இலக்கியம் இசையும் வயது

Standard

ஒவ்வொரு கலை இலக்கியப் படைப்பிற்கும் ஒரு வயது உள்ளது எனத் தோன்றுகிறது. அப்படைப்பு தன்னியல்பாய் ஒருமித்து வெளிப்படுத்தும் வயது. அவ்வயதோடு நாம் அதை அணுகுகையிலேயே அனைத்துப் பரிமாணங்களோடும் அப்படைப்பு முழுவதுமாய்த் திறந்துகொள்கிறது எனலாம். சமவயதினரோடான நட்பிலன்றோ ஆளுமையை உரித்து உளமாற உறவாடும் வாய்ப்பு அதிகமாகிறது.

இலக்கியப் படைப்பின் வயது நமக்குக் காலத்தால் ஆகியிருக்கும் வயதால் ஆவதன்று. அனுபவங்களினால் வருவது எனலாம். ஆன்னா கரனீன்-னில் இருந்து அதிகம் பெருவதற்கான வயது ஒரு டப்ளினர்ஸ்- வழங்கும் அனைத்தையும் பெருவதற்கான வயதைவிடப் பல வருடங்கள் அதிகம் என்றே தோன்றுகிறது.

இலக்கியப் படைப்பின் இந்த ஒருமித்த வயதைக்காட்டிலும் குறைவான வயதோடு அதை அணுகுகையில், நம்மைவிட வயதான அப்படைப்பின் முழுத் திறவாமையை ஏற்க இயலாமல், குறைவயது நமக்களித்துவிடும் இயல்பான அனுபவ முதிர்ச்சியின்மையில் படைப்பைத் தூக்கியடிக்கவே, ஓரங்கட்டவே, நிராகரிக்கவே முயல்வோம். பெற்றோர் பெரியோர் பேச்சை எண்ணங்களை குணநலன்களை சக வயது நண்பர்களுடன் விமர்சித்து ஏற்காதிருப்பதைப் போல. புரியாதவை தேவையற்றவை, ஏற்கமுடியாதவை பயனற்றவை, அனுபவிக்க இயலாதவை உணர்வுகளற்ற கற்பனை… இவ்வாறான வயது வீழ்ந்து, காலப்போக்கில் நாமும் பெற்றோர் ஆவோம். மீண்டும் அனுகினால் படைப்பின் பலனைப் பெற்றோர் ஆவோம்.
Continue reading

இசை அறிதலின் பிழையான முன்மாதிரிகள்

Standard

ஜெயமோகன் தளத்தில் அருண் என்று ஒருவர் இன்று கேள்வி கேட்டிருக்கிறாரே, நீ தானா? அன்பர் போன் செய்தார்.

நான் எதற்கு எனக்குத் தெரியாதை அவரிடம் போய்க் கேட்கப்போகிறேன், அதற்குப் பதில் கூறுவதைத் தவிர அவருக்கும்  வேறு வேலைகள் இல்லையா… நினைத்துக்கொண்டாலும், என்ன கேள்வி? என்ன விஷயம்? என்கிறேன். பேஸ்புக்கே பற்றி எரிகிறதே… என்னனு தெரியாதா என்றார் அன்பர். இல்லையே, நீங்க பேஸ்புக்ல தலைய வுட்டுனுக்குறீங்க, நான் ஸென்ஹெய்ஸர் ஹெட்போனில் வுட்டுகினு எம்பாட்டுக்கு பாட்டு கேட்னுகிரேன் என்கிறேன்.

அன்பர் விளக்கிய பின்னர் விஷயம் புரியத் தொடங்கியது. டி.எம்.கிருஷ்ணாவிற்கு மகஸஸே விருது வழங்கப்பட்டிருப்பதைப் பற்றி ஜெயமோகனின் விமர்சனம் தொடர்பாக ஜடாயு என்பவர் எழுதியிருப்பதைச் சுட்டி ஜெயமோகனிடம் ‘இதைக் கவனித்தீரா? இதுக்கு இப்ப நீங்க என்ன சொல்றீங்க?’ வகையில் கேட்கப்பட்ட கேள்வி.

இல்லை அன்பரே, அந்தக் கேள்வியைக் கேட்ட அருண் நானில்லை. எனக்கு அவ்வகை அறிவு வாய்க்கவில்லை. முயன்று மொக்கையாவதற்கும் நேரமில்லை.

தொடர்ந்து ஜெயமோகன் அப்படி என்னதான் விமர்சித்துவிட்டார் என்று அவர் கட்டுரைகள் நான்கைப் படித்தேன். இசை மேல் இன்றளவும் ஓரளவு நாட்டமுள்ளவன் எனும் சுயதகுதியால் தான் அவ்வாறு செய்தேன் (இந்த விளக்கம் ‘உனக்குதான் ஜெ வலைதள எழுத்தே ஒவ்வாதே, எதுக்குப் போய்ப் படிச்ச?’ என்று கேட்கக் காத்திருக்கும் இரண்டு நண்பர்களுக்காக). அடிக்குறிப்பில் சுட்டிகளை அளித்துள்ளேன். அக்கட்டுரைகளை முழுவதுமாய் வாசிக்காமலும் கீழுள்ளதை வாசிக்கலாம். களம் முழுவதுமாய் விளங்காது.

Continue reading

விஷ்ணு மார்பின் பாரம் அகன்றது!

Standard

சென்ற வருடம் [ Feb 2014 ] விஷ்ணுவின் மார்ப்பைப் பிளந்து என்று கோயில்களினுள் நாம் இன்றும் (என்றும்?) காணும் உதாசீனங்கள் அக்கறையின்மை பற்றிப் புலம்பியிருந்தேன். உதாரணங்களாக அவ்வருடப் பயணங்களில் கண்ட சில காட்சிகளைப் பகிர்ந்திருந்தேன். அவற்றில் ஒன்றான ஸ்ரீரங்கம் கோயில் தாயார் சந்நிதியின் பிரகாரத்தில் ராமானுஜர் கூடத்தின் முகப்பில் தென்பட்ட காட்சியே என் கட்டுரைத் தலைப்பாகியிருந்தது.

vandal-1

‘விஷ்ணுவின் மேல் சிமெண்ட்’ செயல் அந்த வெள்ளி மண்டபம் செப்பனிட உதவிய உபயதாரர் (ஆத்திகர்) பெயர் பலகை வைப்பதற்கான பக்கவிளைவு.

vandal-1-c

எழுதிய சில தினங்களில் சார்பான ஒரு பதிவை [ http://www.jeyamohan.in/47180 ] ஜெயமோகன் தன் தளத்தில் எழுதியிருந்தார். ஓரிருவர் மின்னஞ்சலில் ‘உங்கள் அறியாமையை கண்டிக்கிறேன் (உதாசீனங்களுக்கு பக்தர்கள்தான் காரணம் என்று நான் எழுதிவிட்டிருந்ததால்). ஆனால், இவ்விஷயத்தை குறிப்பிட்டதற்கு நன்றி. கேஸ் போடப்போகிறோம்…’ என்று எழுதியிருந்தனர்.

ஒன்றரை வருடம் கடந்து, இருதினங்கள் முன்னர் (செப்டம்பர் 2015) ஸ்ரீரங்கம் கோயிலின் அதே இடத்தில் இருந்தேன். கண்டது இதை.

vandal-vishnu-2015-01

ஆமாம். விஷ்ணுவின் மார்பின் மீதிருந்து அந்த சிமெண்ட் விளம்பர உதாசீனம் களையப்பட்டுவிட்டது.

vandal-vishnu-2015-02

கலியுக ஆச்சர்யமே.

உப்புக்காகிதத்தால் தேய்க்கப்பட்டு மார்பும் மார்ப்பு சார்ந்த கல் தூண் பகுதிகளும் சுத்தமாய் உள்ளது. தரையின் சிறுகுழிப் பள்ளங்களில் தங்கிவிட்ட சிமெண்ட் மிச்சங்கள் மட்டுமே நடந்தேறியிருந்த உதாசீனத்தின் எச்சங்கள்.

விஷ்ணு பொறுப்பார்.

இனி?

One down, several more to care… அவற்றில் சில உதாசீன உதாரணங்கள் மேற்படிக் கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.

நம் மரபையும் அதன் சின்னங்களையும் பேணுவது நம் கடமை, உரிமை என்கிற அடிப்படை உணர்வு தொடர்ந்து நம்மிடம் ஆக்கபூர்வமாய் செயல்பட்டால்…

சரி, சரி, நிறுத்திக்கொள்கிறேன். இணையத்தில் நான்கு பத்தி எழுதுவதற்குள் நான் மட்டுமே எழுத்தாளன் என்று நிலை மயங்கி எழுத்து அறிவுஜீவனத்துவத்திற்குள் சென்றுவிடுகின்றது.

ஏற்கெனவே எழுதியதை வாசித்தோ கேள்விப்பட்டோ அவரவ தமதம தறிவறி வகைகளில் அக்கறையுடன் செயல்பட்ட  அனைவருக்கும் நன்றி என்று இங்கு எழுதிவைத்து நிறுத்திக்கொண்டால் போதும் என்றே தோன்றுகிறது. என்வழி இயல்வது எண்ணும் எழுத்துமே…

கட்டடங்களும் கோபுரங்களும்

Standard

எய்ன் ராண்ட் புத்தகங்கள், கருத்துகள் எதையுமே இதுவரை வாசித்திராத புத்திசாலி வாசகர்கள் அடுத்த மூன்று பத்திகள் தவிர்த்து வழக்கமான அவரவர் கவனம் அவகாசம் அவசரம் பொறுத்து கட்டுரையை நேரடியாக வாசிக்கலாம்.
*
அவர்களின் ரத்தக்கொதிப்பை அதிகரிக்க இக்கலிகால உலகில் அமெரிக்காவில் கூட பல அரைகுறைத்தனங்கள் பொதுநலச் சேவையாய் அறிவுஜீவியல்லாதவர்களால் அன்றாடம் நடந்தேறுவதால் இக்கட்டுரையையும் வாசிக்கவைப்பானேன் என்கிற சுயநலமற்ற altruist மனநிலையில் ‘எய்ன் ராண்ட் பக்தர்கள் வாசிக்க வேண்டாம்’ என்ற எச்சரிக்கை வாக்கியத்துடந்தான் கட்டுரையைத் தொடங்கவேண்டும் என்றிருந்தேன். ஆனால், உண்மையான எய்ன் ராண்ட் பக்தர்கள் எப்படியும் வேறு எவர் எழுதும் எதையுமே (அன்றும், இன்றும், என்றும்…) வாசிக்க மாட்டார்கள் என்பதால், எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியமில்லை என்றாகிவிடுகிறது.

அதனால், மற்ற எய்ன் ராண்ட் அபக்த அரைகுறை வாசகர்களுக்கு மட்டும் ஒரு முன்விளக்கம் அளிக்கிறேன். எய்ன் ராண்ட் தன் Fountain Head புத்தகத்தில் அதன் நாயகன் வாயிலாகக் கட்டடக் கலையைப் பற்றி சில கருத்துகளை முன்வைத்திருப்பார். இக்கட்டுரையின் நீளம் கருதி, ஒற்றை வாக்கியச் சுருக்கமாய் அக்கருத்துகளின் பிரதான வாதம் இதுதான்: கட்டடங்கள் அவற்றின் வடிவம் மனிதன் காண்பதற்கு ’அழகாய்’ உள்ளதோ இல்லையோ, மனிதனுக்கான அவற்றின் ‘செயல்பாட்டு உபயோகம்’ எவை என்பதை முன்னிருத்தியே வடிவமைக்கப்படவேண்டும்.

இக்கருத்தாக்கம் கட்டடக்கலை அதைச்சார்ந்த பல (மெக்கானிகல், சிவில் போன்ற) பொறியியல் துறைகளின் வல்லுனர்கள் மத்தியில் புதிதல்ல என்றாலும், இதைப் பற்றி அறிமுகம் இருந்தால் உங்களுக்கு இக்கட்டுரை வேறு திறவுகளையும் அளிக்கலாம்.
*

ஸ்கை-ஸ்க்ரேப்பர்ஸ் எனப்படும் வானை முட்டும் அடுக்குமாடிக் கட்டடங்கள் இருபதாம் நூற்றாண்டில் இருந்து உலகில் பிரபலம். இந்தியாவிலும் இன்றைய மென்பொருள் வளாகங்களில் தொடங்கி அடுக்ககங்கள் வரை இந்த மல்டை-ஸ்டோரி கட்டட வடிவமைப்பே கையாளப்படுகிறது.

கட்டடங்களை பொறியியல் ஆக்கங்கள் எனலாம். எக்கட்டடமும் பார்ப்பதற்கு ‘அழகு’ள்ளதாகவும் அதன் உபயோகத்திற்கேற்ப ‘செயல்பாடு’ உடையதாகவும் அமைந்திருப்பது அவசியம் எனலாம். இந்த இரண்டு முக்கியமான தேவைகளில் ஒன்றைத் துறந்து மற்றதை மேம்படுத்துதல் அவசியமா? உதாரணமாக, அழகு பற்றி கவனிக்கவேண்டியதில்லை, செயல்பட்டால் போதும் என்கிற வகையில் பல குடியிருப்புகளை இந்தியத் திருநாட்டிலும் அன்றாடம் உருவாவதை பார்க்கவே செய்கிறோம். புறாக் கூண்டுகளில் மனிதன் எவ்வாறு வாழ இயலும் என்கிற கேள்விக்கு பதிலாய்.

கட்டடக் கலையின் பிரதான அங்கமான பொறியியல் வடிவமைப்பு வழியே கட்டடங்களை (மட்டுமல்ல, எப்பொருளையுமே) இவ்வின்ன வகைகளில் ‘டிஸைன்’ செய்வது எதற்கு? வடிவமா, செயல்பாடா, எதை ஒரு பொறியியல் ஆக்கம் பெற்றிருக்கவேண்டும்? எப்பொருளையும் வடிவமைப்பதில் இது ஆதாரக் கேள்வி. இக்கேள்விக்கான வடிவமைப்பவரின் பதிலாகவே அப்பொருள் உயிர்த்தெழும்.

இயற்கையை கவனித்து மனிதன் நூற்றாண்டுகளாய் செம்மைப்படுத்தி பல ஆக்கங்களை உருவாக்கிக்கொண்டான் என்று வைத்துக்கொள்ளலாம். இதற்குப் பல உதாரணங்கள் உடனடியாக உண்டு. குகை வடிவிலிருந்து இக்ளூ செய்தான் எனலாம். அதிலிருந்தே டாபர்னக்கிள் செய்தான் எனலாம். மரப் பொந்துகள், இயற்கை நிலவறைகள் என்று பலவற்றையும் கண்டு தன் வீடுகளின் ‘டிஸைன்களை’ சீராக்கித் திருத்திக்கொண்டான் எனலாம். பறவையிலிருந்து விமானம், திமிங்கலத்திலிருந்து சப்மரைன், ஸ்டான்லி குப்ரிக்கின் ‘2001 யெ ஸ்பேஸ் ஒடிஸி’ (மூலம்: ஆர்தர் க்ளெர்க் புத்தகம்) திரைப்படத்தின் முதற்காட்சியினால் பிரபலமான ஆதிமனிதக்குரங்கின் கையிலிருந்த எலும்புத்துண்டிலிருந்து மனிதனின் முதல் கொலைக்கருவியான கோடாலி, 1940இல் ஸ்விட்ஸர்லாண்ட் ஜுரா மலைகளில் உலவிக்கொண்டிருந்த ஜியார்ஸ் டி மாஸ்ட்ரெலின் ஜீன்ஸில் ஒட்டிய காக்கிள்-பர்களிலிருந்து வெல்க்ரோ… இப்படியே பல வடிவங்கள். பொருட்களின் வடிவமைப்பு (டிஸைன்) செயற்கையானவை என்பதால், இயற்கையை ஒத்தப் பிரதியெடுக்க முடியாதென்றாலும் அடிப்படை ‘ஐடியா’க்கள் பலதும் இயற்கையிலிருந்து பெறமுடிந்துள்ளது.

இயற்கை மனிதனை ஒருவாராகவும், மரங்களையும் மலைகளையும் வெவ்வேறு வாராகவும் உருவாக்குவது அவ்வவற்றின் நேர்த்தியான செயல்பாட்டிற்கு எனலாம். இக்கூற்றை நிறுவவதற்கே மனிதனுக்கு பல ஆய்வுகளும் புரிதல்களும் தேவைப்பட்டது. இயற்கையின் ‘டிஸைன்’ ரகசியங்களில் ஆர்வமிருப்பவர்கள் 1917இல் Darcy Wentworth Thompson ஆய்ந்து எழுதிய மகாத்தடிமனான Of Growth and Form என்ற கிளாஸிக் புத்தகத்தில் தொடங்கலாம். இன்றைய தேதியில் மற்றொரு புத்தகம் Steven Vogel எழுதிய Cats’ Paws & Catapults – Mechanical Worlds of Nature & People.

இயற்கை செயல்பாட்டிற்குதான் தன் பொருட்களை வடிவமைப்பதாய் கருதுகிறோம். அதாவது, மனிதன் காண்பதற்கு அழகாய் இருக்க வேண்டும் என்பதற்கு (மட்டும்) இல்லை. செயல்பாட்டினாலேயே பெற்ற வடிவம், நாம் பார்க்க அழகானதாய் அமைவது, வடிவாய் அமைவது தற்செயல். போனஸ். இப்படித்தான் இன்று கருதுகிறோம் (இது ஏன் என்பதற்கும் மேற்படி புத்தகங்களிலும், சார்ந்த தலைப்புகளில் ஆய்வு முடிவுகளிலும் விளக்கங்கள் உள்ளன. கட்டுரை அவற்றை விவரித்து அல்ல என்பதால், இங்கு தவிர்ப்போம்).

வடிவமா செயல்பாடா என்பதில் செயல்பாட்டிற்கே முக்கியத்துவம் என்பது தற்கால கட்டடங்களுக்குப் பொருந்தலாம். ஆனால் தொன்மையான நம் இந்தியக் கோயில் கோபுரங்களுக்குப் பொருந்திவரும் என்று தோன்றவில்லை.

கோயில் கோபுரங்களின் வடிவமைப்பு, உருவாக்கம், செயல்பாடு அனைத்துமே தற்கால கட்டடக் கலையின் டிஸைன் தாத்பர்யத்திலிருந்து மாறுபடுபவை என்றே கருதுகிறேன்.
இங்குதான் எய்ன் ராண்ட் நாயகன் ஹொவார்ட் ரோர்க் பரிந்துரைக்கும் கட்டடங்கள் அவற்றின் வடிவம் ‘அழகாய்’ உள்ளதோ இல்லையோ, அவற்றின் ‘செயல்பாட்டு உபயோகம்’ என்பதை முன்னிருத்தியே வடிவமைக்கப்படவேண்டும் என்கிற கருத்தாக்கத்திலிருந்தும் கோயில் கோபுரங்கள் வேறுபடுகின்றன என்று கருதுகிறேன்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பிரபலமான கட்டடக் கலைஞர் ஃப்ராங் ல்லாயிட் ரைட்-டை வைத்து மாடல் செய்த அவள் நாயகன் ஹொவார்ட் ரோர்க் சொல்லும் ‘வடிவமா செயல்பாடா’விற்கான கருத்துகள் முழுவதும் ஒருபக்கச் சார்புடையவை. எய்ன் ராண்டிற்கு இந்தியாவைப் பற்றி அதிகம் தெரியாது. தெரிந்துகொள்ளவே முனையவில்லை. அது ஒரு இருண்ட பிரதேசம். பொருட்படுத்தத் தேவையற்ற ஆசிய விரயம்.

*

பல்துலக்கும் ப்ரஷ் பார்பதற்கு வடிவாய் அழகாய் இருக்கவேண்டியது முக்கியமா அல்லது கடைவாய் பற்களின் உள் ஈறுவரைச் சென்று துலக்கும் அதன் செயல்பாட்டை, வேலையை செய்யுமாறு வளைந்து நீண்டு, பார்ப்பதற்கு ஒல்லி ஈர்க்குச்சியாய் அழகற்றும் இருந்தால் பரவாயில்லையா?

செயல்பாடுதான் முக்கியம் என்றால், ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ அவற்றை உபயோகித்து தேய்த்தால் பல் உறுதியாக இருக்கும் என்று கூறுவதிலேயே ப்ரஷ்ஷின் ‘வடிவமைப்பு’ அடங்கிவிடுகிறதே. கடைவாய் வரை உள்ளேசெல்லும் வளையும் குச்சி. கடித்தால் முனையில் தன்னிசையாய் நார்களாய் பிரிந்து ‘ப்ரஷ்’ செய்ய ஏதுவாய். எதற்கு அதை தனியாக பிளாஸ்டிக்கில் ஒரே வடிவில் செய்து அங்காடி ஷெல்ஃபுகளில் அரங்கேற்றவேண்டும்? வீட்டுக்கு ஒரு ஆலும் வேலும் வளர்த்தெடுக்க இயலாது என்பதாலா? கடையில் விற்கலாமே. ஒவ்வொருவருக்கும் ஒரு குச்சி. தினமும் வாழை இலை விற்றோமே ஒரு காலத்தில். வாழை இலையில் இட்டுத்தான் நாங்கள் உண்போம். கைகளால். ஸ்பூன் கிடையாது. பொருட்களின் மறுசுழற்சி பற்றி பிரத்யேகமாய் பேசுவதற்கு இன்று கல்வித்துறையே உள்ளது. ‘ரீசைகிளபிள் மேனுஃபேக்சரிங்’ என்று புதிய விஷயம் போல பேசுகிறோம். ஆலும் வேலும் வாழையும் பாளையும் அதைத்தானே செய்தது. இயற்கையுடன் ஒருமித்த இயல்பான உபயோகங்கள். வடிவமைப்பில், வடிவில் சிறு குறைகள் இருந்தாலும், செயல்பாட்டில் சீராகவே இருந்ததில்லையா?

கட்டடக்கலையிலும் தொன்மையிலிருந்து இது இயங்கிவந்துள்ளது. வடிவமா செயல்பாடா விஷயம். எகிப்திய பிரமிடுகள் ஏன் அவ்வடிவம் பெற்றன? அழகிற்கா, உள்ளே அரசர்கள் ‘இறந்தபின்னும்’ மறு வாழ்வில் உஜ்ஜீவிக்க ஏற்றவாறு அமைக்கவேண்டிய வடிவமே அதுதான் என்பதாலா? இயற்பியலில் நியூட்டனின் ஒரு கண்டுபிப்பான வெண்ணொளியின் ’ரெயின்போ’ நிறமாலை, அதைக் கண்டுபிடிக்க அவர் உபயோகித்தது கண்ணாடி ‘ப்ரிஸம்’. பிரமிடு வடிவம். எகிப்திய பிரமிடுகளுக்குள் சூரிய ஒளி கூம்பில் தொடங்கி, வெவ்வேறு கோணங்களில் பொருத்தியிருக்கும் பல கண்ணாடிகளில் பிரதிபலித்து, எங்கு வேண்டுமானாலும் பாயுமாறு அமைந்துள்ளதாம். இது உள் வடிவம். வெளியே நைல் நதிக்கரையில் அருகருகே கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய மூன்று பிரமிடுகள் தவிர சிறியதாய் சில பிரமிடுகள், அனைத்தையும் ஒன்றாக வானிலிருந்து நோக்கினால், அவை ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது. வானில் இருக்கும் ‘ஓரையன்’ நட்சத்திரக்கூட்டத்தின் வடிவம். அருகே ஆகாச கங்கை என நைல் நதி. மூவாயிரம் வருடங்களுக்கு முன்னால் எகிப்தியர்கள் அண்ணாந்து தங்கள் வானவெளியில் கண்ட ஒரு வானியல் காட்சியை, கீழே பல்லாயிரக்கணக்கான அடிமைகளைக் கொண்டு கட்டியெழுப்பினார்களா? அரசர்களுக்கான இறந்தபிறகு போகவேண்டிய அவர்களுடைய ‘சொர்க்கம்’. அவர்களின் ‘நெட்’ வானில் மட்டுமில்லை, ‘கெப்’ பூமியிலும் சொர்க்கம், பிரமிடுகளாய்.

வடிவமைப்பதன் தாத்பர்யம், வடிவத்திற்கா செயல்பாட்டிற்கா? பிரமிடுகளில் இரண்டும் உண்மைதானே.

*

கிரேக்க-ரோமானிய கட்டடக்கலையில் மிகை இருக்கலாம். தேவையற்றவை இருக்கலாம். எய்ன் ராண்ட் நாயகன் ஹௌவார்ட் ரோர்க் விமர்சிக்கும் வீண் பகட்டு வெளிப்படலாம். ஆனால் அனைத்துமே தேவையற்றவை என்றாகிவிடாது. கட்டடக்கலையில் ‘உபயோகம் தரும் வடிவமே அழகு’ என்பது ஒரு பக்கமே. ‘அழகு தரும் வடிவமும் உபயோகமே’ என்பதிலும் உண்மை உள்ளது.

கோயில் கோபுரத்தின் வடிவம் தொலைவில், அருகில் இரண்டிலும் பார்பதற்கு விஷயபூர்த்தி ஏராளம். காலை அகட்டி வாளேந்தி நிற்கும் ஆணின் இடை விறைப்புடன் சரேலென்று இறங்கும் கோணம். கையில் தாமரை எந்தி, முகத்தில் நாணம் ததும்ப நிற்கும் பெண்ணின் வளைவுடன், துவளும் கோணம். உலகை ஆச்சர்யத்துடன் எதிர்கொள்ளும் குழந்தையின் தள்ளாட்டத்துடன் முழங்கால் மடங்கித் தத்தும் நளினம். அனைத்துமே இந்திய நாட்டுக் கோபுரங்களின் கோணங்களில் உண்டு. தொலைவில் இருந்தே காணலாம்.

நிச்சயம் நம் இந்திய நாட்டில் பல உள்ளன. அருகில் சென்றால் கலை, கட்டடக்கலை, சிற்பக்கலை. அதன் நுண்மைகள் அள்ளக் குறையாதவை. கோயில் கோபுரம் அழகிற்குக் கட்டுவதே. அதன் செயல்பாடு அழகாய் இருப்பதே. ரம்மியமாய் இருப்பதே. பிரும்மாண்டமாய், பொலிவாய், கம்பீரமாய், கலையாய் இருப்பதே. பொறியியல் செயல்பாடாய் அக்கட்டடத்தை நோக்கினால், ஒவ்வொரு கல்லும் அதன் மீதுள்ள கோபுர மீதியைத் தாங்கவேண்டும். அவ்வளவே. இது எக்கட்டடத்திற்கும் உண்மையே.

கோபுரங்களின் செயல்பாடு இத்துடன் முடிவுறவில்லை. அருகில் சென்றால், உள்ளே சுவர்களில், விளக்கேற்றும் புரைகளில் ஓவியர்கள் தங்கள் படைப்பூக்கத்தை மகத்தான காட்சிக் கொடையாக்கி அளித்திருப்பர். கோபுர தரிசனம் கோடி புண்யம் என்றோர் வசனம் உண்டு. காணும் மனிதனுக்கு மனதில் நிகழும் ஆன்மீகம் கோபுர வடிவின் செயல்பாடே.

ஸ்கை ஸ்க்ரேப்பர்ஸ் எனப்படும் நவீன நகரத்துக் ‘கோபுரங்கள்’ புதியவை. அங்க லக்ஷண லாவண்யங்கள் ஏதுமற்ற மொழுக் என்று நெடிந்துயர்ந்துள்ள கண்ணாடிக் கட்டடங்கள் வெளித்தோற்றங்கள் ரசிப்பதிற்கில்லை. உள்ளே, செயல்பாட்டளவில், தேவைகளை பூர்த்திசெய்யப்பட்டிருக்கலாம். மிடுக்கான ஆஃபிஸ் கூண்டுகளாய், நெடுக்கான அங்காடித் தெருக்களாய், தடுக்காத கார்பெட்டுகளாய், தகிக்காத மித மின்வெளிச்சங்களாய். ஆனால் அவை கோயில் கோபுரங்களில்லை. மனிதன் அதனருகே குறுகி, அதனால் உருகி மனதுள் நிமிர்வதில்லை.

நவீன ‘கோபுரக்’ கட்டடங்கள் வடிவமைப்பு செயல்பாட்டை மட்டுமே கருதுவதால் விளையும் வெறிச் கட்டடங்கள். இருட்டில் ஒளிரும் ‘பளபள’ உறை அணிந்த வானைப் புணரும் காண்க்ரிட் ஆண்குறிகள். ஒரு ‘டௌண்டவுனி’லிருந்து மற்றொரு ‘டௌண்டவுனி’ற்கு வித்தியாசம் அவற்றின் நீளங்களில்தான். உன்னுடையதைவிட என்னுடையது நீளம் பார்.

வடிவமா செயல்பாடா என்று கோபுரங்களிடம் கேட்பதே பொருளற்றது. வடிவமே செயல்பாடுதான். ஒரு பெண் அழகான வடிவில் இருப்பதே அவளது செயல்பாடுதானே. ஆணுக்கான செயல்பாடு. தாய்மை வழியே மனிதகுலம் செழிப்பதற்கான செயல்பாடு. ஒரு எய்ன் ராண்டிற்கு இது புரிய மற்றொரு பிறவி வேண்டும். இந்தியாவில்.

*

பின் குறிப்பு: அமெரிக்க தேசி நாவலில் மேற்படி கருத்துகளில் சிலவற்றை உரையாடல் ஒன்றில் வைத்துள்ளேன்.

விஷ்ணுவின் மார்பைப் பிளந்து

Standard

விஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் ஹிரண்யகசிபுவின் குடலைக்கிழித்து மாலையாகப் போட்டுக்கொண்டார். லக்ஷ்மி பிராட்டியை தன் மார்பில் ஏற்றுக்கொண்டுள்ளார். பிரம்மனை நாபிக்கமலத்திலிருந்து தாமரை மேல் ஜனித்தார். இதெல்லாம் பழங்கதை. விஷ்ணுவின் மார்பைப் பிளந்தவர் யார் என்று சொல்ல முடியுமா?

தெரியவில்லையா. கீழே படத்தில் பாருங்கள்.

vandal-1

மதுநின்ற தண்டுழாய் மார்வன் என்று பேயாழ்வாரால் பாடப்பட்ட, ரீயின்ஃபோர்ஸ்டு காண்க்ரீட்டினால் நச்சக் என்று பிளக்கப்பட்ட, விஷ்ணுவை.

vandal-1-b

ஸ்ரீரங்கம் அரங்கன் திருக்கோயில் தாயார் சந்நிதி பிரகாரத்தில், பங்குனி உத்திர வெள்ளி மண்டபத்தில் உள்ள தூணில் சில வருடங்கள் முன்னால் இது நடந்தேறியுள்ளது. உபயதாரர் பெயர்களை கல்வெட்டில் பொறிப்பதற்கு.

vandal-1-c

இடைப்பட்ட வருடங்களில் ஒவ்வொரு முறை கோயில் செல்கையிலும் இது கண்ணில் படுகையில், நானும் யாராவது சரி செய்துவிடுவார்கள் என்று நினைத்துக்கொள்வேன். இம்முறை ஏதோ வழக்கத்தை மிஞ்சிய ஒரு நமைச்சல். கேசமே போயிற்று என்று எடுப்பதற்கு வாங்கிய திட்டுக்களையும் கடந்து, படம் பிடித்து அளிக்க முடிவுசெய்தேன்.

சிமெண்ட்டைக் குழைத்த சித்தாள், உபயதாரர் பெயருள்ள கல் பலகையை நிறுத்திய முத்தாள், பூசிக் கரணை போட்ட கொத்தனார், கால்தடுக்காமல் வேட்டிமுனையை விரலோரத்தில் தூக்கி புட்டத்தில் பிடித்தபடி பார்வையிட்ட மேஸ்திரி, அனைவரும் வயிற்றுப்பிழைப்பிற்காக வேலை செய்பவர்கள். கோயிலையே இடித்துக்கட்டச்சொன்னாலும் செய்வார்கள். இத்திருப்பணியில் சம்பந்தப்பட்ட கோயில் அதிகாரிகளுக்கும் இச்செயலில் வருத்தம் கிஞ்சித்தும் இருக்காது. இப்போதுமே, இவ்விஷயம் அவர்கள் எவருக்காவது தெரியும் என்பதே சந்தேகம். அவர்கள் வரும்படி மூலவர் சந்நிதியில். என் ஆச்சர்யம், தாயார் சந்நிதியில் தினமும் மஞ்சள் காப்பு வாங்கி இட்டுக்கொள்வதற்குத் திரளும் பஞ்சகச்ச பக்தர்கள், தர்மதரிசன பொதுமக்கள் என்று எவருமே இச்செயலை ஆட்சேபிக்கவில்லையா?

வேளுக்குடி கிருஷ்ணன் இப்போதெல்லாம் அதிக நேரம் ஸ்ரீரங்கத்தில்தான் செலவிடுகிறாராம். தாயாரை தினமும் பிரதக்ஷணம் செய்வார்தானே.

*

கும்பகோணம் பல சிறந்த கோயில்கள் நிறைந்த ஊர். அங்கு உள்ள ராமர் கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா? நிச்சயம் அடுத்தமுறை செய்யுங்கள். அபாரமான சிற்பங்கள் உள்ள கோவில்.

kumb-ramar-koil-4

ஒரு சாம்பிள் அபாரத்தைக் கொடுக்கிறேன்.

பிரகாரத்தின் மூலைத் தூணில் ஒரு பக்கமாய் பார்த்தால் இவ்வாறு தெரியும் சிற்பம்.

kumb-ramar-koil-1

தொன்னூறு டிகிரி பிரகாரத்தில் திரும்பினால், அதே தூணில், அதே சிற்பம், கீழ்வருமாறு.

kumb-ramar-koil-2

விளக்கத்திற்கு, ஒரு டாப் ஆங்கிள் ஷாட்.

kumb-ramar-koil-3

யார் சொன்னது, பண்டைத்தமிழருக்கு பக்தி மட்டுமே, நகைச்சுவை உணர்வு இல்லையென்று?

இக்கோயிலில் அடுத்த காட்சி.

போட்டோ எடுக்கக்கூடாது என்று கூச்சலிட்டதும் (இதற்கென்று தனியாக ஓஜோஸி ஆள்படை உள்ளது), தர்மகர்த்தா ஆபிஸில் நூறு ரூபாய் பணம் கட்டி ரசீது பெற்றுக்கொண்டு, பிறகு எடுத்தது.

என்னிடம் பணம் வாங்குவதற்கு ரசிது கொடுக்குமளவிற்கு தொழில்சுத்தம் உள்ளவர்கள், தங்கள் வருவாயின் ஊற்றான சிற்பங்களைப் பேணுவதிலும் அம்முனைப்பை அவ்வப்போது காட்டலாம்தான்.

*

கும்பகோணம், சுவாமிமலைக்கு அருகில் தாராசுரம் கோவில் பிரசித்தி (பக்கத்தில், பட்டீஸ்வரம் காளியும் பிரசித்தி). கங்கைகொண்டசோழபுரத்தை நினைவூட்டும் அமைப்புகொண்ட இக்கோவிலின் சிற்பங்களும் சுவரோவியங்களும் சோழர்கால அபாரங்கள். கீழே ஓரிரு சாம்பிள்கள்.

இங்கு சுவரோவியங்களின் மேல் கூறான கருங்கல்லினால் கீறப்பட்ட “ஜீவா லவ்ஸ் அனிதா” போன்ற தற்கால தெருவாசகங்களும் பிரசித்தம்.

இந்தக் காட்சியை அருகில் படம்பிடிக்க உச்சி வெய்யிலில், கை கால் கொப்பளிக்க, கற்கோயிலின் முதல் சில நிலைகளை ஏறி, ஒற்றைக்கையில் தொங்கிக்கொண்டு, மற்றொரு கையால் காமிராவை ஆட்டாமல் இயக்கிப் படம்பிடித்தேன்.

யோசித்துப்பாருங்கள். முன்னர் இதே அல்லது இதைவிட அதிக சிரமங்கள் எடுத்து(த்தான்) நம்மில் ஒருவர் இங்கு ‘ஜீவா…’ வகை கிறுக்கலை (மட்டும்) நிகழ்த்தியிருக்கிறார்.

என்னசொல்வது?

அதற்கும் முன்னால் சாரங்களில் கழுவேறும் நிலையில் அமர்ந்துதான் நம்மில் ஒருவர் இவ்வகை சுவரோவியங்களையும் அருளியிருக்கிறார்.

நல்லவேளை, சமீபத்தில் இக்கோயிலை ஏ.எஸ்.ஐ. தன் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளது (படத்தில் பிரகாரத்தில் தெரியும் கார்பெட் வெய்யில் சூட்டிற்காக அவர்கள் போட்டது). நிச்சயம் இவ்வகைச் சிதிலங்கள் குறைந்துவிடும்.

ரெஸ்டொரேஷன் வகை அபாயங்கள் உருவாகலாம்.

*

திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயிலுக்குப் போயிருக்கிறீர்களா. தஞ்சை பெரிய கோயிலை விட வளாக அளவில் பெரிதானதாம். கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டதாம் (ஸ்தல புராண சுவர் அறிவிப்பு சொல்கிறது). அங்கு மறக்காமல் தர்மசம்வர்தினி அம்பாள் சந்நிதி முன் பிரகாரத்தைப் பார்வையிடுங்கள்.

இங்கும் உள்ளே ஒரு சுவர் முழுவதும் சுவரோவியங்கள் இருந்திருக்கவேண்டும். காலப்போக்கில் கிட்டத்தட்ட அழிந்து விட்டது. பரிகாரமாய்ச் செய்வதைப்பார்த்தால்தான் பகீரென்கிறது.

கீழே சில படங்களில் இன்றைய நிலையை வழங்கியுள்ளேன்.

thiruvaiyaru-1

vandal-4-bvandal-4

நூற்றாண்டுகள் பழமையான ஒரிஜினல் சுவரோவியங்களைக் காப்பாற்றுவதாக, அதற்கு மேல் ரெஸ்டொரேஷன் என்று இக்காலச் சாயங்களில் இவர்கள் வரைந்துகொண்டிருக்கிறார்கள்.

அருங்காட்சியகப் பெட்டகத்தினுள் இருந்த மூக்குக்கண்ணாடியைப் பார்த்துக் கேட்டானாம்: இது நிஜமாவே பெஞ்சமின் ஃபிராங்க்ளினோடா மூக்குக்கண்ணாடியா?

உடன் வந்த கைடு: அதிலென்ன சந்தேகம், அவருடையதேதான். என்ன, இரண்டு முறை கண்ணாடியையும், ஒரு முறை பிரேமையும் மாற்றியிருக்கிறோம்.

திருவையாற்றில் இருந்து காவிரிக்கரையோரமாக அரங்கம் திரும்புகையில் கோயிலடி என்று அழைக்கப்படும் தென்திருப்பேர் திவ்ய தேசம் கண்டேன். அப்பக்குடத்தான் என்றும் அழைக்கப்படும் இத்தலத்தில் அலுத்துக்கொண்டு பட்டாச்சார்யார் வருவதற்குள் பிடித்த படம்.

vandal-5

வீட்டில் அம்மா “அப்பக்குடத்தான்ல தினத்துக்கு மண்டகப்படி உண்டே. கேட்டாதான் சொல்வா. கைங்கர்யம் செய்றவா வீட்ல வெச்சுண்டு அப்பம் விப்பாளே வாங்கினியா” என்றாள். அது சரி.

*

இதிலுள்ள ஒரே ஒரு முரணை மட்டும் முன்வைக்கிறேன். கோயில்களின் தற்காலச் சிதிலங்களுக்கு நாத்திகர்கள் அநேகமாகக் காரணமாய் இருப்பதில்லை. அவர்கள்தான் கோயிலுக்கே வரமாட்டார்களே. சிதிலங்கள் ஆத்திகர்கள் அல்லது அவர்களில் அக்கறையற்றவர்களாலேயே நடந்தேறுகிறது. உதாரணமாக, முதலில் குறிப்பிட்ட ஸ்ரீரங்கம் கோயில் ‘விஷ்ணுவின் மேல் சிமெண்ட்’ செயல் அந்த வெள்ளி மண்டபம் செப்பனிட உதவிய உபயதாரர் (ஆத்திகர்) பெயர்ப் பலகை வைப்பதற்கான பக்கவிளைவு. கும்பகோணம் ராமர் கோயில் தர்மகர்த்தா ஆலுவலர்கள் சிற்பங்களை யாராவது கவனிக்கிறார்களா (ஃபோட்டோ எடுக்க) என்று ஆள்வைத்துக் கவனித்துக்கொள்ளும் அளவிற்கு அக்கறையான ஆத்திகர்களே (என்று நினைக்கிறேன்). ஆனால், கோயிலுக்கு மின்சாரம் வழங்குவது போன்ற அவர்கள் அன்றாட வேலைகளில் அச்சிற்பங்கள் குறிக்கிட்டால் அவை மேலேயே மின்சார ஸ்விட்ச்போர்ட்டை பொருத்தத் தயங்காத அக்கறையற்றவர்கள். திருவையாறு கோயிலில் ரெஸ்ட்டோரேஷன் என்று சுவரோவியங்களுக்கு மேல் இக்கால நகல் எடுக்கப்படுவதும் ‘கோயிலில் ஏதாவது நல்லது செய்யவேண்டும்’ என்று நினைக்கும் ஆத்திகர்களின் உழைப்பினால்தானே.

நிறைய எழுதலாம். ஏற்கெனவே, காப்பாற்றப்படவேண்டிய தமிழ்நாட்டின் சுவரோவிய பொக்கிஷங்கள் என்று விரிவாகப் பொருமியிருக்கிறேன். படித்துவிட்டு பிரேமா நந்தகுமார் பாராட்டினார். நீங்களும் வேண்டுமானால் செய்யுங்கள்.

இதற்குமேல் இவ்விஷயங்களில் ‘ரியாக்டிவ்வாக’ புலம்பிக்கொண்டிருந்தால் என் உடம்பிற்கு ஆகாது. என் மிடில்கிளாஸ் மத்யமர் மனதிற்கேற்ற கரிசனம் பொங்கியதில் ஏற்கெனவே இரண்டு நாள்களாக ஜுரம். வீக்கெண்டில் சரியாப் போய்விடும்.

நமது படைப்பூக்க உந்துவிசைகளை எங்கிருந்தும் பெறலாம். நம் ஆக்க பலங்களை வெளிப்படுத்துவனவற்றில் இருந்து பெற்றால் அனைவருக்கும் ஆனந்தம். அடுத்து ‘ப்ரோ-ஆக்டிவ்வாக’ ஏதாவது எழுத ஸ்ரீரங்க நாச்சியார் அருளட்டும்.

தாரமங்கலம் கோயில் சிற்பங்கள்

Standard

தாரமங்கலம் கைலாஸநாதர் திருக்கோவில்

சேலம் அருகிலுள்ள தாரமங்கலம் கைலாஸநாதர் திருக்கோயிலுக்கு சமீபத்தில் பௌர்ணமி அன்று சென்றுவந்தோம். அவ்வப்போது சுற்றிலும் கையூட்டு நிமித்தம் கேமிரா கையை யாராவது பிடிக்கிறார்களா என்று நோட்டம்விட்டபடியே கைக்கேமிராவில் க்ளிக்கிய உலகப்பிரசித்திபெற்ற கோயில் சிற்பங்கள் கீழே தொகுப்பாய் கொடுத்துள்ளேன்.

Continue reading

மரக்கலை மயக்கலை

Standard

கலை அரிசி கேள்விப்பட்டிருக்கிறோம். வியப்புற்றோம். நானோ கலை கேள்விப்பட்டோம். விசனப்பட்டோம். இன்று மெகா மரக்கலை. அறிவியலை வைத்து மற்றொரு கலையுலக குழப்படி?

பண்டைய நாகரீகங்களை அதன் ஆயகலைகளின் தேர்ச்சி, அக்கலைச்சின்னங்கள் வைத்து கொண்டாடுவோம். இசைக்கலை அடிப்படை உணர்வுகளுடன் உரையாடுவது. எளிதில் அனைவராலும் அணுகக்கூடியது. ஓவியக்கலை என்றால், உதாரணத்திற்கு, காப்பாற்றப்படவேண்டிய தமிழ்நாட்டின் சுவர் சித்திரங்கள் பற்றிப் பார்த்தோம். அதைப்போல தமிழகத்தில் மரத்தில் செதுக்கும் கலை தொன்றுதொட்டு இருக்கிறது. பலவகை கோபுர சிற்பங்களிலும், கட்டடக்கலையை சார்ந்து உருவாகும் மரவேலைப்பாடுகளிலும் இக்கலையின் பிரமிக்கவைக்கும் கற்பனைத்திறனும், நுணுக்கங்களும் நமக்கு ஓரளவு புரியும்.

ஏன் ஒரு மரக்கலைப் பழகும் சிற்பியின் கற்பனைத்திறன் மரப்பாச்சி பொம்மைகளிலும் பட்டவர்த்தனம்.

நிற்க. அறிவியலை வைத்துச் செய்யும் குழப்படி கலைகளில் இப்போது இவ்வகை மரக்கலையும் சேர்ந்திருக்கிறது. இங்கு இல்லை. ஆஸ்திரேலியாவில்.
Continue reading

காப்பாற்றப்படவேண்டிய தமிழ்நாட்டின் சுவரோவியப் பொக்கிஷங்கள்

Standard

சித்திரக்கலையில் மியூரல்ஸ் என்றால் சுவரோவியங்கள் அல்லது சுவர்ச் சித்திரங்கள். கோயில்களிலும் குகைகளிலும் வரையப்பட்டுள்ள பழங்காலச் சுவரோவியங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே ராஜஸ்தானை அடுத்து இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஆசியாவில் இலங்கைக்கு அடுத்து புத்த சமண சைவ மதங்களின் சரித்திர முக்கியத்துவம் பெற்ற பல ஓவியங்களைக் கொண்டுள்ளது. பல்லவர்கள், விஜயநகர ராயர்கள், தொடர்ந்து நாயக்கர்கள், பாண்டியர்கள், சோழர்கள், சேரர்கள் என்று ஏழாம் நூற்றாண்டில் இருந்து பதிநேழாம் நூற்றாண்டு வரை ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக 140 தமிழ்நாட்டுக் கோயில்களில் மேல், உள் கூரைகளிலும், பிரகாரச் சுவற்றிலும் சுவரோவியங்கள் விரவியிருக்கின்றனவாம்.

கலையறிவு அதீதமாக இல்லையெனினும், அதைக் கலை என்று புரிந்து மென்மையாக அணுகவேண்டிய மனிதர்களின் பொதுவறிவு கூட இன்றி, பக்தி என்று மஞ்சள்காப்படித்தும், ரெனொவேஷன் என்று சடுதியில் வெள்ளையடித்தும் எனாமலடித்தும் (எனாமலை எடுக்கையில் பின்னால் இருக்கும் சுவரோவியம் இலவசமாக உரிந்து வந்துவிடும்), ரெஸ்டோரேஷன் என்று மாற்றி வரைந்து முதலுக்கே உலைவைத்தும், இவ்வகை சரித்திர-கலைப் பொக்கிஷங்களை நாம் வேகமாக இழந்துகொண்டிருக்கிறோம். போறாக்குறைக்கு இச்சுவரோவியங்கள் உள்ள பல கோயில் பிரகாரங்களில் சுவற்றுக்கருகிலேயே தேங்கும் மதுபாட்டில்கள். இதுவரை இல்லையெனின் விரைவில் கலைகளில் சிறந்துவிளங்கியது மட்டுமின்றிக் கலைகளின் மேல் காட்டும் இவ்வகைத் தேர்ந்த அக்கறையின்மையிலும் முதன்மையான இடத்தை பிடித்துவிடுவோம்.

சிலநாள்கள் முன்னர் சுய-சித்திரக்கலை-பாதுகாவலர் மற்றும் சரித்திரவியளாலர் எம்.வி.பாஸ்கரன் [1], ஐ.ஐ.டி மெட்ராஸில் நிகழ்த்திய விளக்கக் கருத்தரங்கில் பங்குகொண்டேன். அதில்தான் மேல்பத்திகளில் எழுதியிருக்கும் சுவரோவியங்களில் தேர்ந்த நம் புராதான அபாரங்களையும் அதே சுவர்களில் ஒன் பாத்ரூம் செய்யும் நம் சமகால அபத்தங்களையும் பற்றி கேட்க நேர்ந்தது.

ஜாதிமதபேதமின்றி ஆத்தீக-நாத்தீக வெறும் தி.க. பிரிவினை விடுத்து விரைவில் ஒருங்கிணைந்து இக்கலைப் பொக்கிஷங்களைக் காப்பாற்ற முயற்சிகள் செய்யவில்லை எனின் தமிழ்நாட்டின் அநேக சுவரோவியங்களை நம் சந்ததியர் பாஸ்கரன் எச்சரிப்பது போல (வெள்ளையடிப்பதற்கு முன் எடுத்ததுவரை) டிஜிட்டலாக மட்டுமே அணுக முடியும்.

முதலில் எந்த மாதிரியானப் பொக்கிஷங்களை நம் அன்றாட அலட்சியத்தில் அக்கறையின்மையில் (அபதியில்), கண்முன்னே இழந்துகொண்டிருக்கிறோம் என்று எனக்குப் புரிந்தவரை சுருக்கிவரைகிறேன்.

இந்தியாவில் தொன்மையான சுவரோவியம் அஜந்தா எல்லோரா குகைகளில் இருப்பவை. பள்ளியில் பாடத்திலேயே படித்திருக்கிறோம். வரலாற்றுப் பண்பாட்டுக் கலைச் சிறப்பு வாய்ந்த ஓவியமான மஹாமாயாவை சிலர் பிறகு மஹாராஷ்டிராவரை பயணம் செய்து நேரில் பார்த்துமிருக்கலாம். இவை தோராயமாக கி.மு. 3 ஆவது நூற்றாண்டுகளில் வரையப்பட்டிருக்கும் குகைச்சுவரோவியங்கள் (கலையுலகின் பியூரிஸ்ட் அஜந்தாவிற்குப் பிறகு இந்தியாவில் சித்திரக்கலையே தேய்பிறைதான் எனக் கூறுவர்).

அஜந்தாவில் இருந்து சுவரோவியங்கள் வடக்கிலும் தெற்கிலும் பல நூற்றாண்டுகளாய்ப் பரவியுள்ளது; புத்த மற்றும் சமண மதத்தின் பரவலைச் சார்ந்து. பிறகு கர்நாடகம், ஆந்திரா தமிழ்நாடு என்று பல்லவர்கள், தஞ்சாவூரில் பிரஹதீஸ்வரர் கோயிலில், கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்கள் வரைந்தவை, கூன்பாண்டியன் சமணத்தில் இருந்து ஞானசம்பந்தரால் சைவத்திற்கு மாறியது, விஜயநகர ராயர்கள், பின் வந்த நாயக்கர்கள் எனத் தொடர்ந்து (தஞ்சாவூர் உட்பட பல இடங்களில் சோழர்களின் ஓவியங்களின்மேல் நாயக்கர்கள் அன்றே ‘ஓவர்பெயிண்ட்’ செய்தும் இருக்கிறார்கள்), பின் கேரள ஓரத்தில் சேரர்கள் செய்தது, சமகாலத்தில் நாம் இச்சுவர்களின் மேல் செய்யும் கரிக்கட்டை கிறுக்கல்கள், மஞ்சள்காப்புகள், வெள்ளையடிப்புகள்… சுவரோவியங்களின் கலைச்சரித்திரம் தொடர்கின்றது.

[குறிப்பு: தமிழ்நாட்டின் சுவரோவிய வளர்ச்சி பற்றிய என் சுருக்கத்தில் காலம், எதற்கு பின் எது என்று இக்கட்டுரையில் சரித்திரச் சான்றோடு தெரியப்படுத்துவது நோக்கமல்ல. எனக்குத் தெரியவும் தெரியாது. பின்குறிப்பைப் பார்க்கவும்].

கலம்காரி எனப்படும் ஆந்திராவில் இன்றும் உயிரோடிருக்கும் துணியில் வரையும் பிரமிப்பான சித்திரக்கலையும் இவ்வகை சுவரோவியங்களின் கூடவே வளர்ந்திருக்கிறது. இரண்டிற்கும் பல ஒற்றுமைகள், சில வித்தியாசங்கள். வரைகலை, நிறம் குழைப்பு என்று டெக்னிகல் சமாசாரங்களை விடுத்து ஆச்சரியங்களைப் பார்த்தால், கலம்காரி ஓவியங்கள் வரையும் துணிகள் சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கெடாமல் இருக்குமாம். கிட்டத்தட்ட 20 தலைமுறைகள். சிமெண்ட் கட்டடங்கள் 50 வருடத்தில் விரிசலடைகின்றன. கலர் போட்டோ பிரிண்ட் குவாலிட்டி 50 வருடத்தில் இளித்துவிடுகிறது. தேவையான வெள்ளி கலப்பு இருக்குமேயானால் கருப்பு-வெள்ளை போட்டோக்கள் நூறு வருடங்களுக்குப் பிழைக்கலாம். எது கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பம் என்பதில் நமக்குப் பெரும் குழப்பம் இருக்கிறது. இன்று கலம்காரி துணிவகைகளை நாம் பிரதானமாக அலங்காரப் படுக்கை விரிப்பாய்ப் பயன்படுத்திவருகிறோம்.

பல்லவர்களின் கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டு சுவரோவியங்களில் தொன்மையானது (ஏழாம் நூற்றாண்டு வாக்கில்). பிறகு பனமலை, தேவி தலகிரீஸ்வரர் கோயில். இங்குள்ள உருவவழிபாட்டுச் சுவரோவியங்கள் அஜந்தாவின் மஹாமாயாவை விடச் செரிவானவை என்று கலைவிமர்சகர்கள் கருதுகிறார்களாம். பிறகு ஒன்பதாம் நூற்றாண்டுவாக்கில் சித்தன்னவாசல். பல்லவர்களோ பாண்டியர்களோ யார் செய்திருந்தாலும் சமண தீர்தங்கரர்களின் தாமரைக்குள ஓவியங்கள் அழகானவை அற்புதமானவை. பிறகு அர்மாமலை சமணக் குகைகள், சமணம் வீழ்ந்து சைவம் வைணவம் பக்திவழிகள் தமிழ்நாட்டில் பெருத்த பின்னர் தோன்றிய தஞ்சாவூர் நாட்டியச் சித்திரங்கள் (நாயக்கர்களின் மேலோவியத்தை நீக்கினால் கீழே சோழர்களின் ஓவியங்களாம்), விழுப்புரம் அருகில் திருப்புலிவனம் – சமீபத்தில் வெள்ளையடித்துவிட்டார்களாம்; கேட்டால் எச்சாரென்ஸியே ஓவியங்கள் ஏதும் இருந்ததேயில்லை என்று சாதிக்கிறார்களாம், பாஸ்கரன் பதைத்துச் சொன்னார்.

அடுத்த ரெஸ்டோரேஷனுக்கு முன்னால் இந்தக் கோயில்களையெல்லாம் கோடை விடுமுறைகளிலாவது ஒரு எட்டு போய் பார்க்கவேண்டும் என்று முடிந்துகொண்டுள்ளேன்.

இப்போது காப்பாற்றல் முயற்சி பற்றி.

பாஸ்கரன் செய்துகொண்டிருப்பது தமிழ்நாட்டு சுவரோவியங்களின் ஒரு விஞ்ஞான ரீதியான, விஸ்தாரமான, சிரத்தையான, டிஜிட்டல் மறுபதிவு. பட்டேல் ஸ்பாட்டாக மனதிற்குப் பிடித்த படங்களை மட்டும் எடுக்கும் சுற்றுலா சுய உலா க்ளிக்குகள் போலில்லை இது. ஒவ்வொரு கோயிலிலும் உள்ள அனைத்துச் சுவரோவியங்களையும் டிஜிட்டலாகப் படம்பிடித்துக்கொண்டிருக்கிறார். இதுவரை போர்ட் ஃபௌண்டேஷன் கிராண்ட் (பின்குறிப்பு [3] பார்க்கவும்) கைகாசு (அடுத்த பலவருடங்களாக) செலவுசெய்து 37 கோயில்கள் முடித்திருக்கிறாராம். மொத்தம் 142டையும் முடித்துவிட மனத்தளவில் தீர்மானத்தோடு இருக்கிறார்.

இவரது பணியை டிஜிட்டல் பிரஸெர்வேஷன் மற்றும் ரெஸ்டொரேஷன் எனலாம். இந்தக் கணினி சுவரோவிய அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு கோயிலுக்கும், அவற்றின் சுவர் கூரைப் பகுதிகளுக்கும் a1 c6 என்று ஆல்ஃபாநியூமரிக் குறியீடு கொண்ட லேபிள் உண்டு. ஒரு சுவரோவியத்தை இந்த லேபிள்களைக் கொண்டு a4 பக்க அளவு கொண்ட (காமிராவில் நேர்த்தியாகப் படம்பிடிக்கமுடிகிற அளவு) பல சிறு டிஜிட்டல் போட்டோப் பகுதிகளாகப் பிரித்துச் சேகரிக்கிறார். இந்தப் படங்களை போட்டோஷாப் போன்ற மென்பொருள் கொண்டு இமேஜ் ஸ்டிட்சிங், கலர் கரெக்‌ஷன் செய்து நிஜ அளவு ஓவியமாகத் தைத்து ஒட்டிவிடுகிறார். வேண்டிய இடங்களில் தேவையான மாற்றம் செய்து (இதைப் பிறகு விளக்குகிறேன்). எந்த ஓவியத்தின் எந்தப் பகுதியை மட்டுமும் கணினியில் மீட்டுக்கொள்ள முடியும். அதற்கானச் செய்தியை (ஏற்கெனவே உள்ளிட்டிருந்தால்) அணுக முடியும்.

உதாரணத்திற்கு, கீழே உள்ள படத்தைப் பாருங்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூரில் உள்ள ஒரு கோயில் சுவரில் இருந்து டிஜிட்டலாக மாற்றியச் சுவரோவியம். ஒரிஜினல் ஓவியம் 20 அடி x 12 அடி, 240 சதுர அடி அளவு. இந்த ஓவியத்தைப் பல A4 தாள் அளவுப் படங்களாகப் பிடித்து ஒட்டியிருக்கிறார். டெக்னிக்கல் விளக்கங்களுக்கு இந்த வலைப்பக்கத்தை [http://web.mac.com/mvbhaskar/Naayakaa/Temple_Mural_Paintings.html] அணுகவும். நடுவில் கருப்படித்திருக்கும் இடத்தில் பிலாஸ்டர் இருந்திருக்கிறது.

இம்முறையின் சாத்தியங்கள் பல. உதாரணத்திற்கு, ஒரு கோயிலின் சுவரோவியங்களை அதன் கலையழகோ, சாரமோ, ரசிக்கும் அனுபவமோ எந்தவிதத்திலும் குறையாமல் உட்கார்ந்த இடத்தில் கணினியிலேயே பெறமுடியும். உலகில் எந்த இடத்திலிருந்தும். அடுத்த மஹாசம்ரோக்‌ஷன   வெள்ளையடிப்பில் ஒரிஜினல் சுவரோவியங்களோ, அடுத்த தாமிரபரணி ஆற்றின் சீற்றத்தில் முழுக் கோயிலோ காணாமல்போனாலும் கூட இந்த டிஜிட்டல் ரெஸ்டோரேஷன் நம் கலைப் பொக்கிஷங்களைக் காப்பாற்றியிருக்கும். வேண்டியபோது வெக்டர் கிராபிக்ஸை வேண்டிய சைஸில் ‘ஸ்கேல்’ செய்து, மீண்டும் கலம்காரி துணியிலோ, கட்டம்போட்ட சட்டையிலோ, கதவுகளிலோ வரைந்துகொள்ளலாம். சரியான சித்திரக்கக்லைஞர் அங்கு மாட்டினால், அமெரிக்காவில் இருந்தபடியே.

பாஸ்கரனே மேலே உள்ள ஓவியத்தைக் கலம்காரி கலைஞர்கள் கொண்டு கலம்காரி துணியில் வரையச்செய்திருக்கிறார். சுவரோவிய ஒரிஜினலை கலம்காரியில் ரெஸ்டோரேஷன் செய்திருக்கும் இந்தத் துணியை கருத்தரங்கின் வாசலில் விரித்துக் காட்சியாக வைத்திருந்தார். கீழே படங்களில் பாருங்கள்.

இந்த ஓவியம் சொல்லும் கதை நமக்கு தெரிந்ததுதான். இடது மேல் ஓரத்தில் கூன்பாண்டியன் சூலைநோயால் அவதிப்பட்டுத் தமக்கையின் பரிந்துரையில் ஞானசம்பந்தரை நோய்தீர்க்கத் தலைநகருள் அழைக்கிறான். சம்பந்தரின் சைவ மதத்தைப் பிடிக்காத சமணர்கள் இதை வெறுக்கிறார்கள். சம்பந்தரின் நூல்களை நெருப்பிலிட்டும் வைகையிலிட்டும் அழிக்க முடியாமல் போவது இடதுபக்கத்தில் அடுத்துக் கீழே உள்ள பகுதிகளில் வரையப்பட்டுள்ளன. கீழே தனித்தனி படங்களாகக் கொடுத்துள்ளேன்.

பிறகு சம்பந்தரின் வீடே நெருப்பில் போய்விட, காரணம் பொறாமைகொண்ட சமணர்கள்தான் எனக் கருதி அவர்களைக் கழுவேற்றும் பகுதி ஓவியத்தின் வலது அடியில்.

கதையை நம்புகிறோமோ இல்லையோ, சமணம் தேய்ந்து பாண்டிய (தமிழ்) நாட்டில் சைவம் தழைக்கத்தொடங்கியது என்று கருதலாம்.

ரெஸ்டோரேஷன் செய்வதற்காக, எந்த அளவாகவும் பெரிதாக்கக்கூடிய ஸ்கேலபிள் வெக்டர் இமேஜாக இந்த மொத்த ஓவியத்தையும் பாஸ்கரனும், ராமச்சந்திரய்யா என்ற கலம்காரி கலைவல்லுனரும், பாஸ்கரனின் பயணங்களுக்கும் ரெஸ்டொரேஷன்களுக்கும் உறுதுணையாய் இருந்துவரும் ஸாம்சனுன் வரைந்துகொண்டிருக்கிறார்களாம். சில பகுதிகளை கருத்தரங்கில் ஸ்கேல் செய்து காண்பித்தார். ஸாம்சன் பல மாதங்கள் தொடர்ந்து வரைந்ததால், தூங்கும்போதும் தன்னிச்சையாக கைநடுங்க ஆரம்பித்து, தற்சமயம் இந்த ப்ராஜக்டை நிறுத்திவைத்துள்ளனர். இந்த டிஜிட்டல் ரெஸ்டொரேஷனின் சாத்தியங்களை விளக்க மற்றுமொரு உதாரணம் கீழே.

இதில் இடப்புறம் இருப்பது ஒரிஜினலின் இன்றைய கோலம். வலப்புறம், வேறு பல இடங்களில் இருந்த இதே போஸின் (pose) ஆதாரங்களுடன் டிஜிட்டலாக கலம்காரி கலைஞர்கொண்டு பாஸ்கரன் வரைந்து பூர்த்திசெய்துள்ளது. முதல் கட்டம் ஒரிஜினல் சுவரோவியத்தை (ரெஸ்டோரேஷன் தேவைப்பட்டால், செய்து) சிரத்தையாக டிஜிட்டலாக மாற்றுவது. பிறகு கலம்காரி கலைஞரை வைத்து டிஜிட்டலில் இருந்து துணிக்கு ஓவியத்தைக் கையால் வரைந்து மாற்றுவது. இதில் கலம்காரி கலைஞர் மொத்தமாக ஓவியத்தை உள்வாங்கிப் புரிந்துகொண்டு, டிஜிட்டல் ரெஸ்டோரேஷன் போதும் ஆலோசகராய் உதவி செய்வாராம்.

இவ்வகையில் தான் செய்திருக்கும் அழகர் கோயில் சுவரோவியங்களின் டிஜிட்டல் கலெக்‌ஷனை கருத்தரங்கில் மாதிரிகள் காண்பித்து விளக்கினார். அழகர் கோயிலில் உள் வெளிப் பிரகாரங்களில் சுவர்கள் மற்றும் கூரைகளில் சுவரோவியங்கள் இருக்கின்றன. அனைத்தும் ராமாயணம்; தெலுங்கு கலந்த அந்தக் காலத் தமிழில், குறிப்புகளுடன். தேவர்களும் முனிவர்களும் விஷ்ணுவிடம் சென்று ராமராக அவதாரம் செய்து திருக்குட்டங்குடி ராவணனை அழிக்குமாறு வேண்டும் ஆச்சரியமான ராமாயணம். பாஸ்கரன் கடந்த ஐந்து வருடங்களாக பல அறிஞர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறாராம், திருக்குட்டங்குடி எங்கு இருக்கிறது, தமிழ்நாட்டிலா இல்லை இலங்கையிலா, அதில் யார் இந்த ராவணன் என்று. சரியான பதிலில்லையாம்.

அழகர் கோயில் சுவரோவியத்தில் இருப்பது வால்மீகியோ, கம்பரோ, துளசிதாஸரோ வகுத்த ராமாயணம் இல்லையா? ஆந்திர தோல்பாவைக்கலைஞர்கள் வாய்வழியே பரப்பிப் புழங்கி வந்த நாட்டுப்புற ராமாயணம் போல வேறு வகையா? தமிழ்நாட்டில் நிஜத்தில் தொலைத்த இவ்வாறான பலதை வெளிநாடு போய் ஏட்டில் தேடாமல், இங்கேயே கண்டுதெளிய, தெளிவிக்க, தெரிவிக்க, செய்யப்படவேண்டிய பல ஒரிஜினல் பீஎச்டீக்கள் காத்திருக்கின்றன.

அழகர் கோயில் பிரகாரங்களை நான்குமுறைச் சுற்றி வந்தால் (உள் வெளிப் பிரகார சுவர் மற்றும் கூரையை முறையே ஒவ்வொறு சுற்றிற்கும் பார்த்தபடி வலம் செய்தால்) ராமாயணக் கதை முழுவதும் சுவரோவியங்களாகக் கண்முன் விரியும். இந்த பிரமிக்கும் ‘ஸ்டோரி போர்ட்டை’ பாஸ்கரன் டிஜிட்டலாக ஆப்பிள் மாக்புக்கில் வைத்து மாதிரி காண்பித்தார். சாத்தியங்கள் வரவேற்கின்றன.

மேலே அழகர் கோவிலின் கூரைஓவியங்களின் ஒரு பகுதி.

ஏன் இவற்றை அழிக்கிறோம் நாம் என்பதற்குப் பல முரண்பாடான காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, நாத்திக கருத்துடைய பெரியார், மற்றும் பின்பற்றியவர்கள், கோயில் வாசல்வரை வந்துச் செருப்பு மாலை போட்டார்களே தவிர, கோயிலினுள் இவ்வகைச் சுவரோவியங்களை அழிக்க எத்தனிக்கவில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆட்சியில் இருக்கையில் இக்கோயில்களுக்கு ‘விசிட்’ செல்லும்முன்னர் அறங்காவலர்களே ரெனொவேஷன் என்ற பெயரில் சகட்டுமேனிக்கு வெள்ளை அடித்துவிடுகிறார்கள். இது ஒருவகை முரண்.

மேலே நாயக்கர் காலத்தின் சுவரோவியம் கொண்ட திருநெல்வேலி கோவில் தாமிரபரணி நதிக்கரையில் இருக்கிறது. ஏழெட்டு அடி தடிமன் கொண்ட சுவர்களைக் கொண்டது. பரணியின் வெள்ளச் சீற்றத்தில் இருந்து ஊர்மக்களைக் காப்பாற்றும் புகலிடமாய் இருந்திருக்கவேண்டும். இங்கு ஐந்தாவது மாடியில் சுவரோவியங்களுக்கு அருகில் இன்று மதுபாட்டில்கள். ஓவியங்கள் மேல் கிறுக்கல்கள். புகலிடத்தையே பதம்பார்க்கும் தமிழ்ச் சமுதாயம் நாம். இது அடுத்த முரண்.

இவற்றைக் காப்பாற்ற அரசு நிதியுதவி செய்யாமல் இல்லை. நிறைய செய்கிறது. உதாரணமாக, சுவரோவியங்களை ஆராய முற்பட்டால் அரசு நிச்சயம் உதவிசெய்கிறது. உதவியைப் பெற்றுக்கொண்டு பல நேரங்களில் ஆராய்ந்து கண்டவற்றை — அற்புதங்களை — முனைவர் ஏடாக பல்கலைக்கழக நூலகங்களில் கிடப்பில் பாதுகாத்துப் பூட்டிவிடுகிறோம். பொதுமக்கள் பணத்தை அரசுவழியாக உபயோகித்து அதன் பலனை, வாழும் நிலத்தின் கலையின் சரித்திரங்களை, பெருமைகளை, பொதுமக்களுக்கு எட்டா உயரத்தில், அணுகமுடியாத புத்தகங்களில், விளக்கங்களில் புதைத்துவிடுகிறோம். இது மற்றொரு முரண்.

இதிலும் கொசுறாக அறிவுசார்ந்து இரண்டு முரண்கள் உள்ளது. சுவரோவியங்களைப் பல வருடங்களாக ஊறி, ஊன்றி, லட்சக்கணக்கில் படம்பிடித்துள்ள நம் பாஸ்கரன் தோளில் கைபோட்டு, லோக்கல் சென்னை தமிழ் கலந்த மொழியில் இச்சுவரோவியங்களின் பெருமைகளையும், அதன் சிதிலங்களையும் சொன்னால் செவிமடுக்கமாட்டோம். வாயில் நுழையாத பெயர்கொண்ட அயல்நாட்டுப் பேராசிரியர் அல்லது பில்கேட்ஸ் அறக்கட்டளையில் இருந்து (எய்ட்ஸ் தமிழர்களிடம் தோன்றியதா என்று ஆராய முற்பட்டு) யாரவது வந்து நிக்கான் காமிராவில் படம்பிடத்து வழுவழுதாளில் டாலரில் நம் பொக்கிஷத்தை நம்மிடமே விற்றால் வாங்கிக் ‘காபிடேபிள்’ புத்தகமாக வைத்துச் சிலாகிப்போம். நமக்கே சர்வநிச்சயமாய் நம் அறிவில் ஆராய்ச்சிகளில் இருக்கும் அவநம்பிக்கை. இது முதல் கொசுறு முரண்.

இரண்டாவது முரண் வித்தியாசமானது. அரசு நிதியுதவியில், படம்பிடித்து, ஆனால் விலை குறைவாகப் புத்தகம் வேண்டும் என்று, மலிவான தாளில் அச்சடித்து விற்போம். சில வருடங்களில் சுவரில் உள்ள ஒரிஜனலைக் காட்டிலும் ஓவியத் தாள் மங்கிவிடும். கூடவே பாண்டிச்சேரியின் பிரென்சு இன்ஸ்டிடியூட் பொருளுதவியுடன் நீடித்து இருக்கும் வழுவழுதாளில் நேர்த்தியான பல போட்டோக்களுடன் (கூடவே மின்தகட்டில் டிஜிட்டல் படங்கள்), நிறக்குழைப்பு, வரையும் விதங்கள், தூரிகைகள், ஸ்டைல் என்று தஞ்சைப் பெரியகோயில் கங்கைகொண்டசோழபுரத்தின் சுவரோவியங்களின் தாத்பர்யங்களைப் பிரித்து எழுதியுள்ள தலையனை அளவு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. பிரெஞ்சு மொழியில்.

எந்தக் கோயிலின் செல்வாக்கு பெறுகுகிறன்றதோ அங்கு இச்சுவரோவியங்கள் ரெனொவேஷன், ரெஸ்டோரேஷன் என்று அநேகமாகச் சிதிலமாகிவிடும். கீழவாசல் கோபுரத்தை வெள்ளை பெயிண்ட்டடித்தும், மற்ற கோபுரங்களின் பொம்மைகளை எனாமல் அடித்தும் ‘ரெஸ்டோர்’ செய்யப்பட்ட அரங்கமாநகருளானின் விசுவாசி நான். தெற்கு வாசல் ராயர் கோபுரம் பூர்த்தியான பின்னர் இலங்கை அழியும் என்று ஐதீகம் இருந்தது. அது நடந்ததோ இல்லையோ, புதுப் புகழ்வெளிச்சத்தில், வெளியூர் பக்த கோடிகள் ஆதரவில், நிச்சயம் 1985 முன்னர் இருந்த ஸ்ரீரங்கம் என் கண்முன்னே அழிந்துவிட்டது.

இதுவரை அரசு 17 சுவரோவியக் கோவில்களை இவ்வாறு ரெஸ்டோரேஷன் செய்திருப்பதாகச் செய்தி இருக்கிறது. பாஸ்கரன் ஒன்றில்கூட இவை சரியாக செய்யப்படவில்லை என்கிறார். ஆதாரத்திற்குப் புது பெயிண்டில் இருக்கும் சில படங்களைக் காண்பித்தார். சித்திரக்கலையைப் பற்றிப் பெரிதாகத் தெரியாத எனக்கே பார்த்தவுடன் அவற்றின் கேவலம் புரிகிறது.

இப்படியே பல படிமங்களில் முரண்கள் இருக்கின்றன, நம் கலைச்சின்னங்களை நாமே அழிக்கும் வழிமுறைகளாக.

தடுப்பதற்கு என்ன செய்யலாம்?

பாஸ்கரன் செய்துவரும் டிஜிட்டல் ரெஸ்டொரேஷன் மற்றும் பாதுகாப்பு நிச்சயம் ஒரு வழி. இந்த டிஜிட்டல் கலைச்சொத்தை நாலட்ஜ்-காமன்ஸ் எனப்படும் அறிவுப்பொதுவுடைமை அங்கீகாரத்தைப் பெறச்செய்யவேண்டும். மக்களால் செய்யப்பட்டு, மக்களால் போற்றப்படும் கலைச்சின்னங்கள், நிச்சயம் பொதுமக்களுக்குச் சொந்தம். இதை எவ்வகை அதிகாரம் கொண்டும் தனிமனிதன், தனி நிறுவனங்கள் (கல்வி நிறுவனங்கள் உட்பட), சொந்தம் கொண்டாட முடியாது. இதற்கு இந்தியாவின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு செம்மையான சிவில் நாலட்ஜ்-காமன்ஸ் சட்டங்கள் இயற்றப்படவேண்டும். ஏற்கெனவே இச்சட்டங்கள் இருந்தால் அனைவரும் தெரிந்துகொள்ளுமாறு (பரப்பி) வெளிப்படையாக்க வேண்டும். கலையைச் சேதாரம் செய்பவர்களை (வெள்ளையடிப்பவர்கள் உட்பட), அழிப்பவர்களை தண்டனைக்குள்ளாக்க வேண்டும். உண்ண உணவு, உடுக்க உடை, ஆபரணங்கள் கொடுத்து அவர்களை பசித்த புலியிடம் விட்டுவிடவேண்டும்.

அடுத்து இந்தியாவின் ஆர்கியலாஜிகல் ஸொசைட்டி. சில நல்ல விஷயங்களை செய்துவருகிறது. அரசு சான்றிதழ் வைத்திருக்கும் சரியான கலைஞர்கள் கொண்டு சரியாக ரெஸ்டொரேஷன் செய்கிறார்கள். நல்ல உதாரணம் தஞ்சைப் பெரியகோவில். சுவரோவியங்கள் இருக்கும் இடத்தை அருங்காட்சியகமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழர்கள் சிலகாலத்திற்கு அணுகமுடியாது. அயல் நாட்டு டிக்னிடரிஸ் மட்டும் அலௌடு.

இவ்வகைப் பாரபட்சம் இருந்தாலும், ரெஸ்டோரேஷன் வேலையைத் துப்புரவாக செய்துவருகிறார்கள் என்று பாஸ்கரன் கூறினார் (இவருக்கும் படம் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம்). ஆனால் அனைத்து கோவில்களையுமே ASIயிடம் விட்டு இவ்வாறு உள்ளே போகமுடியாத ஆராய்ச்சிக் கூடங்களாக மாற்றுவதில் பயனில்லை. மக்கள் வரவேண்டும். வந்து நம் கலைகளைப் பார்த்து, மென்மையைத் தொண்மையை உணர்ந்து பாதுகாக்கச் சுயக்கட்டுப்பாட்டுடன் முன்வரவேண்டும். திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்…

தேவையான கூட்டத்துடன் பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என்று பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகையில் உவகை, பிரமிப்பைக் கடந்து, எச்சாரென்ஸி, கலைப்பாதுகாவலர்கள், சேகரிப்பளர்கள், பக்தர்கள், வெளிநாட்டில் கோயில் கட்டி உள்ளூர் குருக்களை விண்ட்-பிரேக்கர் அணிவித்து இடம்பெயர்க்கும் புலம் பெயர்ந்தத் தமிழர்கள், என் போன்ற அகடெமிக் மேம்போக்காளர்கள் என்று சகட்டுமேணிக்குத் தமிழ்ச் சமூகத்தின் பல மட்டத்தினரின் அலட்சியத்திற்கும், அக்கறையின்மைக்கும் நானே பொறுப்போ என்ற துக்கம் கலந்த குற்ற உணர்ச்சியே மேலோங்கியிருந்தது. ஒரு வாரம் கழிந்து சுரணை விட்டுப்போய், இப்போது மனதில் லேசான நமைத்தல் மட்டும் மிச்சம்.

பாஸ்கரன் போன்றோரால் வெறியுடன் மொத்த சுவரோவியங்களையும் டிஜிட்டலாக காப்பாற்ற யோசித்து செயலாற்றவும் முடியும். என் போன்ற கையாலாகத ஆசாமிகளின் சுரணையற்ற நமைச்சலால் முடிவது இந்தக் கட்டுரையும், சுவரோவிய கோயில் சுவர்களில் மஞ்சள்காப்போ, உச்சாவோ அடிக்காமல் இருப்பதும்.

*****

Notes

[1] பாஸ்கரன் இந்த கட்டுரையை படித்துவிட்டு மிநஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் தன்னைப்பற்றி கலைப்பாதுகாவலர் என்று நான் கூறுவதை மறுக்கிறார். தன்னைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்: I am not a conservator nor an art historian. I am essentially uneducated, a college drop-out. It is not as if I have been interested in this all my life either. 5 years ago I got a chance to get involved in this project initiated by someone else. I was the archivist and the default custodian of the material captured. I realised that as long as temples lay in ruins elsewhere in their own place, it was possible to ignore them. But having brought all of it home, in a hard drive, and as proximate as the ruins lay, it became impossible to ignore them. So I continued the work, continued it long after everyone else had left the project…

[2] மேலும் கட்டுரையில் பல இடங்களில் நான் செய்திருந்த பிழைகளையும் தன் மின்னஞ்சலில் சுட்டிக்காட்டி திருத்தினார். சில பத்திகளை இப்போது சரிசெய்துள்ளேன்.

[3] The original project was funded by the Ford Foundation. The grantee was the Centre for Plants, People and Ecosystems, a Chennai-based not-for-profit trust. The project director was Dr. Balusami, Heaod of the Department of Tamil, Madras Christian College. See full credits here: http://web.mac.com/mvbhaskar/Naayakaa/Credits.html