பரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்

Standard

வருடந்தோரும் இசை வாத்தியக்கருவிகளைச் செய்யும் கலைஞர்களை கௌரவித்து பரிவாதினி நடத்திவரும் விழாவில் நாகஸ்வரம் செய்கலைஞன் ரங்கநாத ஆசாரியின் நூற்றாண்டையொட்டி அவரது மகனுக்கு விருது வழங்கித் தங்களை கௌரப்படுத்திக்கொண்டார்கள்.

நவம்பர் 30, 2019 நடந்த அவ்விழாவில் ‘வெளி’ப்பார்வையாளனாய் சிற்றுரை வழங்கினேன். அதன் கானொளி பரிவாதினியின் யூடியூப் தளத்தில் உள்ளது. கீழேயும் கொடுத்துள்ளேன். அக்கானொளியில் என் பேச்சு ராம் அறிமுகம் செய்து பொன்னாடை வழங்கியபின்னர் சில நிமிடங்கள் வருகிறது.

கானொளி சுட்டி: https://www.youtube.com/watch?v=LxgatEHrJvE

என் உரையின் சாரம் பின்வறுமாறு.

நான் பிறந்த ஊர் குடவாசல். சுற்றி திருச்சேரை நாச்சியார்கோயில் திருநாகேஸ்வரம் ஆண்டாங்கோயில் அய்யம்பேட்டை வலங்கைமான் பாபநாசம் கொரடாச்சேரி இஞ்சிக்குடி மன்னார்குடி… இன்னும் கும்பகோணத்தையே சொல்லவில்லை… எங்கு கேட்டாலும் நாகஸ்வரம் ஒலித்துக்கொண்டிருந்த காலம். அது அந்தக் காலம்… என்கிறேன். ஏதோ நூற்றாண்டுகள் தள்ளிய மூதாதையர் காலம் போல. நான் சொல்வது எழுபது எண்பதுகளில். யார் பெயரையோ இனிஷியல்கள் மட்டும் பெரிதாகத் தைக்கப்பட்டிருக்கும் குஞ்சம் வைத்த வர்ண அழுக்கு ஜமக்காளங்கள் விரித்த தாத்தா வீட்டுத் திண்ணையில் சிறுவனாய் சிதறியிருக்கும் மஞ்சள் அரிசி சந்தனம் வெற்றிலை இவற்றில் முட்டி பதிய நாகஸ்வரத்தின் எச்சில் ஓடையாய் ஒழுகும் ஒலிவாய்க்கு அருகில் என் வலக்காது (எதிர் பக்கம் அமர பயம். தவில் குச்சி அடித்துவிடும்). பார்வை திரும்புகையில் அந்த ஒலிவாயே பெரிய லௌட்ஸ்பீக்கர் போல பதிந்துவிட்ட மனக்காட்சி. அந்தக் கேள்வி ரசனை மட்டுமே இன்று இங்கு மேடையேறிப் பேச முனைகிறது. எனக்குப் பாட வராது. பிழைத்தது இசை.

போதும் பூர்வ பீடிகை. இதற்கே ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டது…

நல்ல பந்தோ மட்டையோ இல்லையேல் கிரிக்கெட் இல்லை. நல்ல அடுப்பு இல்லையேல் நளன் இல்லை. சுவர் இல்லையேல் சித்திரம் இல்லை. நம்பகமாக வேலை செய்யும் நல்ல கடிகாரங்கள் வந்த பிறகே மாலுமிகளால் உலகம் உருண்டை என்கிற நிருபணத்தை உலகோர் ஏற்க வழங்க முடிந்தது. அதற்கு முன்னால் கொலம்பஸ் இந்தியர்களைக் காண விரும்பி சரியான கடிகாரங்களோ காந்த புலம் காட்டிகளோ இல்லாமல் தான் கண்டடைந்தவர்களை இந்தியர்கள் என்றார். கொலம்பஸ் அன்று சொன்னது இன்று சரியாக வரலாம். இன்று நிறைய புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருப்பதால் அமெரிக்கா இந்தியா போலத்தான்.

Continue reading

அலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை

Standard

ஜன்னல் வெளியே காண்பது நிஜப் பகலா அனல்வெளியின் கானல் காட்சியா என உறுதிப்படுத்த முடியாத சென்னை வனப் பெருமதியம். எதிரிலிருக்கும் மின்திரையில் ஓடிக்கொண்டிருந்த எழுத்தினோடு ஏதோ சிந்தனை வயப்பட்டிருக்கையில் காதில் மாட்டியிருந்த சென்ஹெய்ஸரில்… அட இது என்ன பூபாளம் மாதிரி இருக்கே… ஏதோ மேற்கத்திய செவ்வியல் இசை அல்லவா ஓடவிட்டிருந்தோம்… அதில் போய் பூபாள ஸ்வரக் கோர்வைகளா…

பொதுவாக மேஜர் (மற்றும் மூன்று) மைனர் ஸ்கேல்களில் இயற்றப்பட்டிருக்கும் மேற்கத்திய செவ்வியல் இசை வடிவங்களில் நம்ம ஊர் (கர்நாடக/இந்துஸ்தான இசை வடிவ) ரிஷபங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்காது. யார் இது இத்தனை துல்லியமாக கர்நாடக ராகத்தை மேற்கத்திய செவ்வியல் இசையில் கொண்டுபோய் விட்டது? இளையராஜா எப்போதோ ஏதோ சிம்பொனி என்றாரே, வெளியிட்டுவிட்டாரா? வேறு பெயரில் உலவுகிறதா?

மேலும் கவனித்ததில், இருபதாம் நூற்றாண்டு இசை வகை உறுதிப்பட்டது. சிம்பொனி எண் 66. ஹிம் டு கிளேசியர் பார்க். இசை அலன் ஹொவ்ஹனஸ். அமெரிக்கர். 1992இல் இந்த சிம்பொனி எண் 66ஐ வடிவமைத்துள்ளார்.
Continue reading

மிருதங்க பூபதி, மரபிசை, எளிமை, அறிமுகம்

Standard

பாலக்காடு மணி ஐயர், பழநி சுப்ரமணியப் பிள்ளை இருவருடன் இணைந்து இராமநாதபுரம் முருகபூபதி கர்நாடக இசையின் மிருதங்க மும்மூர்திகளில் ஒருவர். இவரது நூறாவது பிறந்த வருட விழாவையொட்டி 16, பிப்ரவரி, 2014 அன்று ‘பரிவாதினி’ அமைப்பு சென்னை லஸ் ‘ராக சுதா’ அரங்கில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மதுரை சேஷகோபாலன் உரை கேட்கப்பெற்றேன்.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் சிஷ்யர் இராமநாதபுரம் சங்கரசிவ பாகவதர் அவரது சிஷ்யர் சேஷகோபாலன். சங்கரசிவத்தின் தம்பி முருகபூபதி (சகோதரர்கள் நால்வர்). இதுவரை இவரைப் பற்றி எதுவுமே அறிந்திராத வாசகர்கள், முருகபூபதியின் வாழ்க்கை, வாசிப்பை அறிமுகம் செய்து ராம் எழுதியுள்ள கட்டுரையை வாசித்துக்கொள்ளுங்கள் [ http://solvanam.com/?p=16433 ].

நிகழ்ச்சியில் சேஷகோபாலனுக்கு முன்னர் மிருதங்க வித்வான் கே. எஸ். காளிதாஸ், குழல் வித்வான் ரமணி பேசினார்கள். இறுதியில் சேஷகோபாலன் கச்சேரியும் இருந்தது. அனைத்தும் பரிவாதினியின் யுடியூப் சேனலில் ஐந்துமணிநேரக் கானொளியாய் உள்ளது. சுட்டி இங்கே [ http://www.youtube.com/watch?v=T5F2fOPQbB0 ]. நான் பதிவு செய்த சேஷகோபாலனின் நாற்பத்தியைந்து நிமிட உரையின் ஒலித்தொகுப்பை மட்டும் கீழே அளித்துள்ளேன்.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: சஞ்சய் தமிழ் இசைக் கச்சேரி

Standard

2013-dec-jan-03-dinamalar-arunn-review-sanjay[03 ஜனவரி 2014 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம். இந்த கட்டுரையுடன் இசை விமர்சனம் தொடர்பான ‘மார்கழி உற்சவம்’ நிறைவு பெறுகிறது.]

தமிழ் இசைச் சங்கம் சார்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் வழக்கிய கச்சேரியை சஞ்சய் ”உந்தன் பாத பங்கஜம்” என்று சங்கராபரண ராக வர்ணத்தில் துவங்கினார்.

ஆனந்தபைரவி ராகத்தில் “பூ மேல் வளரும் அன்னையே (ஒளிபொருந்தும்)” என்று கலைவாணியின் மேல் மழவை சிதம்பர பாரதி இயற்றிய கிருதி. எதுகை மோனையிடும் வரிகளை சஞ்சய் அருமையாய்ப் பாடினார். ஸ்வரங்களில் அணுஸ்வர ஒலிகளையும் ஏற்றி ஸ க பா ஸ என்று தாவியதை ரசித்தோம். இவ்வுருப்படியே இன்றைய கச்சேரியின் பட்டொளி.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: ஸ்ரீவல்ஸன் மேனன் கச்சேரி

Standard

2013-dec-jan-02-dinamalar-arunn-review-srivalson[02 ஜனவரி 2014 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

ஸ்ரீவல்ஸன் மேனன் கேரளத்தில் இருந்து மார்கழி இசைவிழாவில் சில வருடங்களாய் பாடிவருபவர். மியூசிக் அகடெமி கச்சேரியில் பூஷாவளி ராகத்தில் “கோபநந்தன” என்னும் கிருதியை பாடினார். தொடர்ந்த ஸ்வரங்களில் நல்ல விறுவிறுப்பு.

அடுத்து ரீதிகௌளை ராகத்தில் சுருக்கமான ஆலாபனை. வயலினில் எடப்பள்ளி அஜித்குமாரின் ஆலாபனை நறுக்கு தெறித்தது. தொடர்ந்து ஆதி தாளத்தில் “சேரராவதேமிரா” என்னும் தியாகையரின் கிருதியை சங்கதிகளால் இழைத்து பாடினார். ஆலத்தூர் சகோதரர்களின் ஸ்வரங்கள் இக்கிருதியில் பிரசித்தம். மந்திரஸ்தாயி ஸ்வர சஞ்சாரங்கள் ஸ்ரீவல்ஸனின் குரல்வளத்தை சுட்டின. கிருதியை எடுத்துக் கையாண்டதற்கு ஸ்ரீவல்ஸனை பாரட்டலாம்.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: மாண்டலின் ஸ்ரீநிவாஸ்

Standard

2013-dec-jan-01-dinamalar-arunn-review-srinivas[01 ஜனவரி 2014 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

மியூசிக் அகடெமி கச்சேரியில் யு.ஸ்ரீநிவாஸ் மாண்டலினில் கானடா ராகத்தில் “சரஸுட” என்னும் வர்ணத்தை வழக்கமான அதிவேக காலப்பிரமாணத்தில் துவங்கினார். மிருதங்கத்தில் திருச்சி பி. ஹரிகுமார், கடத்தில் இ.எம்.சுப்ரமணியம், கஞ்சிராவில் வி.செல்வகணேஷ். விறுவிறுப்பில் துவக்கத்திலேயே அரங்கம் கிளர்ச்சியில் திளைத்தது.

அடுத்ததாய் பஹூதாரி ராகத்தில் சில சஞ்சாரங்களை வழங்கி, துளசிவனம் இயற்றிய “பஜமானஸம்” என்னும் கிருதியை ஆதி தாளத்தில் வாசித்தார். ஏழெட்டு ஆவர்தனங்களுக்கு அதிநீளமான ஒரு கோர்வையை வைத்து, தாளவாத்தியங்கள் ஒருங்கிணைந்து ஜோர் பெருக்க, அவர்களையும் விஞ்சிய அதிவேக ஸ்வரங்களாய் அடுக்குவது மாண்டலினில் ஸ்ரீநிவாஸால் மட்டுமே முடிந்தது.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: வசுந்தரா கச்சேரி

Standard

2013-dec-31-dinamalar-arunn-review-vasundhra[31 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

வசுந்த்ரா ராஜகோபால் தன் மியூசிக் அகடெமி கச்சேரியை மூலைவீட்டு ரங்கஸ்வாமி நட்டுவனார் இயற்றிய ‘சலமேலரா’ என்னும் நாட்டகுறிஞ்சி ராக வர்ணத்தில் விறுவிறுப்பாய் துவங்கினார். வயலினில் பாலு ரகுராம், மிருதங்கத்தில் தஞ்சாவூர் சுப்ரமணியம், கடத்தில் டி.வி.வெங்கட சுப்ரமணியம் உடன் வாசித்தனர்.

தொடர்ந்து தர்பார் ராகத்தில் மிஸ்ரசாபு தாளத்தில் ராமாபிராம என்னும் தியாகையர் கிருதியை பாடினார். தாளத்துடன் ‘தியாக’ என உடையும் சரண வரியை, ‘ராகேந்து முக தியாகராஜ ரக்ஷக’ என்று உடைக்காமல் நேர்த்தியாக பாடியது சிறப்பு.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: வியாசர்பாடி கோதண்டராமன் கச்சேரி

Standard

2013-dec-30-dinamalar-arunn-review-kothandam[30 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

பரிவாதினி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நாகஸ்வரக் கச்சேரிக்கு காலை பத்துமணியளவில், நான் ஒருவன் அமர்வதற்கே இருபத்தியைந்து இருக்கைகளா, என்றவாறு ஆழ்வார்பேட்டையின் அடுக்கக சமூக அறையொன்றில் நுழைந்தேன். கோதண்டராமன் மாயாமாளவகௌளையில் தியாகையரின் கிருதியில் “துளசிதளமுலசே சந்தோஷமுகா” என்று வினவிக்கொண்டிருந்தார்.

மேடையில் ஆறு பேர். கீழே ரசிகர்களாய் ஐந்து பேர். அதில் மூன்று பேர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள். என்னைத் தவிர ஒருவர் நான் அழைத்துவந்தவர். தனிமைகொண்டு நூறாண்டுகளுக்கு முன்வாழ்ந்த கலாரசிக ஜமீன்போல் உணர்ந்தேன்.

குந்தலவராளி சஞ்சாரங்களுக்குப் பின்னர் “போகீந்த்ர சாயினம்” என்று பழகிய கிருதியைத்தான் துவங்கினார். எனக்கோ “ஒருமுறை வந்து பார்த்தாயா” என்று மணிச்சித்ரதாழ் திரைப்படத்தின் குந்தலவராளி வரிகளே ஒலித்தது. நாகஸ்வரம் ரசிகர்களிடம் கேட்பதாய்.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: அஸ்வத் நாராயணன் கச்சேரி

Standard

2013-dec-26-dinamalar-arunn-review-aswath[26 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

ராக சுதா அரங்கில் “நாத இன்பம்” சார்பில் நடந்த கச்சேரியை அஸ்வத் நாராயனன் “வனஜாக்ஷி” என்னும் கல்யாணி ராக அட தாள வர்ணத்தில் துவங்கினார். மேற்காலத்தில் எழுபதுகளில் கே.வி.என். கச்சேரிகளில் கேட்ட அதே விறுவிறுப்பு.

பளிச்சென்று பேகடா வெளிப்படும் சஞ்சாரத்துடன் துவங்கி அடுத்ததாய், “வல்லப நாயகஸ்ய” என்னும் தீக்ஷதரின் ரூபகதாள கிருதியை பாடினார். சிறு ஆவர்த்தனங்களில் ஸ்வரங்களை வழங்கினார்.

அடுத்ததாய் வராளி ராகம் ஆலாபனை. அகாரங்களுடன் நீள்வாக்கியமாய் ஸ்வரங்களை கோக்கும் வகையிலான ஆலாபனை அஸ்வத்தின் குரலின் தேர்ச்சியையும், இசையின் முதுமையையும் வெளிப்படுத்தியது.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: திருச்சூர் சகோதரர்கள் கச்சேரி

Standard

2013-dec-25-dinamalar-arunn-review-trichur-bros[25 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் திருச்சூர் சகோதரர்கள் (ஸ்ரீகிருஷ்ண மோஹன், ராம்குமார் மோஹன்) ‘மஹா கணபதிம்’ என்னும் தீக்ஷதரின் நாட்டை ராக கிருதியில் துவங்கினர். ஸ்வரகல்பனையில் இருவரும் சேர்ந்து ஒத்திசைவாய் கோர்வையை பாடி கரவொலி பெற்றனர்.

அடுத்ததாய் ஹமீர் கல்யாணி ராகத்தில் சஞ்சாரங்களுடன் துவங்கி ‘தூமணி மாடத்து சுற்றும் விளக்கேற்றி’ என்னும் திருப்பாவை பாசுரத்தை பாடினர்.

மிஸ்ரசாபு தாளத்தில் அடுத்தாய் தீக்ஷதரின் ‘நரசிம்மா ஆகச்ச’ என்னும் மோஹன ராக கிருதி. ’முரஹர…’ எனத் துவங்கும் சரண வரியை பரிசோதனையாய் இரண்டு ஸ்தாயிகளில் நிரவல் செய்ய முயன்றனர். வரிகளின் இடைவெளிகளை மோஹன ராக செவ்வியல் சஞ்சாரங்களை இட்டு நிரப்பியது அருமை.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: ரவிகிரண் கச்சேரி

Standard

2013-dec-24-dinamalar-arunn-review-ravikiran[24 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

மியூசிக் அகாடமியில் ரவிகிரண் தன் கோட்டுவாத்திய கச்சேரியை கண்ட அட தாளத்தில் சாவேரி ராகத்தில் தானே இயற்றிய வர்ணத்தில் துவக்கினார். வரிகளை அவர் குறிப்பிட்டிருக்கலாம். “நாத தனும் அனிஷம்” என்னும் சித்தரஞ்சனி ராகத்திலமைந்த தியாகையரின் கிருதியை அடுத்ததாய் வாசித்தார். விறுவிறுப்பாய் ஸ்வரங்கள் வாசித்து கோர்வையில் முடித்ததை ரசிக்கமுடிந்தது.

அடுத்ததாய் பூர்வி கல்யாணி ராகம் ஆலாபனை. ராகத்தின் அடையாளத்தை காட்டும் பிடியுடன் துவங்கி, மதுரமாய் மனோதர்மத்துடன் வார்த்தெடுக்கப்பட்டது. மைசூர் மஞ்சுநாத் வயலின் பாணிக்கு ஒத்துவராத ராகமோ எனத்தோன்றியது.

நீலகண்ட சிவன் ரூபக தாளத்தில் இயற்றிய “ஆனந்த நடமாடுவார் தில்லை” எனத்துவங்கும் தமிழ் கிருதி. இதன் ’வஞ்சகம் இல்லாத அடியார் குவிக்க’ என்னும் சரண வரியில் நிரவல் செய்தார். இப்பகுதியில் இடைவெளிகளை மிருதங்கம் அருமையான கும்கிகள் வழங்கியது. தொடர்ந்து விறுவிறுப்பான ஸ்வரங்களை வாசித்து ரவிகிரண் பரவசப்படுத்தினார்.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: வேதவல்லி கச்சேரி

Standard

2013-dec-23-dinamalar-arunn-review-vedavalli[23 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

மியூசிக் அகாடமியில் வேதவல்லி கானடா ராகத்தில் சில சஞ்சாரங்களுடன் கச்சேரியை துவக்கினார். ‘சுகி எவரோ சுமுகி எவரோ’ என்னும் தியாகையரின் ஆதி தாள கிருதி.

தொடர்ந்து கச்சேரியின் முதல் உருப்படியிலேயே, எவருமே எதிர்பாராத “எவரு சுகி எவரு ராமா நாம” என்னும் பல்லவி வரியிலேயே நிரவல். நிரவல் அங்கம் கிருதியின் ஒரு வரியை ராகத்தின் குணங்களை வெளிக்கொணரும் விதமாய் இசையில் விரித்து நிரப்புவது. நம் மரபிசையின் கடினமான அங்கம். படைப்பூக்கத்திற்கு வயதேது.

அடுத்து “தன்யு தெவ்வடோ தாசரதே” என்னும் பட்ணம் சுப்ரமணிய ஐயரின் மலயமாருத ராக கிருதியை பாடினார். தொடர்ந்து அடானாவில் சுருக்கமான ஆலாபனை. உடனே அடையாளம் காணப்பட்டு, கவரப்பட்டோம். தியாகையரின் ‘நாரத கான லோல’ என்னும் ஆதி தாள கிருதி. தொடர்ந்து அடாணாவுக்கேற்ற மிடுக்கான ஸ்வரங்கள் வெளிப்பட்டன.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீதா விழா: மண்டா சுதாராணி கச்சேரி

Standard

2013-dec-22-dinamalar-arunn-review-manda[22 டிசெம்பர் தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

ஆந்திரப் பாடகரான மண்டா சுதாராணி தன் மியூசிக் அகாடமி கச்சேரியை ‘வந்தே வாசுதேவம்’ என்று ஸ்ரீராகத்தில் துவங்கினார். ரம்யமான சிட்டைஸ்வரங்கள் பஞ்சரத்ன ஸ்ரீராக கிருதியில் இருக்கும் கோர்வைகளிலிருந்து மாறுபட்டதாயிருந்தது சிறப்பு.

அடுத்ததாய் சலநாட்டை விவாதி மேளராகத்தில் ஆலாபனை. அருமையான அகார பிடிகள் வெளிப்பட்டன. தொடர்ந்து கோடீஸ்வர ஐயரின் ‘ஏதயா கதி’ கிருதியை ஆதி தாளத்தில் பாடி, ஸ்வரகல்பனை செய்து முடித்தார்.

அடுத்ததாய் ஆலாபனை ஜெயந்தசேனா ராகத்தில். பல பத்தாண்டுகளாய் கச்சேரிகளில் அரிதாக ஆலாபனை செய்யப்படும் ராகங்களில் ஒன்று. நல்ல முயற்சி. ராகத்தின் பிடிகளை சுற்றி வாசிக்கையில் பிடிப்புடன் வெளிவந்த ராகவேந்திர ராவின் வயலின் ஆலாபனை, வேறுசமயங்களில் ஸ்வரப்பயிற்சியாய் ஒலித்தது. ஆதி தாளத்தில் ‘வினதாசுதவாகனஸ்ரீரமணா’ எனும் தியாகையரின் கிருதி. ஸ்வரங்களில் முடிக்கையில் சரியாக பொருளமையும் விதமாய் ‘வினதாசுத வாகனன்’ என்றோ ‘வினதாசுதவாகனஸ்ரீ’ என்றோ பாடியது பொருளுணர்ந்தவரின் மேடைச்சிறப்பு.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: சுமித்ரா வாசுதேவ் கச்சேரி

Standard

2013-dec-19-dinamalar-arunn-review-sumitra[19 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் இடவசதிற்கேற்ப சுருக்கிவரையப்பட்டு வெளியானதின் ஒரு வடிவம். அங்கு ‘எடிட்’ ஆனவை கீழுள்ளதில் சாய்வு எழுத்தில்.]

மியூசிக் அகடெமி கச்சேரியில் சுமித்ரா வாசுதேவ் ‘நின்னே கோரிநாதிரா’ எனும் மோஹன ராக வர்ணத்தில் துவங்கினார். கவனிக்கவும், வழக்கமான ‘நின்னு கோரி’ வர்ணம் இல்லை. இனிமையான சிட்டைஸ்வரங்களுடனான இதை இயற்றியவர் பல்லவி துரைசுவாமி ஐயர்.

முதல் ஆலாபனை முகாரியில். எடுத்ததும் ராகத்தை உணர்த்தும் சஞ்சாரங்களை வழங்கிய, நேரடியான, நேர்த்தியான ஆலாபனை. ‘எந்த நின்னே சபரி பாக்யமு’ எனும் தியாகையரின் கிருதி. சபரிக்கு மோட்சம் கிடைத்ததை வியந்தேற்றும் பொருளமைந்த கிருதியை முகாரி என்பதால் அழுகையொலிக்கும் வடிவில் சிலர் பாடுவார்கள். அவ்வாறில்லாமல் மோட்சம் கிட்டியவரின் சிலிர்ப்பான தருணத்தை சரியாக முகாரியில் வெளிக்கொணர்ந்து சுமித்ரா பாடியது அருமை.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: திருமெய்ஞானம் டி.கே.ஆர். அய்யப்பன் & மீனாக்ஷிசுந்தரம் சகோதரர்கள் கச்சேரி

Standard

2013-dec-18-dinamalar-arunn-review-tkr-bros[18 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் ஏகத்திற்கு விழுங்கப்பட்டு வெளியானதின் ஒரு வடிவம்]

மியூசிக் அகடெமியின் 87ஆவது ஆண்டு இசை மாநாட்டில், திங்கள் காலை நாகஸ்வரக் கச்சேரியில் திருமெய்ஞானம் டி.கே.ஆர். அய்யப்பன், மீனாக்ஷிசுந்தரம் சகோதரர்கள் வாசித்தனர். துவக்கத்தில் சுமநீஸரஞ்சனி ராகத்திலமைந்த ஆதி தாள வர்ணம் தருமபுரம் கோவிந்தராஜன் இயற்றியது. இதில் நடைகளை மாற்றி ஸ்வரங்கள் வாசித்தது வித்தியாசம்.

திருநாகேஸ்வரம் சுப்ரமணியம், திருக்கடையூர் பாபு, என இரட்டை தவில்கள் இருந்தாலும், அகடெமியின் நேர்த்தியான ஒலி அமைப்பில் கச்சேரி இசை காதுகளுக்கு இனிமை. கௌளை, துவிஜாவந்தி, சாரங்கா, சாமா என நாகஸ்வரத்திற்கேற்ற ராகங்கள் பலதும் கச்சேரியில் வாசிக்கப்பட்டது.

கௌளையில் திக்ஷதரின் ‘ஸ்ரீ மஹா கணபதி’ கிருதியில் ஸ்வரகல்பனை. அடுத்து அகிலாண்டேஸ்வரி என சியாமா சாஸ்திரியின் துவிஜாவந்தி ராக கிருதி. ஒத்திசைவில் பெரும்பாலும் அருமையாக வாசிக்கப்பட்ட கிருதியில், சரணத்தில் மேல்ஸ்தாயி சஞ்சாரங்களை மத்யஸ்தாயியில் வாசித்தது ஏமாற்றம். கிருதியின் உச்ச வெளிப்பாட்டை துச்சமாக்கிவிட்டது.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: ராமகிருஷ்ணன் மூர்த்தி கச்சேரி

Standard

2013-dec-17-dinamalar-arunn-review-ramakrishnan[17 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

அரங்கம் நிரம்பியிருந்த ‘சாந்தி ஆர்ட்ஸ் ஃபௌண்டேஷன்’ சாஸ்திரி ஹால் கச்சேரியில் பாடிய ராமகிருஷ்ணன் மூர்த்தியின் குரல் காத்திரமானது. சில சஞ்சாரங்களால் ஆனந்த பைரவி ராகத்தை உணர்த்தி, ‘பாஹிஸ்ரீ’ எனத் தொடங்கும் சியாமா சாஸ்திரியின் கிருதியை பாடினார்.

அடுத்ததாய் பந்துவராளி ஆலாபனை. நல்ல தொடக்கத்துடன் தேர்ச்சியுடன் வளர்ந்தாலும், விறுவிறுப்பு குறைந்து, சுருக்கிவரைந்து முடித்தார். தியாகையரின் ‘சிவ சிவ சிவ எனராதா’ எனும் ஆதி தாள கிருதி. இதன் இறுதியில் ‘பாகவதுலலோ போஸின்சி’ எனும் சரண வரியில் நிரவல் நல்ல தேர்ச்சி. இங்கு தாளவாத்தியம் இடைவெளிகளில் வாசித்த கும்கிகளும் பரன்களும் நன்று. இங்கு பிடித்த வேகம் ஸ்வரகல்பனை மேற்காலத்தில் சில உற்சாகமான பரிமாற்றங்களுக்கு இட்டுச்சென்றது. நீண்ட குறைப்பை குரலும் வயலினும் செய்து இக்கிருதியை முடித்தனர்.

பந்துவராளியை விட அடுத்து வந்த யதுகுல காம்போதி ஆலாபனை என்னைக் கவர்ந்தது. சபாஷ். ஆலாபனையின் தன்மைக்கேற்ப எதிர்பார்த்தபடி மாரிமுத்தாப்பிள்ளையின் ‘காலை தூக்கி நின்றாடும் தெய்வமே’ தமிழ் கிருதியை ஆதி தாளம் இரண்டு களையில் நிதானமாய் பாடினார். ரீங்கரிக்கும் குரலில் கிருதியை போஷித்து பாடுகையில் அரங்கமே பொலிவுற்றது.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: டி. எம். கிருஷ்ணா கச்சேரி

Standard

2013-dec-16-dinamalar-arunn-review-tmk[16 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

மைலாபூர் பைன் ஆர்ட்ஸ் சபா கச்சேரியின் தொடக்கத்தில் கிருஷ்ணாவின் கன்னடா (கானடா இல்லை) சஞ்சாரங்களின் தீஞ்சுவை ஆஹா, பேஷ். தொடர்ந்து மிஸ்ரசாபு தாளத்தில் தீக்ஷதரின் ‘ஸ்ரீ மாத்ருபூதம்’ கிருதியை நிதானமாகப் பாடினார். ஸ்ரீராம்குமார் வயலினில் வரிகளை நிழலாய் நகலெடுத்தார். மிருதங்கத்தில் அருண்பிரகாஷ் கஞ்சிராவில் புருஷோத்தமன் இருவரின் மெத்தான வாசிப்பும் சௌக்யம்.

‘வாசவாதி’ எனும் வரியில் நிரவல். மரபிசையின் கடினமான அங்கமான நிரவலை கன்னடா ராகத்தில் செய்வதற்கான வித்தை கிருஷ்ணாவிடம் உள்ளது. தொடர்ந்து விளம்பகாலத்திலேயே ஸ்வரங்களை படிப்படியாக அடுக்கியது அவரிடம் மட்டுமே இன்று கேட்கமுடிந்த தெவிட்டா திரளமுது. இசையும் சொல்லும் இழைந்துவரும் சரணத்தை முடித்ததும் எழுந்த கரவொலியை அதை இயற்றிய தீக்ஷதரின் படைப்பூக்கத் திறனுக்கானதாய் கொள்ளலாம்.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: அம்ருதா வெங்கடேஷ் கச்சேரி

Standard

2013-dec-15-dinamalar-arunn-review-amrutha[15 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ளதின் ஒரு வடிவம்]

மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் நவராகமாலிகை வர்ணத்தில் துவக்கிய அம்ருதா வெங்கடேஷ் பெங்களூருரைச்சேர்ந்த வளர்ந்துவரும் இசைக்கலைஞர். சரியான உச்சரிப்புடன், தமிழில் நிறைய பாடியது இன்றைய கச்சேரியின் பட்டொளி.

கௌளை ராகத்தில் தீக்ஷதரின் “ஸ்ரீ மஹாகணபதி” கிருதியில் சங்கதிகளின் அலங்காரங்கள் சற்றே மிகையானவை. ‘ரவிஸஹஸ்ர’ எனும் வரியில் தேர்ச்சியுடன் ஒலித்த ஸ்வரக்கல்பனையில் தியாகையரின் பஞ்சரத்ன கிருதியின் ஸ்வரக்கோர்வைகள் ஆங்காங்கே பளிச்சிட்டன..
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: பந்துலரமா கச்சேரி

Standard

2013-dec-12-dinamalar-arunn-review-pantularama[டிசெம்பர் 12, 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

ஆந்திராவில் பிரபலமான சமகால கர்நாடக இசைக்கலைஞர்களில் ஒருவரான பந்துலரமா, கௌளை ராகத்தில் சஞ்சாரங்களுடன் பாரதிய வித்யா பவனத்தில் தன் கச்சேரியைத் துவக்கினார். முத்துஸ்வாமி தீக்ஷதரின் ‘ஸ்ரீ மஹா கணபதி ரவதுமாம்’ எனும் மிஸ்ரசாப்பு தாள கிருதியில், ஸுவரகல்பனையில் மந்திரஸ்தாயி சஞ்சாரங்கள் அவருடைய காத்திரமான குரலில் ரம்யமாய் ஒலித்தது.

அடுத்ததாய் சுத்தசாவேரி ராகத்தில் ஆலாபனை. பொதுவாக அநாயாசமாக குரலை உபயோகிப்பவர், இவ்வாலாபனையில் தயங்கியே செய்ததுபோலிருந்தது. சுருக்க முடித்துக்கொண்டார். ஷேவாக் போன்றோர் தடுத்தாடக்கூடாது.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: உன்னிகிருஷ்ணன் கச்சேரி

Standard

2013-dec-11-dinamalar-arunn-review-unni[டிசெம்பர் 11, 2013 தினமலர் நாளிதழில் வெளியான கட்டுரையின் ஒரு வடிவம்]

பந்துவராளியை இக்கால கச்சேரிகளில் பூர்விகல்யாணி ஓரங்கட்டிவிட்டதோ என்று இரண்டு நாள்கள் முன்னர் இப்பகுதியில் குறைபட்டது கேட்டுவிட்டதோ. கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் நாரத கான சபாவில் நடைபெற்ற கச்சேரியை உன்னிகிருஷ்ணன் பந்துவராளி சஞ்சாரங்களில் தொடங்கினார். “கேட்டதைக் கொடுப்பவன் உடுப்பி கிருஷ்ணன், கேட்டவுடன் கொடுப்பவர் நம் உன்னிகிருஷ்ணன்” என்றார் அறிவிப்பாளர்.

உடன் வயலினில் எம்பார் கண்ணன், மிருதங்கத்தில் திருச்சி சங்கரன், கடத்தில் வி. சுரேஷ் வாசிக்க, சுவாதி திருநாளின் ’சரோருஹாஸன ஜாயே பவானி’ கிருதியை நிதானமாகப் பாடி, ‘புரந்தராதி சுரோத்தம…’ எனும் அனுபல்லவி வரியில் நிரவலும் செய்தார்.

அடுத்ததாய் பாபநாசம் சிவன் இயற்றிய ‘கற்பக மனோஹர’ கிருதியை மலையமாருதம் ராகத்தில் கண்டசாப்பு தாளத்தில் பாடினார். வித்தியாசமான தேர்வு எனலாம். வேறு எதுவும் சொல்வதிற்கில்லை. கச்சேரியின் முதல் விரிவான ஆலாபனை வாகதீஸ்வரி ராகத்தில். சில பத்தாண்டுகள் முன்னர் டி. கே. ரங்காச்சாரி செய்த ஆலாபனைகள் உரைகல். ஆலாபனையைவிட உன்னிகிருஷ்ணன் ‘பரமாத்முடு’ எனத் தொடங்கும் தியாகையரின் கிருதியை ஆதி தாளத்தில் நிதானமாய்ப் பாடியது நேர்த்தியாக இருந்தது.
Continue reading