏன் எதற்கு எந்த விஷயத்தை பாரட்டுகிறாய் என்று கேட்டு (அவர் மேடையில் இசையை ரசித்திருக்கும் பட்சத்தில்) தெரிந்துகொள்ளுங்கள். சைக்கிளோட்டுவதுபோல சில சிராய்புகளுக்குப்பின் கர்நாடக இசை கேட்பது நிச்சயம் பிடிக்கும். ஒரே முக்கிய தேவை பொறுமை. மீண்டும் இக்கட்டுரைகளை படிக்கையில் ரா.தா.ப. அறிமுகம் புரிதலை மேம்படுத்த உபயோகமாகலாம்.

சிலவற்றை விளக்காமல் விடுவதற்கு அடுத்த காரணம், நான் இங்கு எழுதுவது அனைத்தையும் பாடமாக விளக்கி நூற்றாண்டுகளாக ஏற்கனவே பல  இசைப்புத்தகங்கள் உள்ளன. மொத்தத்தையும் ஒரே (அல்லது மூன்று நான்கு) கட்டுரையில் இங்கு என்றால், என்றால் என்று விளக்குவதன் மூலம் நாம் புரிந்துகொள்ள முற்படுவது சரியல்ல. கூடவே இசையை கச்சேரியில் சென்று நிறைய கேட்கவேண்டும். மேலும் அப்படி விளக்க முற்பட்டால் நீ பெரிய குடுமியா, கர்நாடக இசையை காலை காப்பியில் கலக்கி அடித்த இவனாட்டம் ஜெர்க்விட்டு போரடிக்கிறாப்போல பாடம் நடத்தரே என்று அயர்ச்சியில் எண்ணவைக்கும்.

தமிழர்களின் கலைப்பொக்கிஷமான கர்நாடக இசை, கட்டுரை வார்த்தைகளின் பாதிப்பை தாண்டியது. என் குறை எழுத்து ஏற்படுத்தும் சாதக பாதக மனக்கிளர்ச்சியை விடுத்து, ஊடுருவி, இசையை மட்டும் அணுகுங்கள். அதுதான் நிஜப்பயன்.

இனி ரா.தா.ப. பற்றி விவாதிப்போம்.

*****

ஒரு நூற்றாண்டிற்கு முன் ராகம் தானம் பல்லவி தான் கச்சேரியை தொடங்கியதாம். பல  வேளைகளில் ஒரே பல்லவியே மொத்த கச்சேரியாகவும் வியாபித்து பரிமளிக்கும். ஆனால் இக்கால – முக்கியமாக, சென்னை டிசெம்பர் சீசன் – கச்சேரிகளை கவனித்தால், பெரும்பாலும் இப்படி அமைந்திருக்கும். 1 வர்ணம், 1 சப் மெயின், 1 மெயின் உருப்படி், 1 சொதப்பல் முயற்சி (புது ராகம், இல்லை கீர்த்தனை), 1 அபார முயற்சி (அந்த சீசனிற்கு கலைஞரின் உழைப்பு), 3 துக்கடா, 2 பஜன், 1 மங்களம் (ரசிகர்கள் எழுந்து செல்வதற்கான பின்னனி இசை) ஆகிய பத்துப்பாட்டு. இவ்வகை கச்சேரிகள் அனைத்து தர கர்நாடக ரசிகர்களையும் திருப்தி செய்யும், இரண்டரை மணி நேர, தலை கலையாத, நேர்வகிடு சமாச்சாரங்கள்.

நகர வாழ்கையின் அவசர கதி சிலுவையில் அறையப்பட்டுள்ள இக்கச்சேரிகளில் விஸ்தாரமான இரண்டு மணிநேர ராகம் தானம் பல்லவியை எதிர்பார்ப்பது அறிவியல் துறைகளில் இந்தியாவிலிருந்தபடியே இந்தியர் நோபல் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு ஒப்பானது. என்றாவதே நடக்கலாம்.

இத்தேய்மானம் ஒன்றும் புதிதல்ல. ஒருவிதத்தில் தற்கால சங்கீதகச்சேரி என்ற அமைப்பே அரியக்குடியார் ஐம்பதுகளில் (1950) கொண்டுவந்த கர்நாடக சங்கீத தேய்மானம்தான். இதனால் விஸ்தாரமாய் நுணுக்களை கவனித்து கேட்டு புரிந்துகொள்ளுமாறு மணிக்கண க்கில் ஒருசில கீர்த்தனைகளையும் ராகங்களை மட்டுமே பாடிவந்த முறை க்ஷீனித்தது என்பர்.

நாள் முழுக்க சில பாட்டுக்களே விஸ்தரித்து பாடி, நுணுக்கங்களை அனுபவிப்பதற்கான உல்லாச நேர அவகாசங்களும், சங்கீதக்கலையைத்தான் பொழுதுபோக அனுபவிக்கவேண்டும் என்ற தேவைகளும் தொழில்நுட்ப விழிப்புற்ற மக்களிடையே குறைந்து வருகிறது. சில பாட்டுக்களை மட்டும் பாடி, கர்நாடகசங்கீதத்தை கேட்கும் மக்கள் எண்ணிக்கையை போரடித்தே குறைக்கக்கூடாது என்றுதான், விஸ்தாரமான யானைக்கட்டி போரடித்தால் ரசிகர்க்கு மாளாது என்று துரித குதிரைகட்டி போரடிக்கப்பார்த்து, மூன்று நான்கு மணிநேர பலசரக்கு உருப்படிகள் அடங்கிய கச்சேரி என்று அரியக்குடியார் கொண்டுவந்தார்.

மேலும் சில மணி நேரங்களே பிடிக்கும் கச்சேரி முறையில் கலைஞர்கள் சங்கீதத்தை ஊர் ஊராய் சென்று வயிற்றுப்பொழைப்பாக செய்ய முடியும். மாதத்தில் பல கச்சேரிகள் செய்யலாம்.அதேபோல் இசை கேட்கும் ரசிகர்களும், குவித்து, பாத்திகட்டி சாம்பார்சாதத்தை மட்டுமே வெட்டி நாக்கு செத்துபோய் சாப்பிடுவதையே குறைத்துக்கொள்ளாமல், இலையில் பல பதார்த்தங்களை பார்க்கையில் பசி வள ரும்.சில புரியாத பதார்த்தங்கள் இருந்தாலும், புரிபவையும் இருப்பதால், விரும்பி பலமுறை சாப்பிடுவார்கள்.

இக்கச்சேரி அட்டவணையை எழுபது என்பதுவரையில் டெஸ்ட் மாட்சுகளாக விஸ்தரித்து ஆடிவந்தவர்கள், சமீபகாலங்களில் ஐந்து நாள் டெஸ்ட் மாட்ச் பாணி கச்சேரியை வழக்கொழித்து, ஒருநாள் ஆட்டமாக்கி, இப்போது டுவெண்டி டுவெண்டியில்தான் காசு புரள்கிறது, என்று சுருக்கியுள்ளனர்.

கச்சேரிகளை மட்டும் நம்பி பொழப்பை நடத்தும் வித்வான் பாப்புலராக இருக்கவேண்டுமெனில் சில அநாவசியங்களை, அனுசரித்தல்களை இன்று செய்யத்தான் வேண்டும் என்பது ஒரு கூற்று. கூடவே சில அவசியங்களை தேவைக்கதிகமாய் செய்யாமல் போகிறார்கள். ராகம் தானம் பல்லவியை பாடாதது போல.

(RTPஐ) அவாளே வேண்டாம்னுட்டா சார், அதுக்கு பதிலா துக்கடா செட் பாடிட சொல்லிட்டா என்று வித்வான்கள் கூறும் சால்ஜாப்பில் ஓரளவு உண்மையுமிருக்கிறது. சீசன் சமயத்தில் பல சபாக்களில், ராகம் தானம் பல்லவியை வித்வான் கச்சேரியின் அங்கமாய் விஸ்தாரமாய் பாடுவதற்கு, காரியதரிசிகள் முகம் சுளிக்கிறார்கள். வியாபார நேர விரயம் என்று.

ஆந்திராவில் பொதுவில் இப்படி இல்லையாம். இங்கு கச்சேரிகளில் நிச்சயம் பல்லவி பாடுகிறார்கள். ஒருவேளை டிசம்பர் சீசன் எனும் கமர்ஷியல் அளவுகோல் இல்லை என்பதாலா? இன்னொரு கூற்று ஆந்திராவில் கர்நாடக இசை கேட்கும் மக்கள் தமிழ்நாட்டைவிட கம்மி, ஆனால் சுத்தம்; சாஸ்திர இசை நீர்க்கடிக்கப்படுவதை விரும்புவதில்லையாம். பல்லவிகளும் இன்னமும் பிழைக்கிறது. சமீபகாலமாக நான் கேட்டுவரும் ஆந்திர பாடகர்கள் பந்துலராமா, மண்டா சுதாராணி, கர்நாடகா பாடகி எம்.எஸ்.ஷீலா, என்று அனைவரும், மேலேயுள்ள கூற்றை மெய்பிக்குமாறு, தங்கள் அனைத்து கச்சேரிகளிலும் பல்லவி பாடியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பல கச்சேரிகளில், கூட்டம் சேர (இல்லை அடுத்தமுறை வர) அநேகரை திருப்திபடுத்தவேண்டும். இதற்காக கடினமான விஷயங்களை சற்று ஒதுக்கி, இசையையே நீர்க்கச்செய்கிறோம். இதில் முதலில் அடிபடுவது RTPயே. ஒன்று மொத்தமாய் தூக்கிவிடுகிறோம். இல்லை இடக்கு ராகத்தில் சிறு பல்லவியாய் திஸ்ர தாளத்தில் 20 நிமிடத்திற்குள் சுருக்க முடித்துவிடுகிறோம். வேண்டாவெறுப்புடன் தீபாவளி மருந்து சாப்பிடுவது போல.

மேட்டிமைவாதம் என்று ஆந்திராவை சாடுவதா, எளியோர்க்கு எளியோனாய் RTPஐயே பெரும்பாலான கச்சேரிகளில் தூக்கிவிடும் தமிழ்நாட்டை பாடுவதா.

கலைஞன் தேய்ந்தால், ”சிந்து பைரவி” உட்பட, சில காரணங்களே. கலை தேய்ந்தால் சமுதாயம் மொத்தமும் பொறுப்பே.

1965இல் ஆலத்தூர் வெங்கடேச ஐயர் கலாநிதியாக கௌரவிக்கப்படுகையில் ஆனந்தவிகடனில் பல்லவி என்றாலே கேண்டீன் பக்கம் ஒதுங்கிவிடும் ரசிகர்களை, தன் பல்லவிகளால் சபைக்கு இழுத்தவர் என்றவிதமாய் சிலாகித்திருந்தனராம். பல்லவி பாடினால் கேட்கமாட்டார்கள் என்று ரசிகர்களை முட்டாளாக்குவது, உழைக்க நேரமின்றி, பொழைக்க சொல்லும் நொண்டிச்சாக்கு. தற்கால கர்நாடக இசையின் டாப் டென் மோசடிகளில் ஒன்று (மிச்ச மோசடிகளை பிறகு தனிக்கட்டுரையாக்குவோம்).

*****

கட்டுரை மொத்தமும் இவ்வகையில் அங்கலாய்த்து, குறைபட்டுக்கொள்ளும் விமர்சனமாய் எழுதப்போவதில்லை. நல்லதை பல தடவை சொல்லலாம். இணையத்தில் அநேகமாக தங்காது. நல்லதல்லாதவற்றை சொல்லாமல் விட்டுச்செல்வது உத்தமம். சொன்னாலும் சுருக்கமாக சொல்லி தாண்டிச்செல்வது மத்தியமம். இப்படி செய்தாலும், நீ அன்று அப்படி குறை சொன்னியே என்று நினைவூட்டிக்கொண்டிருப்பது அதமம். இணையத்தின் சாசுவதத்தில் அதமம் கோலோச்சியிருக்கிறது என்றாலும், நம்பிக்கை வைத்து நல்லதை மட்டும் அதிகம் சொல்லுவோம்.

போதும் குறை. இப்போது நிரை.

ராகம் தானம் பல்லவி என்றால் என்ன? அறிமுகதளத்தில் விளக்குவோம்.

ராகம் தானம் பல்லவி – சுருக்கமாக RTP – கச்சேரியின் பிரதான அங்கம். இது கீர்த்தனை, அதாவது பெரிய பாட்டு, இல்லை. சிறு பாட்டு வரிகள் மட்டும் உடையது. பெயருக்கேற்றவாறு RTPயில் முதலில் எடுத்துக்கொண்ட ராகத்தில் ஆலாபனை செய்யப்படும். ஒரு ராகமாகவோ, பல ராகங்களகவோ இருக்கலாம். ஆனால் அனைத்தையும் விஸ்தரித்து ஆலாபனை செய்யவேண்டும். பாடுபவரும், பக்கவாத்ய வயலின் வித்வானும் ஆலாபனை கூறுகளை ஓரிருமுறை பரிமாறிக்கொள்வர்.

பேராசிரியர் சாம்பமூர்த்தி தன் இசைப்புத்தகத்தில் (South Indian Music, Book IV) ஆக்‌ஷீப்திகா (அறிமுகம்), ராகவர்தினி (விவரிப்பு), ஸ்தாயி மற்றும் மகரினி (முடிவுரை) என்று பலவகை ஆலாபனை வழிமுறைகளை கூறி, RTPயில் ஆ லாபனை முக்கால் மணிநேரம் இருக்கலாம் என்கிறார். ஜி.என்.பி. காலத்தில் ஷண்முகப்பிரியா ராகத்தில் முக்கால் மணிநேரம் இருந்திருக்கிறது. இன்று இத்தெம்பு இள வித்வான்கள் பலரிடம் இல்லை. அப்படியே ஒரு 15 நிமிடம் உழைத்துப் பாடினாலும் ரசிகர்கள் சிலரிடமே ஒருமுகப்படுத்தி கேட்கும் தெம்பும் இருக்கிறது. தலை ஆடுவது நின்று, கால் ஆடி, பிறகு கை நடுங்கி, வாவ், ஃபுல் ஸெட் மா என்று எஸ்ஸெம்மெஸ்ஸிக்கொள்கிறார்கள். இல்லை தரஸ்தாயியில் ஆசுவாசிக்க பாடகர் சற்று மூச்சுபிடித்து நின்றால், அவசரமாய் கைதட்டி நடுக்கத்தை குறைத்துக்கொள்கிறார்கள்.

தஞ்சாவூர் எஸ் கலியாணராமன் நாட்டைகுறிஞ்சி ராகம் தொடக்கம் ஒலிக்கோப்பு.

மேலே ராகம் ஆலாபனை தொடக்கம். நீர் திரையிசை மட்டும் கேட்பவராயினும், ஆலாபனை முதலடி தொடங்கியதும் (இல்லை ஒரிருமுறை கேட்டதும்)  ஆ, இது கண்ணாமூச்சி ஏனடா (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) மாதிரி இருக்கே என்று கண்டுகொண்டால், கர்நாடக இசைக்காதுகளை அமர்களமாய் பெற்றிருக்கிறீர்கள். அடுத்த சீசனில் ஒரு முழுக்கச்சேரியாவது தைரியமாய் கேட்கலாம். ரசிப்பீர்கள்.

இப்படி ராகத்தை சில பரிச்சயமான, ஆதாரமான, பிடிகள் (ஸ்வரக்கோர்வைகள்) வைத்து உடனே கண்டுகொள்ளுமாறு ஆலாபனை முதலில் அறிமுகம் செய்யவேண்டும். இதைத்தான் ஆக்‌ஷீப்திகா (அறிமுகம்) என்பதில் நியதியாக்கியுள்ளனர்.

போதும். அடுத்து தானம்.

தானம், ஆனந்தம் போன்ற சொற்களையும், அவ்வப்போது தானம்த, அனம்த, தானன்ன, தானம்ன என்ற சொற்களையும் வைத்துக்கொண்டு ராகத்தை விஸ்தரித்து பலவகை கால அளவிலும், கதியிலும் பாடுவார்கள். சஞ்சய் சுப்பிரமணியன் போன்றோர் இன்று சதானந்தம் போன்ற சொற்களையும் ஸ்வராக்‌ஷரமாக (ஸ  – தானந்தம்) சேர்கிறார்கள்.

பல வகை தானங்கள் இருக்கிறன. சாம்பமூர்த்தி மானவ, அஸ்வ, கஜ,, மயூர, மண்டூக என்று மிருகங்களின் பெயர்களுடைய தானங்களையும், சக்ர, வக்ர, மிஸ்ர, மாலிக, கம்பீர, வித்ய தானங்களையும் குறிப்பிடுகிறார். உதாரணமாய், சக்ர தானத்தில் வளையமாய் ஸ்வரங்களை கோர்த்து அதிவேகத்தில் தானம் செய்வதாம்.

பொதுவில் சௌககாலத்தில் ராகத்தை மெதுவாய் விஸ்தரித்து ஆலாபனை செய்திருக்கையில், மத்தியமகாலத்தில், அதாவது மிதவேகத்தில் தானம் செய்வது ஸொஸ்தமானது. தற்காலத்தில் வேதவல்லி இவ்வகை தானத்தில் கில்லாடி, இல்லை கில்லேடி.

எஸ்.பாலசந்தர் வீணையில் தானம் ஒலிக்கோப்பு

தானம் வீணையில் சுகிர்தமாய் சுநாதமாய் வரும். நாகஸ்வரம் சற்று தடுமாறும். மேலே ஒலிக்கோப்பில் எஸ்.பாலசந்தரின் காம்போஜி ராக மத்தியமகால (மிதவேகத்தில்) தானப் ப்ராபல்யத்தை கவனித்திருப்பீர்கள். இது தொடக்கமே. இப்படியே போய் வீணை வயலின் பொறிபறக்கும் தானக்கோர்வை பரிமாற்றங்களில், 15நிமிடம் கழித்து உச்சத்தில், மூச்சுவிட மறந்து, சீட்டின் நுனிக்கு வந்து எழுந்துவிடாமல் கெட்டியாய் பிடித்துக்கொண்டு…  யாராவது சத்தமாய் இருமுவார்.

இப்போதெல்லாம் செல்போன் அடிக்கிறது. எடுத்தும் பேசுகிறார்கள் (நா கச்சேரில இருக்கேண்டி…)

பெண்கள் ஒருகாலத்தில் தானம் செய்யாமல் அல்லது செய்யவிடப்படாமல் இருந்தார்கள். பிரபலமான பிருந்தா முக்தா போன்றோர் பெரிதாக தானம் பாடியதே இல்லை. இவர்கள் ஸ்வரகல்பனை செய்வதையே தவிர்த்தனர் என்றும் கூறுவர். ராகம் கீர்த்தனை, பதம் ஜாவளி என்று போய்விட்டனர். பெண்களுக்கு கணக்கு வழக்கு அறிவு கம்மி, இதெல்லாம் எதற்கு இவர்களுக்கு என்று ஒரு காலத்தில், கர்நாடகசங்கீதம் பாமரர்களுக்கு தேவையில்லை என்கிற மேட்டிமைவாதத்தின் நீட்சியாய் ஒரு உப முடக்குவாதம் பேசியிருக்கிறோம்.செயல்படுத்தியும் இருக்கிறோம்.

எனக்கு தெரிந்து இதை உடைத்து தானம் பாடலாம், பெண்களும் RTP செய்யலாம் என்று காட்டியவர் டி.கே. பட்டம்மாள். ஆனால் இவரால் அனைத்து RTP வகையராக்களுக்கும் முழுமையாக கைங்கர்யம் செய்யமுடியவில்லை என்றே கூறுவேன். பிறகு எம்.எல்.வசந்தகுமாரி, வேதவல்லி, சுகுனா புருஷோத்தமன் என்று பலர் ராகம் தானம் பல்லவியில் ஆதிக்க கொடி நட்டனர்.

இன்று தமிழ்நாட்டில் சௌம்யா, சுதா ரகுநாதன், வசுந்த்ரா ராஜகோபால் போன்றோர் நல்ல லய ஞானத்துடன், கையில் என்ன கடின தாள ம் வேண்டுமானலும் நிற்கும் என்று காட்டி, அரிதான ராகங்களிலும் சமயம் அமைகையில் RTP செய்கின்றனர். உதாரணமாய், 2009 அகதெமி கச்சேரியில் சௌமியா, வர்தனி என்கிற அரிதான  ராகத்தில் அருமையாக RTP செய்தார். ஆலாபனை ஒலித் துண்டுகளை கேட்டுப்பாருங்கள்.

சௌமியா வர்தனி ராகம் ஒலிக்கோப்பு.

இந்த சுட்டியில் இருக்கிறது; கட்டுரையில் கேட்குமாறு நுழைக்கவேண்டும்

ராகம், தானம், பிறகு பல்லவி. பொதுவாக இரண்டு வாக்கிய சாஹித்தியம் அல்லது பக்தி போன்ற ரஸங்கள் மிளிரும் சொற்கள். இதை முன்னர் ராகம் தானம் என்று விஸ்தரித்த ராகத்தில் மெட்டமைத்து, தாளம் அமைத்து பாடவேண்டும்.

பல்லவி என்றால் பதம் லயம் வின்யாசம் (ப-ல-வி) இவற்றின் கூட்டு என்பர்.பதம் என்றால் சாஹித்தியம் அல்லது பாட்டு வரிகள். லயம் என்றால் என்ன தாளம், கால இடைவெளிகளில் பாடுகிறோம் என்பது. வின்யாசம் என்றால், கற்பனைவளஞ்செரிய ராகத்தையும், லய கணக்குகளையும் இசையாய் வெளிக்காட்டுவது.

பல்லவிகள் பலவகை. திரப்படப்பாடல்களில் வரும் முதல் இரண்டு வரிகள் அனைத்தும் பல்லவிகளே. கீர்த்தனைகளிலும் இவ்வாறே. RTPக்காக பிரத்யேகமாக பல்லவிகளும் உண்டு. அதீத, அனாகத எடுப்பு பல்லவி, கோபுச்ச பல்லவி, ஷட்கால பல்லவி, ராகமாலிகை பல்லவி என்று பலவகையாக பார்க்கலாம்.

பிரபலமான சதுர் ராகமாலிகை பல்லவியை கூறி இக்கட்டுரையை முடிப்போம். சதுர் என்றால் நான்கு; நான்கு ராகங்களில் அமைந்த பல்லவி. சிறப்பு, ராகங்களின் பெயர்களையே சாஹித்தியமாக, பாட்டின் வார்த்தைகளாக பொருள்பட அமைந்துள்ள பல்லவி.

சங்கராபரணனை அழைத்தோடி வாடி கல்யாணி தர்பாருக்கு

எந்த நான்கு ராகங்களில் இதைப்பாடவேண்டும் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். இசைக்கலையின் சாஹித்திய கற்பனைத்திறனின் வெளிப்பாடு.

அரியக்குடியாரின் இப்பல்லவியை விடியோ வழியே ஆடியோவாக கேட்டுமகிழுங்கள். விரிவாக இதையே அடுத்த பகுதியில் பார்ப்போம்.

http://www.youtube.com/watch?v=lT9nD9C1gQc

பல்லவி பாடுகையில், இடையே நிரவல் (சாம்பமுர்த்தி, நிறவல் என்கிறார்), ஸ்வர கோர்வைகள், கணக்குகள், அனுலோமம், பிரதிலோமம் (இதைபற்றி விரிவாய் அடுத்த கட்டுரையில்) போன்ற ஸ்வர லய விற்பன ங்களை கடந்து ராகமாலிகா என்ற நிறைவு பகுதியில் முன்கூறிய பல்லவியை பல ராகங்களிலும் தாளத்திற்கேற்ப பாடி முடிக்கவேண்டும். பிறகு பக்க வாத்தியங்களின் தனி ஆவர்த்தனம், முடிவில் பல்லவியை மீண்டும் ஷட்காலத்திலும் (அமைந்திருந்தால், இல்லை த்ரிகாலத்தில்) பாடி நிறைவுசெய்யவேண்டும்.

ஒழுங்காய் விஸ்தாரமாய் செய்தால் RTP மட்டும் குறைந்தது ஒன்றரை மணிநேரம் ஆகும். தேர்ந்த இசைக்கலைஞர்களுக்கு ஆங்காங்கே உற்சாகம் கரைபுரண்டால் தேர்ந்த ரசிகர்கள் இருக்கும் சபையில் இரண்டு மணிநேரம் போவதே ஒருவருக்கும் ஸ்மரனிக்காது.

*****