பேராசிரியத்துவம்

Standard

நாளைக்கு ஒரு கிளாஸ் எடுப்பியா? அப்பறம் ஃப்ரீதானே, போரடிக்காதா? இப்பதான் செமஸ்டர் முடிஞ்சிருத்தே, ஃப்ரீதானே, தினம் என்ன பண்ணுவ? கிளாஸும் கெடயாது, சும்மாதானே போய்ட்டுவருவ? ஜாலியான பொழப்புடா ஒனக்கு. ஒரே சப்ஜக்ட்ட அதே கிழிஞ்சுபோன நோட்ஸ வெச்சு எடுத்தா போரடிச்சுராது? பி.எச்.டி. ரிஸர்ச்சுன்னா, அதுனால என்ன யூஸ்? நீ ஏதாவது புதுசா கண்டுபிடிச்சிருக்கியா? நீ விஞ்ஞானியா, வாத்தியாரா?

உயர்கல்வி நிறுவனத்தில் என் வேலைப் பெயரைச் சொன்னதும் அடுத்து கேட்கப்படும் கேள்விகள் மேற்படி வகையே. அப்போது அறிமுகமானவரும், அன்றாடம் சந்திப்பவரும் ‘வாத்தியார்’ யார் என்கிற தங்கள் அனுமானத்தில் ஒரே வகையினரே. வாத்தியார் ஆசிரியரா, பேராசிரியரா, ஆய்வாளரா இவற்றில் வித்தியாசங்கள் உண்டா என்பதில் கவனம் இல்லை.

பேராசிரியர் ஆசிரியர் மட்டுமில்லை. பேராசிரியர் ஆய்வாளர் மட்டுமில்லை.

ஆசிரியர் ஆசிரியத்துவம் செய்பவர். பேராசிரியர், பேராசிரியத்துவம்.
Continue reading

ஐஐடி முத்தமிழ் மன்றம் உரை

Standard

எச்சரிக்கை செய்து அனுப்பிவிடுவார்கள் என்றுதான் நினைத்திருந்தேன்.

“என்ன சார் இப்படி செஞ்சுட்டீங்க? எங்ககிட்டலாம் ஒரு வார்த்த கேட்டுருந்தீங்கன்னா இப்படியெல்லாம் நடக்காம… போனாப்போறது, மொத வாட்டியாப்போச்சு… அதுனால…” என்கிற வகையில்.

பின், திடுதிப்பென்று நேற்று “ஐஐடி முத்தமிழ் மன்றம்” ஏற்பாடு செய்திருந்த விழாவில் எனக்கு சால்வை போட்டு அதற்கான ஏற்புரை வழங்கச்சொன்னால்?
Continue reading

தங்கத்தின் ‘நேனோ’ நிறங்கள்

Standard

Image Courtesy: http://www.mi2g.com/cgi/mi2g/frameset.php?pageid=http%3A//www.mi2g.com/cgi/mi2g/press/110210.php

பெரியாழ்வார் வையமளந்தானை வாமன உருவில் “ஆனிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்” இட்டு திருத்தாலாட்டுப் பாடுகிறார். ஆனிப்பொன் மஞ்சள் நிறத்தது. சிலப்பதிகாரத்தில் “கடல் ஆடு காதையில்” மாதவி அணிந்திருந்த நகைகளில் இருந்து இன்றைய உஸ்மான் ரோட்டு நகைக்கடை தங்கம்வரை மஞ்சள் நிறத்தில்தான் நம் கண்களுக்குத் தெரியும். காரணம் சற்று தீவிரமானது. விவரிப்போம்.
Continue reading

நேனோ அலுமினியமும் ராக்கெட் அறிவியலும்

Standard

இங்கு சற்று ராக்கெட் அறிவியல் பேசுவோம். தொடர்ச்சியாக, நேனோ அளவில் செய்யப்பட்ட அலுமினா துகள்களினால் ராக்கெட் எவ்வாறு வெடிப்பதிலிருந்து தடுக்கப்படுகிறது என்பதையும் அறிந்துகொள்வோம்.

தீபாவளி ராக்கெட்டில் குச்சியின் முனையில் எரிபொருள் மருந்தும், அதை எரிக்க நெருப்பூட்ட இணைந்த திரியும் இருக்கும். பாட்டிலில் சொருகி பற்றவைத்தால் வானத்திலோ வீட்டுக் கூரையிலோ தவ்வும். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் போன்றவை செயற்கைக்கோள்களை வானத்தில் ஏற்றுவதற்காகத் தயாரிக்கும் பிரம்மாண்டமான ராக்கெட்டுகள் சிக்கலானவை. பற்றவைத்தால் இவ்வகை பிரம்மாண்ட ராக்கெட்டுகளும் ‘மங்கள்யான்’ போல செவ்வாய் கிரகத்திற்கும் தவ்வும். சில அல்பாயுசில் கடல் ஆராய்ச்சி செய்து அணையும்.
Continue reading

மருந்தீஸ்வரர் கோயிலில் போரோமியன் வளையங்கள்

Standard

சில வருடங்கள் முன்னர் இத்தலைப்பில் எழுதியுள்ளேன். சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். இந்த ‘மீள்பதிவில்’ உள்ளடக்கத்தை சிறிது வளர்த்தியுள்ளேன். ஓரிரு கோவில்களையும் சேர்த்துக்கொண்டுள்ளேன். கட்டுரையாக ஒரு வடிவம்  ‘அம்ருதா’ ஜனவரி 2014 இதழிலும் வெளியாகியுள்ளது; ‘டூக்கன் பறவைகளுக்கு…’ புத்தகத்திலும் இருபத்தியைந்தில் ஒரு கட்டுரையாக இடம்பெற்றுள்ளது. புதிய இணைய வாசகர்களுக்கு விஷயத்தை அறிமுகப்படுத்தவே மீள்பிரசுரம். காரணம், அடிக்குறிப்பில். இனி, கட்டுரை…
Continue reading

புத்தக முன்னுரை: ஏலியன்கள் இருக்கிறார்களா?

Standard

ஏலியன்கள் என்றால் நீ என்ன நினைக்கிறாய் என்று என் ஆறு வயது மகளிடம் கேட்டேன். “ஓ தெரியுமே;” (பிறகு எல்லாம் ஆங்கிலத்தில்…) “பிளானெட்டில் வசிப்பவர்கள்.” “அப்ப நாம்?” என்றவுடன், யோசித்து திருத்தி, “இல்லை, மார்ஸிற்கோ ப்ளூட்டோவிற்கோ வந்துபோவார்கள். ஸ்பேஸில் வசிப்பார்கள் அப்பா. ஸ்பேஸ்ஷிப் வைத்திருப்பார்கள்; பீச் (peach), வெளுப்பு, கறுப்பு என்று நம்மைப்போல் கலரில் இருக்கமாட்டார்கள், நீலம், பச்சை கலர்ல, ஓவல் மூஞ்சியுடன், குச்சிக்கால்களுடன், காற்றே இல்லாமல் உயிர் வாழ்வார்கள்”.

எனக்குப் பரிச்சயமான உலகைவிட்டு, அதேசமயம் முழுவதுமாய் மாறுபடாமல் (விவரணையை மீண்டும் படித்துப்பாருங்கள்) சொல்லிக்கொண்டே போகிறாள்.

“நிறுத்து நிறுத்து. இரும்மா; புத்தனாம்பட்டியே பார்கலை நீ, எங்கு புளூட்டோ வரை சென்று ஏலியன்களை பார்த்தாய்?” என்றேன்.
Continue reading

புத்தக முன்னுரை: நேனோ ஓர் அறிமுகம்

Standard

nano-front-s“நேனோ” என்பது அறிவியலாளர்களுடன் ‘நேனு நேனு’ என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் துறை. வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணினிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் (nanobot) எனும் நுண்ணூடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்தியை “நேனோ” என்று பெயரிடும் அளவிற்கு இத்துறை இன்று பிரபலம்.

இயற்கையை அறிதலுக்கு அறிவியல் சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ தொழில்நுட்பம் விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள்,  தொழில்நுட்பங்கள், இயற்கையில் உயிரினங்களிடையே ஏற்கெனவே படைப்பில், உபயோகத்தில் இருக்கிறது.
Continue reading

பாரத் ரத்னா சி. என். ஆர். ராவ்

Standard

இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத் ரத்னா’ நாட்டின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான சின். என். ஆர். ராவ்-விற்கு இவ்வருடம் வழங்கப்பட்டுள்ளது. கூடவே சச்சின் டெண்டுல்கருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

*

ராவ் இந்திய அரசாங்கத்துடன் பல்வேறு அறிவியல் சார்ந்த குழுக்களிலும் திட்டங்களிலும் தொடர்ந்து பணியாற்றியவர். பட்டியல் வெகு நீளம். பிரதம மந்திரியின் பிரதான அறிவியல்-ஆலோசனை குழுவின் தலைமைப்பொறுப்பில் (நான்கு பிரதம மந்திரிகளின் பதவிக்காலங்களை அடக்கிய காலவரையறையில்) செயலாற்றியுள்ளார். ராவ் இந்திய அறிவியல் மற்றும் அறிவியலாளார்களின் மேல் மிகுந்த பிடிப்பும் அதிகார சக்தியும் வைத்திருப்பவர். இச்செயல்பாடுகளில், நிச்சயம் இவர் கீழிருக்கும் அல்லது சக-விஞ்ஞானிகள் சிலருக்கு மூச்சு முட்டியுள்ளது. நேரடியாகவும் உட்பூசல்களாகவும் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்துள்ளன. இக்கட்டுரையில் இவற்றைத் தவிர்க்கிறேன். ஆய்வுகளும், சார்ந்த ஓரிரு சர்ச்சைகளுமே இக்கட்டுரையின் உள்ளடக்கம்.

*

சச்சின் நம் அனைவரின் ‘டார்லிங்’. நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து நேற்று (நவெம்பர் 16, 2013) ஓய்வுபெற்றார். ஒரு சாம்பியனின் வெற்றிக்குப் பின்னால் எவ்வளவு தியாகங்கள் எவ்வெவரிடமிருந்தெல்லாம் தேவை என்பதை உணர்த்தும் வகையில் பெற்றோர் முதல் பெருந்திரள் ரசிகர்கள் வரை அரவணைத்த அருமையான நன்றியுரையுடன் விடைபெற்றார். வருங்காலத்திற்கு கிரிக்கெட்டில் எட்டக்கூடிய சாதனைகள் எவை என்பதை நிறுவியதோடு அவற்றைச் சென்றடையவேண்டிய வாழ்க்கைப்பாதையையும் இளைய சமுதாயத்திற்கு உணர்த்தியுள்ளார். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பாரத் ரத்னா.

சின். என். ஆர். ராவ் (சிந்தாமணி நாகேஸ ராமச்சந்திர ராவ்) எண்பது வயதை நெருங்கும் அறிவியல் இளைஞர். இன்னமும் ரிடையர் ஆகவில்லை. வேதியியல் விற்பன்னர். மிக முக்கியமாக, இந்தியாவிலிருந்தபடியே, இங்கிருக்கும் வசதிகளை வைத்துக்கொண்டே, ஒரு துறையில் பெருஞ்சாதனை செய்துகாட்டியவர். விஞ்ஞானம்-தொழில்நுட்பம் துறைகளில் சி. வி. ராமன் (1954), விஸ்வேஸ்வரய்யா (1955), அப்துல் கலாம் (1997) வரிசையில், பாரத் ரத்னா பெறும் நான்காவது நபர்.

சச்சின், ராவ், இருவருக்கும் சில ஒற்றுமைகளைக் குறிப்பிடலாம். தங்கள் துறையில் நம்பிக்கையானவர்கள். இளவயதிலேயே நட்சத்திரங்களாய் அறியப்பட்டவர்கள். தொழிலை, துறையை மிகவும் விரும்பித் தேர்வுசெய்துகொண்டவர்கள். நெடுங்காலம், சராசரிக்கும் மிக அதிக தரத்தில் பணியாற்றியவர்கள். செயலாற்றும் விதத்தில் இன்றளவிலும்  வெளிப்படும் குழந்தை-போன்ற உற்சாகத்தில் பலரை துறைபால் ஈர்த்தவர்கள். ஒருவர் டெஸ்ட், ஒரு-நாள், டுவெண்டி-டுவெண்டி என்று கிட்டத்தட்ட எழுநூறு போட்டிகளுக்குமேல் பங்குபெற்றவர் என்றால் அடுத்தவர் திட-வேதியியல், நேனோ-அறிவியல் துறைகளில் ஆயிரத்தைநூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியவர். ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ரன்கள் என்றால், அடுத்தவரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான முறை சக ஆராய்ச்சியாளர்களால் சுட்டப்பட்டுள்ளது. இருவரும் இல்லறத்தில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியவர்கள். சச்சின் தன் நன்றியுரையில் மனைவியின் உறுதுணையை “என்னுடைய பெஸ்ட் பார்ட்னர்ஷிப்” என்று சிலேடையாகச் சொன்னார். ராவ் தன் மனைவியுடன் சமையல் செய்வது பொழுதுபோக்கு என்கிறார். மனைவியுடன் இன்றுவரை குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கு உழைக்கிறார். ராவ் இவ்வகையில் அளித்த ஒரு உரையை சில வருடங்கள் முன் நேர்முகமாய் கேட்டிருக்கிறேன். உரையின் முடிவில் நிகழ்ந்த ஹலோ-கைகுலுக்கல்களில் என் குரலும் கையும் இருந்தது.

சச்சின் சாதனைகள் பற்றிய தகவல்கள் நமக்கு பரிச்சயமே. இணையம் முதல் குமரிவரை எங்கு பெறுவது என்றும் தெரியும். சின். என். ஆர். ராவ் பற்றிய சில தகவல்களை இங்கு உராய்ந்துகொள்வோம்.

*

ராவ் தற்போது ஜவஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். 1950-களில் அமேரிக்காவின் பர்டூ பல்கலைகழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று, பிறகு சில வருடம் பெர்க்லி கலிஃபோர்னியாவிலுள்ள பிரசித்திபெற்ற பல்கலைகழகத்தில் பின்-முனைவர் தகுதியில், நவீன வேதியியலின் தந்தை என்று கருதப்படும் ஜி. என். லூயிஸ்-உடன் சில ஆய்வுகளை மேற்கொண்டார். 1959-இல் இந்திய அறிவியல் கழகத்தில் விரிவுரையாளராக ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார். பிறகு அப்போது தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி. கான்பூரில் இணைப்பேராசிரியராகச் சேர்ந்தார். 1976இல் மீண்டும் இந்திய அறிவியல் கழகம். இப்படித் திக்கித்திக்கித் தொடங்கிய இந்திய ஆராய்ச்சி வாழ்க்கையில் ராவ் பல இலக்குகளை எட்டியுள்ளார்.

ராவ் நேனோ-அறிவியலை இந்தியாவிற்கு கொண்டுவந்த முன்னோடி. அன்றாட அறை-சூட்டில் நிகழும் (அதி-கடத்திகள் அல்லது) மீ-கடத்திகளைப் (ரூம் டெம்ரேச்சர் சூப்பர்-கண்டக்டிவிட்டி) பற்றிய இந்திய ஆராய்ச்சிகளை உலகத்தரத்திற்கு எடுத்துச்சென்றவர். ஐம்பதுகளில் தொடங்கி இன்றுவரை பலபத்தாண்டுகளில் வேதியியலில் உதிக்கும் புதிய ஆராய்ச்சிக் கருத்தாக்கங்களை ஒட்டிய ஆராய்ச்சிகளை இந்தியாவில் முதன்மையாக நிகழ்த்திக்காட்டியவர். பென்ஸீன் வேதியையலில் ஆய்வுகளைத் தொடங்கியவர், 1968 வாக்கில் அ-கரிம வேதியியலுக்கும், திடப்பொருள் வேதியியலுக்கும் மாறினார். கோர்-ஷெல் கட்டாலிஸிஸ், அ-கரிம கரிம இரசாயன மாற்றங்கள், அறை-வெப்ப மீ-கடத்திகள், நேனொ-துகள்கள், நேனோ-குழாய்கள், கார்பன் நேனோ குழாய்கள், கிராஃபீன் பொருளின் தன்மைகள், கிராஃபீன் ரிப்பன்கள், குவாண்டம் பொட்டுகள், லித்தியம் பாட்டரிகள், டெம்ப்ளேட் சிந்தஸிஸ்… ராவ் ஆராய்ந்த இவையனைத்துமே வேதியியலில் வெவ்வேறு காலகட்டங்களில் முக்கியமானவையாகக் கருதப்பட்ட கருத்தாக்கங்கள்.

ஒரு ஆய்வைப்பற்றி சற்றே விரிவாக. மீ-கடத்திகள் (சூப்பர் கண்டக்டர்கள்) செய்வது பற்றிய ஆராய்ச்சி, 1911இல் கேமர்லிங் ஓனஸ் முதலில் மீ-கடத்தும் விளைவைக் கண்டறிந்ததில் தொடங்கியது. கம்பிகளில் மின்சாரம் கடக்கையில், கம்பி செய்யப்பட்ட பொருளுக்கேற்றவகையில் இக்கடத்தலுக்கு ‘எதிர்ப்பு’ கிளம்பி, சிறிதளவேனும் மின்சாரம் வெப்பமாய் விரயமாகும். இது அன்றாட மின்சாரக்கம்பிகளில் இன்றளவும் நிகழ்கிறது. சில பொருள்களை குளிர வைக்கையில், இந்த ‘எதிர்ப்பும்’ குறையும் என்று ஓனஸ் கண்டுபிடித்தார். இதனால், இவ்வெதிர்ப்பே இல்லாத பொருள் இழப்பின்றி மின்சாரம் கடத்தும் ‘மீ-கடத்தி’ ஆகிறது. இவ்வகைப் பொருட்கள் பொதுவாக மிகுந்த குளிரடிக்கும் மைனஸ் வெப்பநிலைகளிலேயே விளைவைக் காட்டியது. இயற்பியலையும் வேதியியலையும் இணைக்கும் இத்துறையின் ஆராய்ச்சிகள் அன்றாடத்திற்கு (மின்சாரக்கம்பிகள் போல) பயன்படும்விதமாய் மீ-கடத்திகளை அறை-வெப்பநிலையில் தயாரிப்பதின் சவால்களை எதிர்கொள்கிறது. இன்னமும் முழு வெற்றியில்லை. வேடிக்கையாய், மிகக்குளிரிலிருந்து சற்றே சூடான ஆனால் (23 கெல்வின் போன்ற) ‘மைனஸ் வெப்பநிலைகளில்’ இவ்விளைவைக் காட்டும் பொருட்களை ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்திகள்’ என்றழைக்கிறோம்.

டிசெம்பர் 1986இல் இயற்பியல் துறையில் ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்திகள்’ துறையில் புதிய கண்டுபிடிப்பு. அப்புதிய பொருள் 23 கெல்வினையும் கடந்து சூடான 35 கெல்வின் வெப்பநிலையிலும் மீ-கடத்தும் குணத்தை வெளிப்படுத்தியது. ராவ் இதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. பேராசிரியர் ஆண்டர்ஸன்-னை இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஒரு மாநாட்டில் ராவ் சந்திக்கிறார். ராவ்-வின் உரைக்குப் பிறகு ஆண்டர்ஸன் அவரிடம் இப்பொருள் பற்றி கேட்கிறார். ராவ் ‘எனக்கு இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது பற்றித் தெரியாதே’ என்கிறார். ஆண்டர்ஸன் “அப்பொருள் லாந்த்தானம், தாமிரம் ஆகிய மூலப்பொருள்களின் ஆக்ஸைடுகளினால் ஆனது என்கிறார். ராவ்-விற்கு பொறி தட்டுகிறது. அப்பொருள் லாந்த்தானம்-காப்பர்-ஆக்ஸைடு (LaCuO4) தானே? ஆமோதிக்கிறார் ஆண்டர்ஸன். தான் பல வருடங்கள் முன்னரே (1971இலேயே கங்குலியுடன் எழுதிய ஆய்வுக்கட்டுரையை குறிப்பிட்டு) இப்பொருளைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளியிட்டிருப்பதை ஆண்டர்ஸனிடம் தெரிவிக்கிறர் ராவ். அடுத்த இரண்டு மணிநேரங்கள் இருவரும் சோதனைச்சாலையில் இக்கூற்றை மெய்பிக்கும் ராவ்-வின் ஆய்வுக்கட்டுரைகளைப் பரிசீலிக்கின்றனர். ஏற்கனவே ராவ் La2CuO4 எவ்வாறு ஃபெர்ரோ-மாக்னடிஸம் குணத்தை எதிர்க்கவல்லது என்பதை நிறுவியுள்ளது தெரிகிறது. இக்குணம் அனைத்து மீ-கடத்திகளிலும் தேவை.

எவ்வாறு தான் ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்திகள்’ ஆய்வில் பங்களிக்கலாம் என்று ராவ் கவலையுறுகிறார். அவர் சுயசரிதையின்படி “பல தூக்கமில்லா இரவுகள்” சோதனைச்சாலையில் கழிகின்றன. இரண்டு மாதங்களில் உலகின் முதல் திரவ-நைட்ரஜன் கொண்டு இயங்கும் ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்தி’ கண்டறியப்படுகிறது. அதுவரை மீ-கடத்திகளை செய்வதற்கு திரவநிலை ஹீலியம் தேவைப்பட்டது. ராவ் கண்டறிந்த புதிய வேதியியல் காம்பவுண்டு YBa2Cu3O7 யிட்ரியம், பேரியம், தாமிரம் ஆக்ஸைடுகளால் ஆனது. இதை ‘123 காம்பௌண்ட்’ என்றழைப்பார்கள். தொண்ணூறு கெல்வின் (90K) வெப்பநிலையில் இயங்கிய முதல் ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்தி’ (ஆனால், இதுவும் அறை-வெப்பநிலையில் செயல்படாது). தனிப்பட்ட ஆய்வில், ராவ்-வின் சோதனைச்சாலையில், பெங்களூரில் கண்டறியப்பட்டதென்றாலும், சமகாலத்தில் அமேரிக்காவின் பெல் லாபிலும், சீனாவின் பீஜிங்கிலும் இதே பொருள் கண்டறியப்பட்டதும் நிஜம்.

இப்பொருளை கண்டறிந்தற்கான முன்னுரிமையை ராவ்-வினால் பெற முடியவில்லை. இன்றும் விக்கிபீடியாவில் இவ்வாராய்ச்சியின் முன்னுரிமையில் இரு அமேரிக்கர்களையே முன்னிறுத்துகிறது. சுயசரிதையிலும் ராவ் இந்த “கண்டுபிடிப்பிற்கான முன்னுரிமை இழப்பை” பற்றி நேரடியாக விளக்கவில்லை. சரிதையில் அவர் குறிப்பிடும் ‘இழப்பின் வலி’, அன்றே (எண்பதுகளில்) சரியான தகவல் தொடர்பும், வேண்டிய நவீன உபகரணங்களும் தன் சோதனைச்சாலையில் இருந்திருந்தால் இந்தியாவிலேயே தன்னாலும் உலகத்தரமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கமுடியும் என்கிற ஆற்றாமையினால் எனக்கொள்ளலாம்.

கிராஃபீன் என்பது ஒரு அணுவின் பருமனான நானோ மீட்டர் உயரத்தில், கார்பன் அணுக்கள் பக்கவாட்டில் கைகோர்த்து அமைக்கும் ஓர் அணிவரிசை. இப்பொருளை கண்டுபிடித்ததற்காக 2010திற்கான இயற்பியல் நோபல் பரிசு இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரீ கெய்ம் (Andre Geim) மற்றும் கொன்ஸ்டெண்ட்டின் நொவோஸெலெவ் (Konstantin Novoselov) இருவருக்கும் அளிக்கப்பட்டதை நாம் அறிந்திருக்கலாம். இந்த நூற்றாண்டில் அவரது ஆராய்ச்சியை கவனித்தால், பழகிய பாட்டையிலிருந்து விலகி, ‘பெட்டிக்கு-வெளியே’ ராவ் யோசித்த ‘ஐடியா’, நுன்னோக்கியில் நேனோ-சைஸ் ஸ்ட்ரா போலிருக்கும் ‘கார்பன் நேனோ குழாய்களை’ அதன் மாலிக்கியூல் பிணைப்புகள் உடையாமல், வலிக்காமல் உரித்து, கிராஃபீன் ரிப்பன்களாய் செய்யமுடியும் என்று ஒரு ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

*

சச்சினை ‘ரன்-மெஷின்’ என்றால் ராவ்-வை ஆய்வுக்கட்டுரைகள் எழுதிக்குவிக்கும் ‘பேப்பர்-மெஷின்’ எனலாம். சாதாரணர்களை அசரடிக்கும் இவரது ஆய்வுக்கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பற்றி, சமீபத்தில் வெளியான, சுயசரிதையான ‘முடிவிலா ஏணியில் ஏறிக்கொண்டே’ (கிளைம்பிங் தி லிமிட்லெஸ் லேடர்) புத்தகம் உட்பட, ராவ் பல இடங்களில் பேசியுள்ளார்.

பேராசிரியர் ஹெர்பெர்ட் பிரவுன் “ஆராய்ச்சி செய்வதற்கு உகந்ததென்றால், பிரசுரிப்பதற்கும் உகந்ததாயிருக்கவேண்டும்” என்றது ராவ்-விற்கு பால்யத்தில் உபதேசமாயிற்று. இதே கதியில் விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடே “பணியாற்று, முடி, பிரசுரி. இதுவே அறிவியலில் ஆதாரம்” என்றதும் ராவ்-விற்கு வழிகாட்டியாகியது.

இந்திய அறிவியல் நிறுவனத்தில் தன் 75ஆவது பிறந்தநாளையொட்டி ஆற்றிய உரையில் “எனக்குத் தெரிந்து தன் இறுதிநாள் வரை செயலாற்றிக்கொண்டிருந்த ஒரே இந்திய விஞ்ஞானி சி. வி. ராமன் அவர்களே. பல விஞ்ஞனிகள் ஓரிரு ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவிட்டு மறந்துவிடுவர். வருடத்திற்கு 20, 30 ஆய்வுக்கட்டுரைகளை எழுதவில்லையென்றால் நான் பரிதாபமாக உணர்வேன். அறிவியலில் உயிருடனிருப்பதற்கான ஒரே வழி ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுக்கொண்டிருப்பதே. எனக்கு வயாதாகிவருவதால் ஒரு சந்தேகம் வாட்டுகிறது. எனக்குப்பிறகு என்ன நடக்கும்? நான் செய்தவை அனைத்துமே மறைந்துவிடுமா? இதற்கு என்னிடம் இருக்கும் ஒரே பதில், ஆய்வுக்கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதே இறப்பற்ற நிலைபெறும் வழி.” என்றார்.

கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டர்களின் சாதனைகளை ஒரு அளவுகோலைக்கொண்டு நிர்ணயிப்போம். நூறு விக்கெட்டுகள், ஆயிரம் ரன்கள் எடுத்தவர்கள். எத்தனை விரைவில் (டெஸ்டுகளில்) அதைச் செய்தார்கள். அடுத்த கட்டமாய் ‘இருநூறு-இரண்டாயிரம்’ எட்டியவர் யார்… இப்படி. உதாரணமாய், கபில் தேவ் ‘ஐநூறு-ஐயாயிரம்’ தொட்ட சாதனையாளர்.

ஆராய்ச்சித்துறைகளிலும் இவ்வகையில் அளவுகோல்களைக் காணலாம். தீவிரமாகச் செயலாற்றிவரும் விஞ்ஞானி ஒருவர் எத்தனை ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை எத்தனை முறை சக-ஆய்வாளர்களால் தங்கள் கட்டுரைகளில் சுட்டப்பட்டுள்ளது என்கிற எண்ணிக்கைகள் உதவும். எழுதிய நூறு கட்டுரைகள், மொத்தமாக ஆயிரம் முறையேனும் சுட்டப்பட்டுள்ளது என்கையில் “நூறு-ஆயிரம்” பிராக்கெட்டில் இருக்கும் விஞ்ஞானி என்கிற தகுதியை பெறுகிறார். நிறைய உழைத்து, பல வருடம் ஆய்வுத்துறையில் செயல்படுகையில் இந்த அளவையின் மதிப்பு அதிகரிக்கும். இன்றளவில் “ஆயிரம் (ஆய்வுக்கட்டுரைகள்) – பத்தாயிரம்” (முறையேனும் சுட்டப்பட்டுள்ளது) என்கிற மதிப்புடன் இருக்கும் ஒரே இந்திய விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் மட்டுமே.

இன்னொரு வகையில் ராவ்-வின் ஆராய்ச்சித் தரத்தை வெளிக்கொணரலாம். சமீபகாலமாய் ‘ஹெச்-இண்டெக்ஸ்’ என்கிற மதிப்பு உருவாகியுள்ளது. ஒரு ஆராய்ச்சியாளரின் எவ்வளவு கட்டுரைகள் எண்ணிக்கையில் அவ்வளவேனும் மற்ற சக ஆராய்ச்சியாளர்களால் (தங்கள் கட்டுரைகளில்) சுட்டப்பட்டுள்ளது என்பதை நிர்ணயிக்கும் அளவை. ஒருவர் எழுதியுள்ள பத்து ஆராய்ச்சிக் கட்டுரைகளில், ஐந்து தலா இருபது முறைகள் மற்றவர்களால் சுட்டப்பட்டுள்ளது என்போம். இரண்டு கட்டுரைகள் எட்டு முறைகளும், மிச்சம் மூன்று கட்டுரைகள் இன்னமும் சுட்டப்படாமலும் உள்ளது. அப்படியெனில் அவரது ஏழு கட்டுரைகள் (ஐந்து + இரண்டு) குறைந்தபட்சம் ஏழுமுறையேனும் சுட்டப்பட்டுள்ளது என்பதால் அவரது எச்-அளவை ஏழு. கவனியுங்கள், இருபதோ, எட்டோ இல்லை. ஏழு-தான். பின்னாளில் அவர் ஆராய்ச்சிக்கட்டுரைகளே எழுதவில்லை என்றால், அதிகபட்சமாக அவரது எச்-அளவை பத்து என்ற இலக்கை அடையலாம் (அவைகள் பத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் மற்றவர்களால் சுட்டப்பட்டிருந்தாலும் எச்-அளவை பத்துதான்). அதாவது, என்றோ செய்த ஆராய்ச்சியை வைத்து இன்றும் ஜல்லியடிக்கமுடியாது. மிகக் குறைவான எச்-அளவை காட்டிக்கொடுத்துவிடும். சச்சின் முதல் பத்து டெஸ்டுகளில் ஆடியதை மட்டும் வைத்துக்கொண்டு, சமீபகாலம் வரை “டக்-அவுட்” ஆகியபடியே டீமில் காலந்தள்ளமுடியாதைப்போல.

எச்-அளவை ஆராய்ச்சித்துறைகளில் கண்ஸிஸ்டென்ஸி-யை, அளக்க ஓரளவு சரியான அளவுகோல். செயல்படும் விஞ்ஞானி என்பவர் தொடர்ந்து சீராக ஆராய்ச்சி செய்து புதிய கட்டுரைகளை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். வருடந்தோறும் அதிகரித்துவரும் எச்-அளவை கொண்ட விஞ்ஞானிகள், தொடர்ந்து சக-விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்க்கும் ஆராய்ச்சிகளாகவே செய்துவருகிறார் என்பதும் புரிதல். வெவ்வேறு அறிவுத்துறைகளில், ஆராய்ச்சி மற்றும் ஆய்வாளர்களின் எண்ணிக்கை அடர்த்திக்கேற்ப, திறனுள்ள ஆராய்ச்சியாளர்களுக்கான இந்த எச்-அளவையின் மதிப்பு நிர்ணயமாகும்.

வேதியியலில், ராவ்-வின் எச்-அளவை இன்றளவில் நூற்றியெட்டு.

அதாவது, ராவ்-வின் நூற்றியெட்டு ஆய்வுக்கட்டுரைகள் நூற்றியெட்டு தடவையாவது மற்ற ஆய்வாளர்களால் சுட்டப்பட்டுள்ளது. ஒப்பீட்டிற்கு ஒரு விஷயம் சொல்கிறேன். சமீப பத்தாண்டுகளில் அறிவியல் துறைகளில் நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளுக்குப் பொதுவாக எச்-அளவை தொன்னூறுக்கு மேல் இருப்பது புலனாகியுள்ளது. ராவ் இதுவரை மூன்று முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

சச்சினின் “நூறு-சதங்கள்” சாதனை வருங்கால ஆட்டக்காரர்களுக்கு நிரந்தர எட்டாக்கனியாகிவிடலாம் (ஜாக் காலிஸ் மட்டும்தான் டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் 51 சதங்களை எட்டிவிடும் நிலையில் இருக்கிறார். பார்ப்போம்.). அதைப்போல ராவ்-வின் இந்த “எச்-அளவை நூற்றியெட்டு” என்பது இனியொரு இந்திய விஞ்ஞானியால் எட்டவே முடியாத சாதனையாகிவிடும் என்றே கருதுகிறேன்.

*

அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும் நோக்கின் சில உபாதைகளிலும் ராவ் சிக்கிக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் (2011இல்) ராவ் பெயர் தாங்கி சக-ஆய்வாளர்கள் இருவருடன் வெளியான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் ஏற்கனவே (வேறு ஆய்வாளர்களால் எழுதப்பட்டு) வெளியாகிவிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையிலிருந்து காப்பியடிக்கப்பட்ட கருத்துகள் உள்ளன என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதன் உண்மை நிரூபணமானதும் ராவ் பகிங்கரமாக கட்டுரை வெளியான ஆராய்ச்சி சஞ்சிகையிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இது ஒரு ‘தற்செயல் நிகழ்வு’ என்றும் பிரச்சனையிலிருந்து ‘கழன்றுகொண்டார்’. ஆனால், தொடர்ந்து ஊடகங்களில் வெளியான சில கட்டுரைகளில் அவரது மேலும் சில ஆய்வுக்கட்டுரைகளில் சில பத்திகளாவது ஏற்கனவே வெளியானவைகளிலிருந்து வார்த்தை பிசகாமல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. ஏற்கனவே வெளியான ஆராய்ச்சி முடிவுகளையே இக்கட்டுரைகளில் மறுபதிப்பு செய்யவில்லை என்பதால் இவ்வகை குற்றாச்சாட்டுகள் அவரது பெருவாரியான ஆய்வுக்கட்டுரைகளின் மதிப்பைக் குறைக்கவில்லை. என்றாலும், துறையில் அவரது நற்பெயர் சற்று அடிவாங்கியது நிஜம். நேரடியாக தவறுகளுக்குப் பொறுப்பேற்காமல், ‘யாரோ என் நற்பெயரை குலைக்க அவதூறு செய்கிறார்கள்’ என்கிற ரீதியில் அவர் பேசியதும், தவறுக்கு அனுபவமில்லாத ஆராய்ச்சிமாணவனை ‘கை காட்டி விட்டு’ நழுவியதிலும் சக விஞ்ஞானிகளின் அதிருப்திக்கு உள்ளானார். “சரிபார்க்காமல் எதற்கு கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவேண்டும்; எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் ஒரே இலக்கா; ஆய்வுக்கட்டுரை செம்மையாக இருக்கவேண்டும். என்பதில்லையா…” போன்ற விமர்சனங்கள் எழுந்தது. சந்தடி சாக்கில் பொறாமை நாக்குகள் சில பலவாறு சுழன்றதையும் அவரால் இன்றளவும் தவிர்க்க முடியவில்லை.

அதிகமாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுகையில் ஒவ்வொரு கட்டுரையிலும் அனைத்து அங்கங்களையும் ஒருவராலேயே சரிபார்க்கமுடியாமல் போவது ஆபத்தான பக்கவிளைவு. ராவ் போன்ற மூத்த விஞ்ஞானிகளை பிரதான ஆராய்ச்சி ஆலோசகராகவோ, கருத்தாக்கத்தின் காரணகர்த்தாவாகவோ மட்டும் கொண்டு, அவருக்குக் கீழே கட்டுரை எழுதுவதில் அனுபவமில்லாத மாணவர்களும், ஜூனியர் ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து கூட்டுத்தயாரிப்பாய் ஆய்வுகள் மேற்கொண்டு, அதன் முடிவுகளை கட்டுரைகளாய் எழுதி சமர்ப்பிக்கையில், இவ்வகை ’சுட்டெழுத்து’ பக்கவிளைவுகள் பதம் பார்த்துவிடும். சென்ற பத்தாண்டுகளில் கவனித்தால் (2000த்திற்குப் பிறகு) கிட்டத்தட்ட வாரத்திற்கு ஒன்று என்கிற ரீதியில் ராவ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுகிறார்!

ராவ்-வின் இவ்வகை செயல்பாடுகள், அவரது தலைமையின் கெடுபிடிகள் போன்றவை சக-விஞ்ஞானிகள் சிலரால் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அவர் ‘பாரத் ரத்னா’ விருது வாங்கியதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதும் பெங்களூரின் ஐ.ஐ.எஸ்.சி. விஞ்ஞானி/பேராசிரியர் ஒருவர் “நான் கருத்து கூறமாட்டேன். ஏன் கூறமாட்டேன் என்பதையும் சொல்ல மாட்டேன். வேண்டுமானால் ராவ்-வின் நண்பர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என்கிற ரீதியில் பதிலளித்துவிட்டார்.

ராவ் இதற்கெல்லாம் பெரிதாக கவலைப்படுவதில்லை. நான் என்வகை ஆராய்ச்சியையும் அறிவியலையும் தொடர்கிறேன். சிலருக்கு இதில் ஒப்புமை இருக்காதுதான், பரவாயில்லை, என்கிறார்.

சச்சின் ‘அவுட்-ஆஃப்-ஃபார்ம்’ ஆகி போட்டிகளில் சில நெருக்கடியான சமயங்களில் சொதப்பியுள்ளார் என்றாலும், பல வருடங்களாய் சராசரிக்கும் அதி உயரமான அளவில் விளையாடி பல சாதனைகளையும் வெற்றிகளையும் ஈட்டித்தந்துள்ளார் என்பதும் நிஜம்தானே. ராவ்-வின் தீவிர உழைப்பையும், அறிவியலின் மீதுள்ள விசுவாசத்தையும், ஆர்வத்தையும், பரந்துபட்ட பங்களிப்பையும் கணக்கில்கொள்கையில், ராவ்-விற்கு ‘பாரத் ரத்னா’ வழங்கப்பட்டதில் அவரது விமர்சகர்களுக்குமே பெரிதாக குறை இருக்க முடியாது.

சுயசரிதையில் நினைவுகூறுகையில் சி.என்.ஆர். ராவ் சொல்வது நாம் அனைவரும் ஆசைப்படும் ‘முழுமையை’ உணர்த்துகிறது: “என் வாழ்க்கை எவ்வளவு திருப்திகரமாக இருந்தது என்பதை நினைத்துப்பார்கிறேன். அருமையான உத்தியோகமும் அதேபோன்ற நல்ல இல்லறமும் அமையப்பெற்றேன். விஞ்ஞானியாக என் வாழ்க்கையை மகிழ்சியாக கழித்தேன். வாழ்வதற்கு வேறு சிறந்த வழி எனக்குத் தெரியாது. வயதாவதோடு மகிழ்ச்சியும் கூடுகிறது. வருத்தமேதுமில்லை. அமைந்தால், மீண்டும் இவ்வாழ்க்கைப்பாதையே தேர்வு செய்வேன்.”

***

[கட்டுரையிலுள்ள சில தகவல்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்ட பேராசிரியர் அபினந்தனுக்கு நன்றி]

சான்றேடுகள்; மேலும் வாசிக்க (அனைத்தும் சி.என்.ஆர்.ராவ். பற்றிய தகவல் பக்கங்கள்)

பேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா?

Standard

வல்லபூதம் வாலாஷ்டிக பேய்கள் |
அல்லற் படுத்தும் அடங்கா முனியும் |
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் |
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் |
பெண்களைத் தொடரும் ப்ரும்மராட்சதரும் |
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட ||

எங்கள் வீட்டு உதவியாளி சமீபத்தில் தன் பேத்திக்கு உடல் நலமில்லை என்று விடுப்பு கேட்டாள். விசாரிக்கையில் இரவு மாடி அறையில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு திடீரென்று எக்கச்சக்கத்திற்குக் காய்ச்சலாம். அருகில் படுத்திருந்த இவள் தரையெல்லாம் என்றுமில்லாத அளவிற்கு சில்லிட்டுப்போய்விட்டதாய் உணர்ந்திருக்கிறாள். கதவு திறந்திருக்கவே, வெளியே வந்து பார்த்தால், கீழ்ப் படிக்கட்டில் விரிந்த கூந்தலுடன் யாரோ உட்கார்ந்திருப்பது மாதிரியிருந்ததாம். யாரது என்றதும் திரும்பிய கரிய உருவத்தைப் பார்த்து இவள் அலறியதில் கீழ்க்கட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் விழித்தெழுந்து ஓடிவந்து சமாதானப்படுத்தியுள்ளனர். குழந்தையின் ‘திடீர்’ காய்ச்சலுக்குக் காரணம் இவள் பார்த்த ‘முனி’ குழந்தையைச் சாப்பிட இழுத்துக்கொண்டு போக முயன்றதுதான் என்கிறாள். கடவுள் புண்ணியத்தில் தப்பிவிட்டதாம். விடுப்பில் குழந்தையுடன் வேறு ஊருக்குச் சென்றுவர விரும்புகிறாள்.

மனித உயிரியல், மற்றும் பௌதீக இயங்கு விதிகளுக்குக் கட்டுப்படாத, அவ்வப்போது தட்டுப்பட்டு அலறவைக்கும் அருவங்கள், அதாவது பேய் பிசாசுகள் இருப்பதாய் நம்மில் பலர் நம்புகிறோம். அதேபோல, சாமான்யர்கள் கண்களில் தட்டுப்படாத அணுக்கள், அணுக்கருத் துகள்கள் எனவும் பொருள்கள் இருப்பதாய் அறிவியலாளார்கள் என்றழைக்கப்படுபவர்களில் பலர் நம்புகிறார்கள்.

முன்னதைக் கிட்டத்தட்ட மூடநம்பிக்கை என்கையில், பின்னதை அவ்வாறு நாம் கருதுவதில்லை. இது புரட்டில்லையா? பேய் பிசாசு இருப்பதாய் நம்புவதை அறிவியல் சிந்தை மறுக்கிறதா? அப்படியெனில் உலகில் சாமான்யர் இதுவரை பார்த்திராத ஏலியன்கள், வளி-அறிவு-ஜீவராசிகள் இருப்பதாய் ஏன் நம்பலாம்? எவ்வகைத் தேடலுக்கும் இதுவரை தென்படாத இவர்கள் இருப்பதாய் மட்டும் ஏன் நம்பவேண்டும்? அறிவியல் சிந்தைக்கே ஒவ்வாத செயலாய் படுகிறதே. ஏன் ஒப்புக்கொள்கிறோம்?

Continue reading

மகுடி இசையும் பாம்புச் செவியும்

Standard

[இத்தலைப்பில் 2009இல் ஒரு குறுங்கட்டுரை எழுதியிருந்தேன். சிலர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அதே தலைப்பைப் பார்த்தவுடன் ஏற்கனவே வாசித்ததுதானே என்று விலகிவிடலாம். 2012இல் பாம்புச்செவியைப் பற்றிய புதிய ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகின. இவற்றையும் கருத்தில்கொண்டு இங்கு கட்டுரையை முன்பிருந்து இரண்டுமடங்கு விரித்துள்ளேன்.]

மகுடி இசைக்குக் கட்டுண்டுதான் பாம்பு ‘படம்’  எடுத்து ஆடுகிறதா? இந்தக் கேள்வி நம்மில் சிலருக்கு இருக்காது. ஏனெனில் ‘ஆம்’ என்கிற பதிலில் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனக்குச் சிறுவயது முதல் இக்கேள்வியும் அதற்கான மேற்படி பதிலில் நம்பிக்கையின்மையும் இருந்தது. குடவாசல் பாம்பாட்டி மகுடி கொண்டு வர மறந்து ஒரு முறை பாம்புக்கூடையின் மூடியை திறந்து அதைவைத்து ஆட்டியே பாம்பை படமெடுக்கச் செய்தது முதல்.

இதனால் சிறுவயதிலேயே எனக்கு இதற்கு தீர்வு தெரிந்துவிட்டது என்று சொல்லமாட்டேன். இப்பொழுதும் ரேடியோவில் புன்னாகவராளி கேட்கையில் அப்படி இப்படி பார்த்துவிட்டு, காலை நாற்காலி மீது மடித்து வைத்துக்கொள்ளுவேன்.

சரி, அப்ப விடை என்ன?
Continue reading

அறிவியலும், சந்தை அறிவியலும்

Standard

சந்தை இலக்கியம் என்று சில பத்தாண்டுகளுக்கு முன் தமிழ் எழுத்துச்சூழலில் அறியப்பட்ட எழுத்துவகை இருந்தது நாமறிந்ததே. ‘சந்தை’, சமீபகாலமாக ‘வணிக’ அல்லது ‘கேளிக்கை’ என்று மாறியுள்ளது. வாசிப்பனுபவத்தில் அதற்கான தேவையும் பங்களிப்பும் இருந்தாலும், சந்தை இலக்கியத்தின் ரசனை என்பது வாசிக்கும் மக்கள் தொகையின் பொதுவான சராசரியை கவ்வி நிற்பது. சந்தை இலக்கியத்திற்கு விற்பனையே குறி. இதைப்போலவே ‘சந்தை அறிவியல்’ என்று ஒரு வகை உள்ளது. இன்று பரிமளிக்கிறது.

‘சந்தை அறிவியல்’ ஊடகச் செல்வாக்கினால் முக்கியமாக, ராக்ஷஸமாக வளர்ந்துவரும் இணையத்தினால், வளர்த்தெடுக்கப்பட்ட ‘பாப்புலர் சயன்ஸ்’ வகையின் வீழ்ச்சி. பாப்புலர் சயன்ஸ் என்பதை பரப்பறிவியல் (பொதுமக்களிடம் பரப்பும்வகையில் பகிரப்படும் அறிவியல்) என்றால், சந்தை அறிவியலை பரபரப்பு அறிவியல் எனலாம்.

இவ்வளவு நாள் மனித அறிவுக்கலனில் தொகுத்துள்ள அறிவியல் புரிதல்களை எதிர்த்தோ, அல்லது மாற்றியமைக்கும் வகையிலோ புதிய ஆராய்ச்சி முடிவுகள் வந்துள்ளதாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்துவது. பலசமயம் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள் அப்படித்தான் கூறுகிறார்களா என்பதை சரிபார்க்காமலேயே. சிலசமயங்களில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளும் பரபரப்பிற்குப் பலியாவது துரதிருஷ்டம். விரைவான புகழுக்காகவோ, அல்லது தங்கள் ஆராய்ச்சி மான்யத்தை தக்கவைத்துகொள்ளும் நிர்பந்தங்கள் போன்றவைகளில் சிக்கியோ ஊடகங்களைத் திரட்டி, பிரஸ்-மீட் வைத்து விளம்பரம் தேட விழைகிறார்கள். கடந்த இரண்டு மூன்று வருடங்களில் இணையத்தில் பிரபல செய்திவெளியீட்டு நிறுவனங்களின் அறிவியல் செய்திகளை கவனித்துவந்தாலே இது தெரியும்.

செல்போனினால் சிட்டுக்குருவிகள் அழிவு; தேனீக்களும்தான்; மனித மூளையும் பாதிக்கப்படுகிறது; செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்; கொட்டாவி மூளையின் சூட்டைத் தணிக்கிறது; ஒளியை விஞ்சும் நியூட்ரினோக்கள்: கவுந்தார் ஐன்ஸ்டின்; கண்டுவிட்டோம் ‘கடவுள் துகள்’; ஆர்செனிக்கை உண்ணும் பாக்டீரியா: உயிரியல் பாடப் புத்தகங்களை மாற்றியமைக்கவேண்டியதே; இப்படியாப்பட்ட ‘அறிவியல் செய்திகள்’.

செல்போன் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்தாலும், சிட்டுக்குருவிகள் திரும்பிவந்துவிட்டதாய் ஒரிரண்டு மாதங்கள் முன் செய்திவெளியானது (டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்) உங்களில் அநேகருக்குத் தெரியுமோ? தெரியாதிருந்தால் வியப்பில்லை; ‘பரபரப்பிற்கு’ எதிராய் வரும் மறுப்புச் செய்திகளை, ஆதாரம் இருந்தாலும், அவ்வளவு விளம்பரப்படுத்தமாட்டார்கள். இதுவும் சந்தை அறிவியலின் அறிகுறி.

தேனீக்கள் அலைபேசியின் அலைகளினால் பாதிக்கப்படுகின்றன என்று இரண்டு வருடம் முன் (இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆராய்ச்சி சஞ்சிகையில்) வெளியான ஒரு ஆராய்ச்சியை, ஊடகச்செய்தியைக் கடந்து மூலத்தை — ஆராய்ச்சி கட்டுரையை — கவனித்து வாசித்துப்பார்த்தேன். தேனீக்கள் வசிக்கும் கூட்டினுள் அலைபேசியைப் போட்டுவிட்டு, அதனை தொடர்ந்து ‘டாக்-மோடில்’, அதிர்வு நிலையில் (வைப்ரேட்-மோடில்), சுமார் ஒரு மணிநேரம் வைத்திருந்து, அதனால் தேனீக்கள் பரபரப்பாய் வெளியேறிவிடுகின்றன. அலைபேசியை அண்டவில்லை என்று ‘நிறுவியுள்ளர்கள்’.

‘டிகிரி படிப்பு’ இல்லாத எழுத்தறிவு மட்டுமுள்ள எளியோருக்கும் வாசித்தவுடன் அன்றாடத்துடன் விலகியுள்ள இந்த ‘ஆராய்ச்சி முடிவுகளின்’ நிதர்சனம் புலப்பட்டுவிடும். ஆனால், சார்ந்த ஊடகச் செய்திகள் தலைப்பிலேயே “செல்ஃபோனினால் தேனீக்களுக்கு ஆபத்து; விஞ்ஞானிகள் அறிக்கை” என்று வருகிறது. யாரைக் குறை சொல்வது?

சென்ற வருடம் (2011) வாராந்திரியில் “எச்சரிக்கை ரிப்போர்ட்” பகுதியில் செல்ஃபோனை காதில் வைத்துப் பேசுகையில் மூளை பாதிக்கப்படும் ‘அபாயத்தை’ப் பற்றி ஒருபக்கத்தில் (கலர்படங்கள் போக இருக்கும் இடம் மிகாமல்) சுருங்கச்சொல்லி விளக்கியிருந்தார்கள். தலையின் ஒருபகுதியில் சிவப்பாய் வருமாறு கலரில் மனித முகமும் போட்டு, ஆராய்ச்சி முடிவுகள் இப்படித் தெரிவிப்பதாய் எழுதியிருந்தார்கள். கூடவே ஒரு மருத்துவரின் (அவர் படமும் உண்டு) பரிந்துரை. அலைபேசிகள் உபயோகத்தில் இருக்கையில் (பேசிக்கொண்டிருக்கையில்) மின்காந்தக் கதிரியக்க அலைகளை வெளிப்படுத்த வல்லவை. அதனால் மூளைக்கு அருகில் காதில் வைத்துப் பேசினால், மூளை பாதிக்கப்படலாம். ட்யூமர் வருமா என்பதற்கு ஆதாரம் இல்லை. எதற்கும் எச்சரிக்கையாய் நாம்தான் குறைவாய் பேசவேண்டும். இப்படிப் பரிந்துரைத்திருந்தார்.

மேற்படி பத்தியை மீண்டும் வாசித்துவிட்டு யோசித்துப்பாருங்கள். எளியோரான நம் புத்திக்கு எட்டாத எந்த “புதிய ஆராய்ச்சி” விஷயத்தை இந்த ‘எச்சரிக்கை ரிப்போர்ட்’ அளித்துள்ளது? இதில் வாச்சாங்குளி மேட்டர், அந்தக் கலர் படம்தான். இன்ஃப்ராரெட் தெர்மோகிராஃப் கொண்டு செல்ஃபோன் பேசுகையில் முகத்தில்/மண்டையில் வெப்பநிலையைக் குறிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படத்தைக் கொண்டு மூளை ‘பாதிக்கப்படும்’ என்று சொன்னால் சரியான வாதமில்லை. பாதிப்பு என்றால் என்ன? பாதகமாகவா, சாதகமாகவா? பாதகம் என்றால் மூளை அல்லது அதன் எப்பகுதி என்னவாகும்? மின்காந்த அலைகளினாலா? இயக்கம் மாறுபடுமா? இதை ஓரிரு டிகிரி அதிகமாகும் வெப்பநிலையைக் கொண்டு எவ்வாறு கணித்தார்கள் (ஏழெட்டு டிகிரி அதிகரித்தால் ஆளே அம்பேல்)? வெப்பநிலையால்தான் என்றால், வெந்நீரில் தலைக்கு குளித்தாலும் மூளை பாதிக்குமா? இப்படியெல்லாம் கேட்கப்போனால், கேள்விகளே அச்செய்தியின் அளவை விட நீண்டுவிடுகிறது. தொகுத்துக் கேட்டு பிரசுரமாக்குவதற்குள் அடுத்த வாரம் வேறு ‘எச்சரிக்கை’ வெளிவந்துவிடுகிறது.

சரி, நிசமாகவே செல்போனை மூளைக்கருகில் அதிக நேரம் வைத்திருந்தால் கேடா என்றால், அவ்வகை முடிவுகள் கொண்ட ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை சென்றவருடம் (2011) வாசித்தேன். கூடவே “செல்போன்கள் மூளையின் இயக்கத்தை பாதிக்கவல்லவை” என்கிற வகைத் தலைப்பின் கீழ் ‘சந்தை அறிவியல்’ செய்தியும் வெளியாகியிருந்தது. பார்த்தவுடன் எரிச்சலூட்டும் தலைப்பு (மூளையை பாதிக்காத மனிதச் செயல்பாடு எது? கையை ஆட்டினாலும், காலை ஆட்டினாலும்-தான் மூளை ‘பாதிக்கப்படும்’). ஆராய்ச்சிக் கட்டுரை மூலத்தை வாசித்துப்பார்த்தேன். காதின்மேல் இருத்திக்கொண்டு செல்போனில் பேசினால், காதுப்பகுதியின் அருகாமையில் மூளையினுள் வெப்பநிலை உயருவதாய் நிறுவியிருந்தார்கள். அடடா, சரியாக இருக்கிறதே என்று மேலும் துழாவினால், பரிசோதனையில் செல்போனை ‘டாக்-மோடில்’ காதிற்கருகில் தொடர்ந்து ஐம்பது நிமிடம் பிடித்துக்கொண்டிருந்தால் இவ்வாறு மூளை சூடாகிறதாம். “கைவலிக்காதோ?” என்று ஒரு கேள்வி தோன்றினாலும், நான் கேட்க நினைத்தது: “ஒருவன் ஐம்பது நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால், அது மூளை இருப்பவன் செய்யும் செயல் என்று நிரூபிப்பதற்கே ஆதாரம் கேட்கவேண்டுமே; (கெட்ட வார்த்தையை நிரப்பிக்கொள்ளுங்கள்…), பின் அவனுக்கு இருப்பதாய் சந்தேகப்படும் அம்மூளை ஆராய்ச்சி நிரூபணத்தில் சூடானால் என்ன, சுக்கலாயிறமாய்ச் சிதறினால்தான் என்ன?”

ஆனாலும் இவ்வகை ‘சந்தை அறிவியல்’ செய்திகளைத் தொடர்ந்து உள்வாங்கும் நாம், செல்போன் பேசுவதினால் உண்மையில் நமக்கு எவ்வளவு, எப்படி ஆபத்து, எது பாதுகாப்பான செயல்பாடு என்றெல்லாம் அறிந்துகொள்ள மெனக்கெடுவதில்லை (நானும் இக்கட்டுரையில் எழுதப்போவதில்லை). செல்ஃபோனினால் மூளைக்கு ஆபத்து என்கிற ஒற்றைவரி பயம் மட்டும் நமக்குள் தங்கிவிடுகிறது. நாலுபேரை அலைபேசியில் அலறி அங்கலாய்த்துக்கொள்கிறோம்.

இது சந்தை அறிவியலையும் கடந்த மந்தை அறிவியல்.

*

ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்துடன் பயணம் செய்யும் நியூட்ரினோக்கள் உள்ளன என்று தடாலடியாக 2011இல் ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். ஓபெரா (OPERA) என்றழைக்கப்பட்ட இப்பரிசோதனையில், ஏற்பாட்டின்படி ஐரோப்பாவில் இரண்டு நகரங்களுக்கிடையே பூமிக்கடியில் பயணம் செய்த நியூட்ரினோக்களின் வேகங்களை அளப்பதற்கு பௌதிகப் பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள், பொறியியலாளர்கள் அடங்கிய குழு சில வருடங்களாய் முயன்று வந்தது. ஓபெரா குழுவின் ஒரு பிரிவு பரிசோதனை முடிவுகளை நவம்பர் 2011இல் வெளியிட்டது. சற்று அவசரமாக. வெளிவருகையிலேயே இம்முடிவுகள் அவசரமானவை என்று கருதி ஓபெரா பரிசோதனையில் உடன் வேலைசெய்த சில விஞ்ஞானிகள் குழுவாய் இம்முடிவுகளின் வெளியீட்டில் தங்கள் பங்கு வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டனர். தொடர்ந்து, நியூட்ரினோக்கள் அதியொளித் துகள்கள் (super luminary particles) என்பது நிரூபிக்கப்பட்டுள்ளபடியால், பிரபஞ்சத்தில் எப்பொருண்மையும் ஒளியைவிட வேகமாய் பயணம் செய்யாது என்கிற ஐன்ஸ்டைனின் சித்தாந்தம் மாறுதலுக்குட்படுத்தவேண்டியது அவசியமாகிறது என்று செய்தி வெளியானது.

தமிழில் கூட அறிவியல் அதன் செயல்பாடு, வாசகரின் புரிதலை மேம்படுத்த ஏதாவது அறிவியல் உப அங்கங்களின் விளக்கங்கள் என்று எந்த ஒரு உருப்படியான அறிவியல்கட்டுரையும் எழுதாதவர்களும், ஐன்ஸ்ட்டைன் தூக்கியடிக்கப்பட்டுவிட்டதாகவும்,“மாற்றம் என்பது மானுடத் தத்துவம்” என்று அன்றே பாரதிதாசன் சொல்லிவிட்டாராக்கும் என்றும் எழுதிச்சென்றார்கள். அறிவுத்துறைகளில் முக்கியமானதாய் ஏதாவது முன்னேற்றங்கள் உலகில் நிகழ்கையில் சட்டென தனக்கும் அது புரிந்து தெரிந்து செரித்துவிட்டதுபோல் ‘சர்வக்ஞராய்’ கருத்துசொல்வது சிலரின் இயல்பு.

என்னதான் பொதுமக்களிடம், முன்பு எப்போதுமில்லாத வகையில், உடனுக்குடன் பல அறிவியல் தளங்களில் நடக்கும் ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டு சேர்க்கிறது என்றாலும், இவ்வகை மிகைகளும் சார்ந்த மீள்-மிகைகளும் சந்தை அறிவியலின் முக்கியமான இடர். கைசொடுக்கும் நேரத்தில் ஒற்றை வரிச் செய்தி மிகைகளை வாசித்துத் ‘தெளிந்து’ தீர்க்கதரிசன மதிப்பீடுகளை கிடைக்குமிடத்தில் (இணையத்தில்) அரைபண்டித அறைகூவலாய் அழற்றுவதும் தவிர்க்க இயலாது.

அறிவியல் சிந்தையின்படி எந்தச்சித்தாந்தமும், கருதுகோளும், கட்டமைப்பும் எதிர் ஆதாரங்களுடன் மறுக்கப்படக்கூடியதே. ஐன்ஸ்ட்டினும் விலக்கல்ல. ஆனால் சித்தாந்தங்களின் திறனுக்கும் பொது அம்சத்திற்கும் ஏற்ப எதிர் ஆதாரங்களும் அவ்வளவு வலுவானதாக அமையவேண்டும். அப்போதுதான் மாற்றுச்சித்தாந்தம் பற்றி யோசிக்கத் தேவையேற்படும். இதைத் தினந்தோறும் அறிவியல் பழகிவரும் (நம்மாழ்வார் பொறுத்துக்கொண்டால்: ‘உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும், அறிவியலே’ என்று பழகிவரும்) விஞ்ஞானிகள் அறிந்திருப்பவர்களே. அவர்கள் ‘சந்தை அறிவியல்’ கூவி விற்பதை எல்லாம் உடனடியாக ஏற்றுக்கொண்டு ‘அப்படியே சாப்பிடமாட்டார்கள்’.

இந்த “ஒளியை விஞ்சும் நியூட்ரினோ” சோதனை முடிவுகளை 2011இல் வெளிவந்தவுடனேயே “இது சந்தேகக் கேஸ், மேலும் பரிசோதனைகளை சரிபார்த்தால் இம்முடிவுகளின் துல்லியத்தில் சந்தேகம் வரும், ஐன்ஸ்ட்டைனை அவ்வளவு எளிதில் அகற்றமுடியாது” என்று சில பௌதிக ஆய்வாளர்களின் கருத்துகளையும், வலைதளங்களில் எழுதிய விளக்கங்களையும் ஊடகங்கள் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து பரிசோதனைகளின் முடிவுகளைச் செப்பனிட்டதில், இயந்திரத்தில் ஒரு இடத்தில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் சரியாகச் சொருகப்படவில்லை. அதனால், நியூட்ரினோக்களின் பயணத்தில் 60 நேனொ செகண்ட் ரத்து செய்துகொள்ளவேண்டுமா அல்லது கூட்டிக்கொள்ளவேண்டுமா என்பது சரிவரத் தெரியவில்லை என்று அறிந்துகொண்டனர். முன்னர் ஒளியைவிஞ்சும் வேகம் என்று குறிப்பிட்டதே இப்படி ஒளியின் வேகத்தைவிட நேனோசெகண்ட் பொழுதுகளினால் ஏற்பட்ட வேக வித்தியாசத்தை வைத்தே என்பதால், அம்முடிவுகள் துல்லியத்தில் வழுவின.

இதனால், சில மாதங்கள் கழித்து, பிப்ரவரி 2012இல் அதே விஞ்ஞானிகள் குழு புதிய முடிவுகளைச் சரிபார்த்துவிட்டு, ஆமாம், முன்னர் வெளியிட்ட முடிவுகளில் சில தோராயச்சுழிப்புகள் (ரவுண்டிங் ஆஃப்) நேர்ந்துவிட்டது; அதனால் அறிவித்ததில் பிழை. பயணம் செய்த நியூட்ரினோக்களின் வேகம் ஒளியின் வேகத்தைவிட அதிகமா என்பது திட்டவட்டமில்லை. அடுத்த சுற்று பரிசோதனைகள் தேவை. இப்போதைக்கு ஐன்ஸ்ட்டைனின் சித்தாந்தத்திற்கு பங்கமில்லை. இப்படி அறிவித்தார்கள். ‘சந்தை அறிவியல்’ பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதற்குள் வேறு பரபரப்பான அறிவியல் விஷயங்களுக்குக் கடந்து சென்றுவிட்டது.

மேலே குறிப்பிட்ட தமிழ் எழுத்தின் அரைப்பண்டிதர்களும் சளைப்பதே இல்லை. நியூட்ரினொ புதிய முடிவுகளை கண்டுகொண்டார்களோ இல்லையோ, அதற்குள் வேறு விஷயத்திற்கு தாவி விட்டார்கள். உதாரணமாக, 2012-இற்கான பாண்டித்ய வெளிப்பாடாய் சமீபத்தில்கூட -– இருபது வருடமாய் பௌதிகம் சார்ந்து பயிற்சி, ஆய்வு மற்றும் ஆசிரியத்துவம் செய்துவருவோருக்கும் சட்டென்று புரிபடாத — “கண்றாவித் துகள்” பற்றி எளிதாக தங்கள் தீர்ப்புகளையும், தீர்க்கதரிசனங்களையும் இணையத்திலும், அரசியல் சஞ்சிகைகளிலும் எழுதிப்போகிறார்கள் (அறிவியலுக்கு என்று பிரத்யேகமாக சஞ்சிகைகள் வைத்துக்கொள்வது நம் பாரம்பர்யத்தில் தழைப்பதில்லை). மக்கள் காசுகொடுத்து வாங்கிப் படிக்கிறார்கள்.

மற்றொரு ‘சந்தை அறிவியல்’ உதாரணம், 2010இல் வெளிவந்த ஃபெலிஸா வுல்ஃப் சைமன் மற்றும் குழுவினரின் ‘ஆர்செனிக் பாக்டீரியா’ ஆராய்ச்சி முடிவுகள். இதைப் பற்றி “மாற்று உயிர்” என்கிற தலைப்பில் முன்னரே சொல்வனத்தில் சில கட்டுரைகள் எழுதியுள்ளோம். இவ்வாராய்ச்சி முடிவுகள் வெளிவருகையிலேயே எதிர்குரல்களும் துறை விஞ்ஞானிகளிடையே கிளம்பியது. தற்போது ஜூலை 2012இல் வெளிவந்துள்ள புதிய ஆராய்ச்சி முடிவுகள் ஆர்செனிக் பாக்டிரியா அவ்வகையில் ஆர்செனிக்கை மரபணு வரை கொண்டு சென்று ‘உணவாகக்’ கொள்ளும் வகையில் செயலாகவில்லை என்று கண்டுள்ளது. ஃபெலிஸா குழுவினரின் மாற்று உயிர், ஆர்செனிக் பாக்டிரியா பற்றி 2010இல் தடபுடலாய் செய்திகள், பேட்டிகள், படங்கள் என்று வெளியிட்ட ஊடகங்கள், மறுப்பாய் இரண்டு ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்தும், (ஓரிரு செய்திக்குறுங்கட்டுரைகள் தவிர்த்து) அதிகம் அவற்றை பிரபலப்படுத்தவில்லை. மாற்று உயிர் பற்றிய ஆராய்ச்சி இனியும் தொடரும். ஆனால் சார்ந்த “ஆர்செனிக் பாக்டீரியா” ஆராய்ச்சியோ துரதிருஷ்டவசமாக, சந்தை அறிவியலில் சிக்கிக்கொண்டது. இதற்கு ஒரு பெருங்காரணம் நாஸா-தான்.

ஆர்செனிக் பாக்டீரியா ஆராய்ச்சி விஷயத்தில் நாஸாவிடம் ஆராய்ச்சி மான்யம் பெறும் சில விஞ்ஞானிகள் உட்பட பலர் நாஸாவை சாடியதற்கு காரணம், நாஸாவும் தெரிந்தே ஊடகமிகையை உபயோகித்ததனால். திட்டவட்டமாக நிரூபிக்காத ‘முதல் சுற்று’ முடிவுகளையே ஊதிப்பெரிதாக்கி பரபரப்பான அறிவியல் செய்தியாய் ‘ப்ரஸ் மீட்’ வைத்து வெளியிட்டது. துறையில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளிடையே அறிவியல் விவாதங்களாக தொடரவேண்டியது, முதல்கட்டத்திலேயே துரதிருஷ்டவசமாக இவ்வாறான அதிக விளம்பரத்தினால் தரம்குறைந்த சர்ச்சையாக உருமாறியது. இது புரிகிறதோ தெரிகிறதோ எதற்கும் நம் கருத்தையும் சொல்லிவைப்போம், ஆக்கத்தை எதிர்க்கமுடியவில்லையெனில் ஆளை அடிப்போம், அது என் ஜனநாயக உரிமை என்கிற இணைய கலாச்சாரத்தின் இன்றைய பரிணாமம். எதிர்பார்க்கக்கூடியதே.

சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளும், முக்கியமாக ஃபெலிஸா வுல்ஃப் சைமன், விளம்பரப்பிரியர்கள், விஞ்ஞானத்தை முறைப்படி அணுகாதவர்கள் என்று விமர்சிக்கப்பட்டார்கள். ஆராய்ச்சி முடிவுகளின் மீது சக விஞ்ஞானிகளின் சந்தேகங்களின் தாக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் ஃபெலிஸாவின் தரப்பின் நம்பகத்தன்மை குறைந்துபோய், மேலும் பரபரப்பாய் “நீ பெரியவனா நான் பெரியவனா” என்கிற ரீதியில் சண்டை சிண்டுகள் முடியப்பட்டு, சில மாதங்களில் தூக்கிவைத்த நாஸாவே, ஃபெலிஸாவை கைக்கழுவிவிட்டது. முத்தாய்ப்பாய் செய்துவந்த ஆராய்ச்சி வேலை பறிபோன பரிதாபம் சந்தை அறிவியலின் லீலை.

இந்த விவகாரம் பற்றி விரிவாக ஆர்செனிக் பாக்டீரியா தற்காலிக அடக்கம் என்கிற கட்டுரையில் வாசிக்கலாம்.

அறிவியலின் ராணி என்றழைக்கப்படும், முடிந்தவரை தருக்கங்களாய், தியரம்-ப்ருஃப் என்று ஆராய்ச்சிகளை வெளிப்படுத்தும் கணிதத்தையும் ‘சந்தை அறிவியல்’ விட்டுவைக்கவில்லை. உதாரணமாய், கணிதத்துறையில் ஒரு அங்கமாய் பாய்மங்களின் (fluids) செயல்பாடுகளை விளக்கும் நேவியர்-ஸ்டோக்ஸ் (நேவியர்-இசுடோக்சு என்றும் எழுதலாம்) நுண்கணிதச் சமன்பாட்டிற்கு பொதுத்தீர்வு காண்பதென்பது “மில்லென்னியம் ப்ராப்ளம்” பட்டியலில் ஏழில் ஒன்று. பொதுத்தீர்வு காண்பவருக்கு கிளே கணிதவியல் நிறுவனம் மில்லியன் டாலர்கள் பரிசு வழங்கும். 2006இல் இவ்வகைத் தீர்வைக் கண்டுபிடித்துவிட்டதாய் அமேரிக்காவின் லீஹை பல்கலைகழகத்திலிருந்து பென்னி ஸ்மித் என்கிற பெண் பேராசிரியர்/கணிதவியலாளர் தன் ஆராய்ச்சிக் கட்டுரையின் முன்வடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் பகிர்ந்துகொள்ளும் இணைய-ஆவணப்பெட்டகத்தில் வெளியிட்டார். வந்தது வினை.

இணைய-விளம்பரம் சில மணிநேரங்களில் வெடித்து பூதாகாரமாகி, இன்னமும் சக ஆராய்ச்சியாளர்கள் சரி தவறு என்று பரிந்துரைக்காத அந்த ஆராய்ச்சிமுடிவுகளைப் பற்றி அவரிடம் பேட்டி கண்டு, அவரும் அசட்டுத்தனமாய் சற்றே மிகையாய் பேட்டிகொடுத்தார். ஒரு சில வாரங்களில் அந்தத் தீர்வில் தவறு இருப்பது (ஆவணப்பெட்டகத்தில் வாசித்த சக கணிதவியலாலர்களால்) கண்டறியப்பட்டு, அவர் அக்கட்டுரையை வாபஸ் பெற்றுக்கொண்டார். இது ஆராய்ச்சியாளர்களிடையே சகஜம். தவறுகள் இருக்கலாமோ என்றுதான் முன்வடிவை பொதுப்பெட்டகத்திலும் வைத்திருந்தார் (யாராவது தவறுகளைச் சுட்டுவார்கள் என). ஆனால், எதிர்பாராமல் இலவசமாய் கிடைத்த கூடுதல் இணைய-விளம்பரத்தினால் மனங்குறுகிப்போனார். இணையத்தில் உலவும்/மேலோட்டமாய் வாசிக்கும் பலர் அனுதாபக் கடிதங்கள் எழுதியே அவரை வெறுப்பேற்றிவிட்டனர்.

சமீபத்தில் (2011) கூட கணினித்துறை-கணிதம் சார்ந்த “P=NP? ருசு” எனப்படும் (இது மற்றொரு ‘மில்லென்னியம் ப்ராப்ளம்’) அடிப்படைக் கேள்விக்கு விடை கண்டுவிட்டதாய் இந்திய வம்சாவளி அமெரிக்கர் வினய் தியோலலிக்கர் தீர்வு ஒன்றை வெளியிட்டார். சில நூறு பக்கங்களைக்கொண்ட இத்தீர்வு பெரும் பரபரப்பை இணையத்தில் ஆராய்ச்சியாளர்களிடையே, அவர்களது வலைப்பூக்களையும் செய்திகளையும் வாசித்துவரும் பொதுவாசகர்களிடையே ஏற்படுத்தியது.

இதற்குக் கிடைத்த ஊடகமிகை விளம்பரத்தைக்கண்டு கணினி-கணிதத்துறை பேராசிரியர் ஸ்காட் ஏரான்ஸன், “இத்தீர்வு நிச்சயம் தவறானது; சரியானது என்று நிரூபணமானால், மில்லியன் டாலர் பரிசுடன் என் சொத்து முழுவதையும் அந்நாருக்குக் கொடுக்கிறேன்” என்று பகிரங்கமாய் தன் வலைப்பூவில் எழுதிவைத்தார். எதிர்பார்த்ததைப்போலவே, இவ்வகை ‘மிகை எதிர்வினை’யினால் மூலச்செய்திக்கு அதிகவிளம்பரமே கிடைத்தது.

சில மாதங்களில் ஆர். ஜே. லிப்ட்டன் போன்ற ஓரிரு கணினி-கணிதவியலாளர்கள் மேற்படித் தீர்வில் முன்பிழைகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, மொத்தக் கட்டுரையையும் பிழைத்திருத்தம் செய்வது வீண் என்று விலகிவிட்டனர். வெளியிட்டவரோ கட்டுரையை பொதுத்தளத்தில் இருந்து வாபஸ் பெறுவதாய் இல்லை. இழுபறி. சொத்தை அடமானம் வைத்தவர், வேறு யார் சரி தவறு என்று நிரூபித்தாலும் அவர்களுக்கும் இதே பரிசு என்று மறுஒலிபரப்பு செய்துவிட்டு, சாத்தியப்படும் வேறு ஆராய்ச்சி ஜோலிகளை கவனிக்கப்போய்விட்டார். இணையமிகையும் வேறு ஆளைப் ‘போட்டுதள்ள’ போய்விட்டது.

அறிவியல் துறைகளில் இப்படி அடிக்கடி ‘சந்தை அறிவியலில்’ மாட்டிக்கொண்டு விழிபிதுங்குவது சைக்காலஜி, சார்ந்த பிஹேவியரல்-சைக்காலஜி போன்றவைகளே. அதுவும் ‘டயட்-கட்டுரைகள்’ அறிவியல் எழுத்தின் டாப்-டென் மோசடிகளின் உறைவிடம். சாம்பிளுக்கு: காபி குடித்தால் உடலுக்கு நன்மை, உடலுக்கு தீமை, இதயம் பலவீனப்படும், இதயம் வலுப்பெறும், இப்படி எதிர்நிலையான முடிவுகளுடன் வருடாவருடம் புருடாக்கள். மெக்டொனால்ட்ஸில் டபுள் லேயர் சீஸ்-பர்கரையும், கூடவே கவனமாய் ‘டயட்-கோக்’கையும் மனத்தில் எவ்வித முரணுமின்றி ஆர்டர் செய்யும் ‘பகுத்தறிவான’ அமேரிக்கர்களுக்கென்றே எழுதப்படுபவை இவை. சமீபத்தில்தான் இவற்றை நாம் ஆங்கில நாளிதழ்களின் உப அவஸ்தைகளாய் இறக்குமதி செய்யத்துவங்கியுள்ளோம்.

முத்தாய்ப்பாய் சென்ற வருடம் படைப்பூக்கம் எப்படித் தோன்றுகிறது என்பதை சைக்காலஜி, நியூரோசயின்ஸ், சமூக அறிவியல் என்று பல துறைகளின் ஆராய்ச்சி முடிவுகளைக் கலந்தாலோசித்து ஐயம்திரிபற நிறுவுவதாக வெளிவந்த ‘இமாஜின்’ என்கிற ஜோனா லெஹரரின் புத்தகம். பெஸ்ட்-ஸெல்லர் தகுதி பெற்ற இப்புத்தகத்தின் உள்ளடக்கத்தின் ஓட்டைகளைச் சாடி பல விஞ்ஞானிகள் நியூயார்க் டைம்ஸ், கார்ட்டியன் என்று நாளிதழ்களில் எழுதிவிட்டனர். சமூக அறிவியல் என்றால் ஏதோ பௌதிகம் போன்ற கறார் கணிதமாதிரிகள் இல்லாதிருக்கலாம். ஆனால் செயல்-விளைவு போன்ற தொடர்புகளும் இல்லாமலா ஆராய்ச்சிகள் நடைபெறும் என்கிற விமர்சனத்திலிருந்து, புத்தகத்தில் வந்துள்ள பாப் டிலன் எப்படிப் பாட்டெழுதுகிறார் என்கிற ‘படைப்பூக்க இயக்கத்தின்’ கருத்துகளெல்லாம் லெஹரரின் படைப்பூக்கத்தின் சான்று என்பதுவரை. புத்தகம் தொடர்ந்து அமோகமாக விற்பனையாகிறதாம்.

தமிழிலும் மார்கெட் இருப்பதாய் நாம் சரியான தருணத்தில் கிளப்பிவிட்டால், வரும் 2013 புத்தகக் காட்சியில் ‘துரித-பிரசுரமாய்’ மொழியாக்கப் புத்தகம் வெளிவரலாம். ரிஸ்க் எடுத்து தமிழில் அறிவியல் புத்தகங்கள் பிரசுரிக்கும் பதிப்பாளர்களும் காசுபார்க்கவேண்டுமல்லவா.

*

அனைத்து அறிவியல் ஆராய்ச்சி முடிவுகளும் முதலில் சக ஆராய்ச்சியாளர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் அத்துறை சார்ந்த சஞ்சிகைகளில் (மட்டும்) வெளிவரும். இன்றும் அப்படித்தான். அதிர்ச்சியான கிளர்ச்சியான புதிய முடிவுகள் வெளிவருகையில், ஆராய்ச்சி சஞ்சிகைகளை வாசிக்கும் விவாதிக்கும் அறிவியலாளர்களிடையே மட்டுமே சர்ச்சை கிளம்பும். “சங்கறுப்ப தெங்கள் குலம் சங்கரனார்க் கேது குலம்” என்று நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் கேட்பார்கள். அவர்களே மேலும் ஆராய்ச்சிகளின் மூலம், புதிய முடிவுகளை பரிசீலித்து, மீண்டும் அவ்வகை ஆராய்ச்சி சஞ்சிகைகளிலேயே தங்கள் முடிவுகளை கட்டுரைகளாய் வெளியிட்டு, சந்தேகங்களை ஓரளவு தீர்த்துகொள்வார்கள். புதிய அறிதல்களில் ஓரளவு சமநிலை கிட்டிய பிறகே, தற்காலிக சமாதானக் கொடி பறக்கவிடப்பட்டு, புதிய அறிவியல் கூற்றுகளாக அம்முடிவுகள் பிரச்சார அல்லது பரப்பறிவியல் புத்தகங்கள் மற்றும் செய்திகளில் வெளிவரும்.

இது இணையம் வளரும் வரையில் இருந்த நிலை. கடந்த இருபது ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது. அமைப்பிற்கு எதிராய் அல்லது அதைக் கேள்விகேட்கும் வகையில் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவருகையில் தடபுடலாக ஊடகங்கள் (தாங்கள் போனால் போகட்டும் என்று வைத்திருக்கும் அறிவியல் பக்கங்களில்) பிரசுரிப்பார்கள். ஆனால், இம்முடிவுகள் மறுதலிக்கப்படுகையில் அதே அளவு பிரஸ்தாபங்கள் இருக்காது. அதற்குள் விஷயம் அலுத்துவிடும். இல்லை வேறு பரபரப்பு விஷயத்திற்கு ஊடகங்கள் தாவியிருக்கும். அறிவியலையும் தகவலாய் அணுகிச், செய்திகளாய் ஆக்கி, பரபரப்பு பிரச்சாரம், பண்டம், விற்பனை, வியாபாரம், என்று ஊடகங்கள் களமிறக்குவதால் ஏற்படும் வினை இது. அதனாலேயே, அறிவியலை ஆராய்ச்சி நடக்கையிலேயே, தற்கால ஊடகங்கள் “சுருக்கமாக, சுவையாக” பொதுமக்களுக்கு எடுத்துச்செல்ல முனைகையில் இவ்வகைச் சிக்கல்கள் ஏற்படுகிறது.

ஆராய்ச்சிகள் இப்படித்தான் நடக்கும் என்பதை உணர்ந்துகொள்ளும் பக்குவத்துடன் இந்த “சந்தை அறிவியல்” செய்திகளை அணுகினால் சுவாரசியமாக இருக்கும். இல்லையேல் அறிவியல் சிந்தையின் பேரிலேயே சந்தேகமும், உவர்ப்பும் ஏற்படும். முன்னதை விட பின்னதுதான் அதிகம் நடக்கும் என்பதை மனித இயல்பிலிருந்து அறியலாம்.

சந்தை அறிவியலில் பகிரப்படும் ஒரு விஷயத்தின் உண்மை நிலை என்ன என்பதை எப்படி அறிவது? நேரடியாக ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்துப்பார்த்து தெளிவதுதான் சிறந்த வழி. இல்லையேல் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகள், அத்துறை வல்லுநர்கள் என்று யாரேனும் அவற்றை வாசித்து அறிவியல் எது அவியல் எது என்று விளக்குவது மட்டுமே வழி. பல நேரங்களில் அவர்கள் தங்கள் துறைத் தேர்ச்சிக்கேற்ப, துறைப்பரிச்சயம் உள்ளவர்களுக்கு மட்டுமே அதிகம் புரியுமாறு விளக்குவார்கள்.

இதனால் ஆய்வாளர்களுக்கும் அத்துறையில் தேர்ச்சியற்ற சக மனிதர்களுக்கும் ஏற்படும் இடைவெளியில் (அதாவது, கிடைச்ச கேப்பில்), அறிவியல் இயங்கும் விதம் பற்றி சுத்தமான அக்மார்க் அறியாமையுடன் அரைப்பண்டிதர்கள் “சந்தை அறிவியல்” செய்திகளின் நுனிப்புல்மேய்ச்சல்களை சாதகமாக உபயோகித்து, “பாத்தியா, நாந்தான் சொல்றேனே, இந்த அறிவியலே எப்போதும் இப்படித்தான்; இப்படிம்பாங்க, அப்படிம்பாங்க; மொத்ததில் இவங்களுக்கே ஒண்ணும் புரியலே” என்கிற வகையில் எழுதுவார்கள். கொசுறாக எந்த நிரூபணத்திற்கும் உட்படுத்தவேண்டிய கட்டுப்பாடும் தேவையும் இல்லாத தங்கள் கருத்துக்களையும் ஏதோ ஆய்ந்தறிந்த ஆழ்ந்த உண்மைகள் போல இணைத்துவிடுவார்கள்.

உதாரணம் வேண்டுமென்றால்: “என்ன பெரிய மெடிக்கல் அட்வான்ஸ், மருந்து மாத்திரை எல்லாம் வேண்டிகெடக்கு; அறிவியல் மருந்துகளை கண்டுபிடிக்க கண்டுபிடிக்க, அம்மருந்திற்கு அப்பாற்பட்ட புதிய வியாதிகள் தோன்றிக்கொண்டே இருக்கும். ஐம்பது வருடம் முன்னால் யாராவது கான்சர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமா, இருபது வருடம் முன்னால் யாராவது எய்ட்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமா. எல்லாம் கடவுள் ஏற்பாடு” என்றெல்லாம் எழுதுகிறார்கள்.

ஆனால், கான்சர் எனும் நோய் மூவாயிரம் வருடம்முன்னர் பிரமிட் கட்டிய எகிப்தியர் காலத்திலிருந்தே இருந்துள்ளது என்பதை சமீபத்தில் அ-படைப்பிலக்கியத்திற்கு புலிட்ஸர் பரிசு வென்ற எம்பெரர் ஆஃப் மலடிஸ் (Emperor of Maladies) ‘பாப்புலர் சயின்ஸ்’ வகை புத்தகத்தில் சக இந்தியப் பெயருடைய (அமெரிக்க டாக்டர்) சித்தார்த் முக்கர்ஜி ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறார். இதை மேற்படிப் பண்டிதரிடம் குறிப்பிட்டால் “ஆமாம், எல்லாத்துக்கும் ஒரு ஆதாரம் கேளு; நிரூபணவாதமே மனத்தை உழப்பும் வீண்வாதம்… நம் முன்னோர்களுக்கு கான்சர் இருந்ததாக உனக்குத் தெரியுமா; இருந்திருந்தால், அன்றே சரகர் போன்ற மகாவைத்தியர்கள் ஆயுர்வேதத்திலேயே மருந்து கண்டு…” இப்படி அடுத்த தேசியவாத அரணிற்குள் நழுவிவிடுவார். போகிறபோக்கில் எதிர்வினையாற்றும் நம்மையும் சரகர் மற்றும் ஆயுர்வேதத்திற்கு எதிரிபோல் திரித்துவிடுவர். பேசித் தீராது இவ்வகை நோய்கள்.

முக்கியமாக, அறிவியலில் பொய்யாக்கமுடிந்த (falsifiable) கூற்றுகளை முன்வைக்கிறார்களே (அதனால்தானே அவ்வப்போது அடிவாங்குகிறர்கள்); இதேபோல், தங்கள் ‘பண்டிதக் கருத்துக்களும்’ பொய்யாக்கமுடிந்த கூறுகளினால் ஆனவையா, இல்லை “இவை நான் சொல்வதால் உண்மை” என்கிற வகை கருத்துக்களா என்பதை வகுக்கமாட்டார்கள். யோசித்தாலும், வெளியே சொல்லாமல் உணர்ச்சிப்பிழம்பாய், ரிட்டோரிக்கலாய், எழுதிக்குவிப்பார்கள்.

எந்த அறிவியல் கருத்தும் பொய்யாக்கத்திற்கு (falsification) உட்பட்டது. இது அறிவியல் சிந்தையின் முக்கியமான அங்கம். தனிச்சிறப்பும். ஊடகமும் அதன் மிகையும் தோன்றாக் காலந்தொட்டே, அறிவியல் இப்படித்தான் இயங்குகிறது. இயங்கவேண்டும். இப்படி பொய்யாக்கமுடியாத கருதுகோள்கள், அறிவியல் பிடிமானம் இருந்தாலும், சரி தவறு என்று நிரூபிக்கமுடியாததால் (சோதித்துப்பார்க்க அவ்வகை கூறுகளே இல்லாததினால்), சித்தாந்தமாய் சிலகாலம் சிலிர்த்துவிட்டுச் சிதிலமடைந்துவிடும்.

இயற்கையைத் தெளிந்துணர அறிவியல் ஒரு அறிதல்முறை மட்டுமே, அது ஒரு கட்டமைப்பு மட்டுமே என்பதுபோல் ஒரு கற்பிதம். மற்ற அறிதல் முறைகளிலிருந்து முக்கியமான வேறுபாடு, அறிவியல் பொய்யாக்கத்திற்கு உட்பட்டது. மாற்றுச் சித்தாந்தத்திற்கும், முடிவுகளுக்கும் ஏற்ப தன் அறிதல்களை புதுப்பித்துப் பகுத்துகொள்ளும், தொகுத்துகொள்ளும். நிரூபணமற்ற தருக்கங்களினாலான ‘அறிதல்களை’ கட்டிக்காத்துக்கொண்டு, நிரந்தரமாக அதிகார அல்லது மேட்டிமை வீம்பு பிடிக்காது. நிலையானதை தெளிந்தறிய நிலையற்ற நித்யத்தில் நெடுங்காலம் நிற்கத் தயங்காது.

சந்தை அறிவியல் அனைத்தும் சிந்தை அறிவியல் ஆகா.

*****

[பின்குறிப்பு: இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சாதக பாதக அறிவியல் செய்திகளுக்கு ஆதாரமான தரவுகள்/சுட்டிகள் என்று நான் உபயோகித்தவற்றை, வழக்கமாய் செய்வதுபோல, இம்முறை கொடுக்கவில்லை. பட்டியல் நீளம் என்பது ஒரு காரணம். வாசகர்கள் இக்கட்டுரை உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையை சந்தேகித்தால் (நிச்சயம் செய்யுங்கள்), இணையத்திலேயே அனைத்து தரவுகளையும் பெற்றுக்கொள்ளலாம். எனக்கும் எழுதலாம். சந்தை அறிவியலில் இருந்து விடுபட இவ்வகை சந்தேக சிறு மெனக்கெடல்கள் நம் அனைவருக்கும் அவசியம்தானே.]

[சொல்வனம் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையின் ஒரு வடிவம்]

ஆர்செனிக் பாக்டீரியா தற்காலிக அடக்கம்

Standard

நமக்கு விஷமாகிய ஆர்செனிக் மூலக்கூறுகளை ‘உண்டு’ வாழும் பாக்டீரியாக்கள் நம் உலகில் உள்ளது என்று 2010இல் ஒரு அறிவியல் செய்தி வெளியாகியது. அமெரிக்காவின் நாஸா ஆராய்ச்சி மையத்திடம் மான்யம் பெற்ற ஃபெலிஸா உல்ஃப்-ஸைமன் மற்றும் விஞ்ஞானிகள் குழு கலிஃபோர்னியா மாநிலத்தின் மோனோ ஏரியின் சேற்றில் வாழும் GFAJ-1 என்று குறிப்பிடப்படும் நுண்ணுயிரை பரிசோதித்து அவைகளால் ஆர்செனிக்கை உண்டு வாழமுடியும் என்று ஊகித்தார்கள். அதனால், மரபணுவில் பாஸ்பரஸ் மூலப்பொருளுக்கு பதிலாக உபயோகித்துகொள்ளும் அளவிற்கு, நமக்கு விஷமாகிய, ஆர்செனிக்கை உட்கொள்ளும் நுண்ணுயிர்கள் உலகில் உள்ளது என்று 2010இல் “சயின்ஸ்” ஆராய்ச்சி சஞ்சிகையில் அறிவித்தார்கள். விஷ(ய)ம் கேள்விப்பட்டு அங்காடித்தெருவில் ஆர்செனிக்கை pet food பகுதிக்கு மாற்றினார்கள்.

ஆனால், ஃபெலிஸா வுல்ஃப்-சைமனால் ஆர்செனிக் சூழலில் தழைத்ததாக கருதப்பட்ட அதே பாக்டீரியாவினால் அடுத்த இரண்டு ஆராய்ச்சிக் குழுக்களின் மறு-பரிசோதனைகளில் (ஜூலை 2012 இம்முடிவுகள் வெளியாகின), அதே ஆர்செனிக் அதிகமான சூழலில், தழைக்கமுடியவில்லை. எவரது பரிசோதனைகள் தவறானவை? இன்றைக்கான சரியான புரிதல் எது? கட்டுரையில் விவரிப்போம்.

[எச்சரிக்கை: கட்டுரையில் படங்களோ, ஜோக்குகளோ, கிடையாது. சிட்டிகை ஆங்கில வாடை கலந்த நீண்ட விவரணை மட்டுமே.]
Continue reading

சற்றே ‘சுவையான’ அறிவியல் கட்டுரை

Standard

பிஸ்கெட் விள்ளலை காப்பியில் ஊறவைத்து சுவைப்பது என் போன்ற ’நோ-பல்’ இளைஞர்களின் கொணஷ்டை (கரும்பை கூட ஜூஸ் செய்தே அருந்துவோம்). அனுபவித்து செய்பவர்களுக்கே இதிலுள்ள சகாயங்களும் சங்கடங்களும் தெரியும். சற்றே மொறுமொறுப்புடன், சூடாய், இதமாய், நாக்கில் பிஸ்கெட் கரைவது சகாயம். சௌக்கியம். குறிப்பிட்ட அவகாசத்திற்குமேல் முக்கியிருந்தால், சங்கடம். சொதசொதத்த பிஸ்கெட், வாயிலிட முனைகையில் ஸ்லோமோஷனில் மடிந்து ‘ஸ்பளச்’ என்று காப்பியினுள் விழுந்துத்தொலைக்கும். ‘முக்கிய’ஸ்தர்கள் கூடியிருக்கும் டிஸ்கஷனில், அல்லது ‘பெண் பார்க்கும்’ வைபவத்தில்.
Continue reading

பூனை குறுக்கே நடந்தால், மேக்னெட்டோரிஸப்ஷன்

Standard

பூனை குறுக்கே நடந்தால் அபசகுனம். வடக்கே தலை வைத்து படுத்தால் உடல் நலத்திற்கு கேடு. இவ்விரண்டு சமூக நம்பிக்கைகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். எனக்களிக்கப்பட்ட இவற்றின் அன்றாட ‘விளக்கங்களும்’, சார்ந்த என் அறிவியல் தேடல்களையும், புரிதல்களையும் அனுபவக்கல்வி தடவி இக்கட்டுரையில் விவரிப்போம். முக்கியமாக மிருகங்களின், மனிதனின் மேக்னெட்டோரிஸப்ஷன், காந்தவிசையேற்புத்திறன் பற்றி அறிமுகம் செய்துகொள்வோம். கடைசிபக்கத்தை முதலில் வாசித்தபின்னரே மர்மக்கதை மிச்சத்தை வாசிப்பவர்களுக்கு: மேலிரண்டு நம்பிக்கைகளை மேக்னெட்டோரிஸப்ஷன் கொண்டு நிரூபிக்கமுடியவில்லை என்பதே இக்கட்டுரையின் கடைசிபக்கம்.

Continue reading

ஹப்பர்ட் சிகர உச்சியிலிருந்து…

Standard

அன்னை பூமியின் எண்ணை வளம் தீரப்போகிறது. இதை பீக்-ஆயில் க்ரைசிஸ், “எண்ணை உச்சவரம்பின் ஆபத்து” என்கிறார்கள். தொழிற்புரட்சியின் தாலாட்டில் மயங்கி அரைஞாணை அகற்றி டிஜிட்டல் வாட்ச் கட்டிக்கொண்ட மனித சமுதாயம் உபயோகிக்கும் அநேக பொருட்களும் அடிபடப்போகிறது. பெட்ரோல், டீசல், இவற்றை எரிபொருளாய் உபயோகிக்கும் கார், பஸ், விமானம், கப்பல் போன்ற வாகனங்களிலிருந்து, அங்காடித்தெருவில் மின்வெட்டிலும் கடைகள் ஒளிர வெளியே, சூழலில் கரும்புகை கக்கும் டீசல் ஜென்-ஸெட், எண்ணை மற்றும் இயற்கை வாயுவை எரிபொருளாக்கி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்கள், கச்சா எண்ணையின் உதிரி ரசாயன உபயோகங்களான பிளாஸ்டிக் பொருட்களில் தொடங்கி, வீடு கட்டும், ரோடு போடும் ஆஸ்ஃபால்ட், தார், மெழுகு என்ற பட்டியல் இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிட ஏதும் நெயில் பாலிஷ் மற்றும் வாய்மை வரை நீள்கிறது. வாய்மை என்றால் லிப்ஸ்டிக் என்பதும் ஒரு அறிதல்.

எப்படி அறிகிறோம் என்பது கட்டுரையின் முதல் பகுதியில். நுண்கணிதம் (கால்குலஸ்) தவிர்த்து ஆனால் அறிவியலின் தீவிரத்தை குறைக்காத (ஆறாவதில் கற்ற) அல்ஜீப்ரா கணித மாதிரியைக் கொண்டு விளக்கிக் கொள்வோம். அடுத்து இதனால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள, ஏற்படப் போகும் இடர்களை ஓரளவு அலசுவோம். முற்பகுதி அறிவியல், பிற்பகுதி அவ்வறிவியலை மறைக்கும் அரசியல் செயல்பாடுகள்.

அப்ப வருங்காலம்? சுருக்கமாக, நோ பெட்ரோல். ஆனால் மாட்டுவண்டி திரும்பாது. அனிமல் ரைட்ஸ் பேச அநேகர் இருக்கின்றனர். கைவண்டியோ, குதிரைவண்டியோ மிஞ்சலாம். மேற்படி அனிமல் ரைட்ஸ் பேசும் முதல் உலக மாந்தர்கள் இவ்விரண்டையும் தொடர்ந்து ஆதரிப்பதால். நம்மவருக்கு கட்டுரையின் கடைசி வரியில் வழி சொல்லியிருக்கிறேன்.
Continue reading

டூகேன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது?

Standard

மூக்கை வைத்து ஒருவர் என்ன செய்யலாம்? வாழ்கையில் சுவாசிக்கலாம். மெகாசீரியல் மாந்தராக இருந்தால், ஆண் பெண் வித்தியாசமின்றி, அழுது சிந்தலாம். எகிப்தின் கிளியோபாட்ராவாக இருந்தால், ரோமை ஆளலாம். அதே எகிப்தின் ஸ்பிங்ஸ்சாக இருந்தால், மூக்குடைந்த தன் சிங்க உடல் மனித முக உருவத்தை உலகின் அதிசயங்களில் ஒன்றாக தேர்வு செய்து உவகிக்கலாம். புலௌ புலௌ பொம்பா தீவில் வசிக்கும் பிரோபோசிஸ் குரங்காக இருந்தால், தன் மூக்கின் வடிவம் டின்டின் (tintin) காமிக்ஸ் வில்லன் ராஸ்டபாப்புலசுடன் ஒப்பிடப்படும் அவலத்தை அடைய நேரிடலாம். வானியல் அறிஞர் டைகோ பிராஹேவாக இருந்தால், பேச்சுவார்த்தை முற்றுகையில் மூக்கை கழட்டி பாலிஷ்செய்து எதிரியின் கவனத்தை கலைக்கலாம். அவருக்கு இளவயதில் கத்திச்சண்டையில் மூக்கு அறுபட்டு, பிறகு பொய் மூக்கு பொருத்தப்பட்டதாம். நம்ம தேவனின் துப்பறியும் சாம்புவாக இருந்தால், மூக்கை நீவிவிட்டுக்கொள்ளலாம். ஏதாவது துப்பு உதிக்கும். அநேகமாக தவறாக இருக்கும்.

மூக்கு வாய் இரண்டும் ஒருங்கே தன் பெரிய அலகில் கொண்டுள்ள டூகேன் பறவையாக இருந்தால்?

கட்டுரையே அதைப்பற்றித்தானே. டூகேன் பறவை பெரிய அலகை உபயோகித்தே தன் உடல் சூட்டை தணித்துக்கொள்கிறது. விவரிப்போம்.
Continue reading

வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில்

Standard

உத்திரத்தில் ஆடும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் பாட்டியின் அந்தக்கால நவரத்தின பெண்டண்ட்டில் மற்ற கற்களைக்காட்டிலும் வைடூர்யம் மட்டும் டாலடித்து ஜுவலிக்கிறதேன்? தோகை இளமயில் ஆடி வருகையில் வானில் மழைவராவிட்டாலும், தோகை நிறங்கள் அசாதாரணமாய் ஒளிருவதேன்? சாலையிலுள்ள மழைநீர்தேங்கிய குட்டைகளில் பெட்ரோல் டீஸல் ஒழுகிப் படர்ந்து, தாண்டிச்செல்கையில் நாம் பார்க்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களில் தெரிவதேன்? கணினி மென்தகட்டை வெளிச்சத்தில் அப்டி இப்டி திருப்பினால் பல நிறங்களாய் தெரிவதேன்? அநேக வண்ணத்துபூச்சியின் இறகுகள் பளபளப்பதேன்?

பதில், இரிடெஸன்ஸ். அப்படியெனில் என்ன, அதற்கும் நேனொடெக்னாலஜிக்கும் என்ன சம்பந்தம். விவரிப்போம்.
Continue reading

ஏன் பல்லி கொன்றீரய்யா

Standard

மெத்தைமடி அத்தையடி என அதன்மீது காலின் மேல் காலை மடக்கிப்போட்டு மல்லாக்க விஸ்ராந்தி தீவிரமான “வீக்கெண்டில் ஒரு உலக இலக்கியம் சமைப்போமா” யோஜனையிலிருக்கையில், விட்டத்தில் செல்லும் பல்லியை கவனித்திருக்கிறீர்களா? அதுவும் நம்மை கவனித்தபடியே “ம்க்கும், இவனாவது இலக்கியமாவது” என்றபடி தலைகீழாய் விட்டத்தில் நகரும். நாம் கவனிப்பதை அறிந்து, உற்றுப்பார்த்து ஊர்ஜிதம் செய்து, சட்டென்று டியூப்லைட் சட்டம், மின்சார ஒயரிங் குழாய் என மறைவிடத்திற்கு பின் பதுங்கும். வேறெங்காவது பார்த்துவிட்டு மீண்டும் கடைக்கண்ணால் கவனித்தால், உண்டிவில்லிருந்து தயிர்பானைக்கு புறப்பட்ட கல்லாய், சடாரென்று ஜன்னல் கதவு, திரைச்சீலை பின்புறம், என அடுத்த மறைவிடத்திற்கு பயணிக்கும். தூரத்தில் நிகழும் (பல்லிக்கு நம்மைவிட உலகம் பெரிசுதானே?) நம் கண்சுழற்றல், கை விசிறல் போன்ற சிறு அங்க அசைவுகளையே கவனித்து உணருமளவிற்கா பல்லியின் கண்களும் மூளையும் செயல்படுகிறது? எனக்கு இது நீங்கா ஆச்சர்யம்.

அதேபோல் டொக் டொக் டொக் என பல்லி ஏன் சப்தமிடுகிறது? பரிணாம பாட்டன் முப்பாட்டன் வரையறுத்த பாட்டா, செம்மொழி கடந்த நுன்மொழியா, இல்லை ஹால் சுவற்றில் பூச்சிவகையறா டின்னரில் இருக்கும் சக பல்லிக்கு பெட்ரூமிலிருந்து ”சீக்ரமா சாப்டுட்டு வந்து படு” என்று ஜஸ்ட் “மோர்ஸ் கோட்” தகவல் தொடர்பா? அப்படியென்றால் ”டொக்” என்று பவ்யமான எரிச்சலுடன் ஒரேமுறை ஹாலில் உம் கொட்டுகிற பல்லிதான் அங்கேயும் ஆணா? இல்லை எனக்குத்தெரிந்த நம்பிகள் பலர் நம்புவதைப்போல, பல்லி சப்தமிடுவதே அச்செயலுக்கு சற்றுமுன் நம் மனதில் நினைத்ததை பலிதமாக்குவதற்குதானா? இந்த வீக்கெண்டாவது வீட்ல இருக்கர பல்லியெல்லாத்தயும் ஒழிச்சுகட்டனும் என்று நினைத்துக்கொண்டாலுமா?

பள்ளி விடுமுறையின் குழந்தைகளாய் இப்படி பல்லி பற்றியே நமக்கு பல கேள்விகள் இருக்கிறது. ஆதாரமான விந்தை ஒன்றிற்கு மட்டும் விடை இக்கட்டுரையில் காண விழைவோம். சுவற்றில் பல்லி எப்படி ஒட்டுகிறது? Continue reading

தொட்டால் தொடுதிரை பூ மலரும்

Standard

முன்னொரு காலத்தில் டயனோரா என்றொரு டிவி பிராண்ட் இருந்தது. விற்பதற்கு அங்கம் அவிழ ஆடையணிந்த அணங்கைகள் அக்கம்பக்கம் அதிர ”கீ……….ப் இன்ன்ன்ன்ன் டச்” என்று ஸ்டிரியோவில் விளம்பர ஸ்லோகம் விண்ணப்பிப்பார்கள். என்னுடன் தொடர்புகொண்டிரு என்று டிவி அன்று அரைகூவியது, மின்தொடர்புசாதனங்களின் செயல்பாட்டிற்கே இன்று இன்றியமையாத ஸ்லோகமாகிவிட்டது. கணினி சி.ஆர்.டி. திரையில் தொடங்கி, கியோஸ்க்களின் பில் போடும் மெஷின், சூதாட்ட ஸ்லாட் மெஷின்கள், வங்கி ஏ.டி.எம்.கள், பாம் பைலட், ஸ்மார்ட் ஃபோன் என அநேகமாக அனைத்து மின்திரைகளுமே இன்று தொடுதிரைகளாகிவிட்டது. ஐபாட், ஐஃபோன், ஐ.நா., ஐயா, என்று அனைவருமே சற்று அழுத்தினால்தான் கவனிக்கிறார்கள்.

நான்கு வெவ்வேறு தொழில்நுட்பங்களைகொண்ட தொடுதிரைகள் – டச் ஸ்க்ரீன் – மார்கெட்டில் உலவுகிறது. ரெஸிஸ்டிவ் டச், கப்பாஸிட்டிவ் டச், அக்கௌஸ்டிக் டச் மற்றும் இன்ஃப்ரா ரெட் டச்.
Continue reading

தாமரை இலையும் மகா நீரொட்டா பரப்புகளும்

Standard

பணியில் பாஸ் கூறும் ஐடியாக்களை பரிசீலிக்கையில், மனையில் மனைவி செய்த புதிய பதார்த்தத்தை உண்டு உவேவக்கையில், பஸ்ஸில் வெகுஜன வாராந்திரிகளில் பளீரிடும் காரிகைகளை புரட்டுகையில், சட்டென கிரகிக்கக்கூடிய செய்திக்கோர்வையான சிறுகட்டுரையாக இன்றி, ஏன், எதற்கு, எப்படி, என்று ஒரே விஷ(ய)த்தை நீட்டிமுழக்கி முதுகுவலிக்கவைக்கும் தீவிர கட்டுரைகளை இணையத்தில் மேய்ந்து புக்மார்க்கையில், இப்படி நம் பல மேலோட்ட செயல்பாடுகளை-விளைவுகளை மேற்கோளிட, ”தாமரை இலைத் தண்ணீர் போல” என்பது நாமறிந்த வழக்கு.

காவிரி நாடன் திகிரிபோன்ற ஞாயிறின் ஒளிமழையில், பாண்டிய நெடுஞ்செழியனின் பட்டமகிஷியின் கால் சிலம்பினிற் சிதறிய முத்துக்களென, பொற்றாமரைகுளத்து தாமரை இலைகளில் திவலைகளாக நீர் திரண்டிருக்கும். வூட்டாண்ட இருக்கர கொலத்லயும் தாமர எலல இப்டிதான், தண்ணியே தேங்காது. தாமரை இலையை நீர் ஈரப்படுத்தாது. ஏனெனில், தாமரை இலை ஒரு மகா நீரொட்டா பரப்பு. சூப்பர் ஹைட்ரோஃபோபிக் ஸர்ஃபேஸ். கசியும் பேனாவின் பாக்கெட் மசி, கக்கத்து வியர்வையின் சட்டை ஈரம் போல, தாமரை இலைகளில் நீர் ஊறி சொதசொதப்புவதில்லை. ஆலிலை இப்படியில்லை. கிருஷ்ணரே உட்காரலாம் (சரி சரி, தாமரை இலையிலும் கிருஷ்ணர் உட்காரலாம்தான்; சண்டைக்கு வராதீங்க).

கிருஷ்ணரை குறிப்பிடுவதற்கு காரணம், கீதை எவன் கர்மயோகமாய் பலனில் பிரேமைகொள்ளாமல் செயல்களை ப்ரம்மத்திற்காக செய்கிறானோ அவனை, தாமரை இலையை எப்படி நீர் தீண்டுவதில்லையோ அப்படி பாவங்கள் தீண்டுவதில்லை என்கிறது (அத்யாயம் ஐந்து, சுலோகம் பத்து). தாமரை இலையின் மகா நீரொட்டா தன்மை இயற்கையின் புராதானமான ஒரு நானோடெக்னாலஜி வெளிப்பாடு.

சரி, தாமரை இலையில் எப்படி நேனொடெக்னாலஜி?
Continue reading