எனது மின் புத்தகங்கள்

Standard

தமிழினி இதுவரை வெளியிட்டுள்ள எனது இரண்டு நாவல்கள் மூன்று அறிவியல் சார்ந்த புத்தகங்கள் தற்போது அமெசான் கிண்டில் வலைதளங்களில் மின் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.

இவற்றை வாங்குவதற்கான பக்கங்களைக் கண்டடைய ‘அருண் நரசிம்மன்’ என்று தமிழிலோ ஆங்கிலத்திலோ (அமெரிக்கா + இந்தியா) அமெசான் வலைதளங்களில் தேடினால் தென்படும்.

தனிச்சுட்டிகள் இவை

  1. ஏலியன்கள் இருக்கிறார்களா?
  2. நேனோ ஓர் அறிமுகம்
  3. உலகே உன் உருவம் என்ன?

நாவல்கள்

  1. அமெரிக்க தேசி
  2. அச்சுவை பெறினும்…

வாசகர்கள் தத்தமது மின்புத்தக வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்தால் மகிழ்வேன்.

அச்சுவை பெறினும்… நாவல்

Standard

arunn-achuvai-perinum-frontஅச்சுவை பெறினும்… என் இரண்டாவது நாவல். தமிழினி வெளியீடு.

ஜூன் 1 முதல் நடக்கவிருக்கும் சென்னை புத்தகக் காட்சியில் தமிழினி நிலையத்தில் கிடைக்கும்.

பிறகும், வழக்கம்போல, வாசிக்க மனமிருப்போருக்கு உலகின் மூலை முடுக்கிலெல்லாமும் கிடைக்கும். புத்தக வடிவில் வாசிப்பதற்கு ஓர் விலையை அளிக்கவேண்டியிருப்பதைத் தவிர்க்க இயலாது.

[தொடர்பு: தொ.பேசி எண் 9344290920]

*

தத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால்? இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா?

இதுதான் புத்தகப் பின் அட்டைக்கு எழுதிக் கொடுத்துள்ள சாரம்.
Continue reading

ஆன்லைனில் அமெரிக்க தேசி

Standard

அமெரிக்க தேசி நாவலை அமெரிக்காவில் (only USA) வசிப்பவர்கள் கீழேயுள்ள Buy Now சுட்டியை அழுத்தி, இட்டுச் செல்லும் வலைப்பக்கத்தில் PayPal அக்கௌண்ட் மூலமாகவோ, கிரெடிட் கார்ட் மூலமாகவோ வாங்கலாம்.

மறக்காமல் அமெரிக்காவில் அனுப்பிவைக்க வேண்டிய முகவரியை (Shipping Address) அங்குள்ள படிவத்தில் வழங்குங்கள்.

***

novel-front

***

அமெரிக்காவில் நான்கு அதற்கும் மேற்படியான பிரதிகளை வாங்குவோருக்குத் தள்ளுபடி உண்டு. சந்தேகங்களுக்கு amerikkadesi AT gmail DOT com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
(கனடாவில் வசிப்பவர்கள் வாங்குவதற்கு மேலேயுள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.)

***

இந்தியாவில் வசிப்பவர்கள் – உடுமலை டாட் காம் – வலைதளத்தில் ஆர்டர் செய்யலாம்.

***

தேசிய அளவு அங்கீகாரம்

Standard

பூர்வ பீடிகையைப் பொறுத்துக்கொள்ளுங்கள். சொல்ல வரும் விஷயம் ஒரு வரி தான்.

இந்தியாவில் பல அகடெமிக்கள் உள்ளன. அவற்றில் அறிவியல் பொறியியல் துறை சார்ந்தவை ஆறு. அவற்றில் பொறியியலில் முதன்மையானது இந்திய தேசிய பொறியியல் அகடெமி (Indian National Academy of Engineers – INAE).

இவ்வகை அகடெமிக்களில் பொதுவாகத் தங்கள் துறையில் தொடர்ந்து சிறந்து பணியாற்றும் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் போன்றோர் அங்கத்தினராய் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அங்கத்தினர் ஆவது இந்த அகடெமிக்களின் அழைப்பின் பேரில் மட்டுமே சாத்தியம். அதாவது ஏற்கெனவே அங்கத்தினராய் உள்ளவர்கள் உங்கள் (ஆராய்ச்சிப் பணிகள், இன்னபிற தேசிய அளவில் உபயோகமான) செயல்பாடுகளை கவனித்து ஒவ்வொரு வருடமும் செயற்குழு கூடுகையில் பரிந்துரைந்து, உருவாகும் பட்டியலில் இருந்து பரிசீலனைக்குப் பிறகு துறைக்கு ஓரிருவரை அவ்வருடத்திற்கென அங்கத்தினராய்த் தேர்ந்தெடுக்கையில் உங்கள் பெயர் மேலெழுந்தால் நீங்கள் அங்கத்தினர். ஒருவகையில் பார்த்தால் தெரு-டீமிற்கு ‘இவங்கிட்ட விக்கெட் கீபிங் க்ளைஸ் இருக்குடா சேத்துக்கலாமா?’ என்று புதிய ஆள் சேர்ப்பதற்கான முயற்சி போலத் தோன்றலாம். ஆனால் அகடெமி விஷயத்தில் சற்று புறவயமான மதிப்பீடுகள் இருக்கும் என்பதை ஏற்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

இந்த அகடெமிக்களில் அங்கத்தினர் ஆவதென்பது தேசிய விருதல்ல, தேசிய அளவிலான அங்கீகாரம் எனலாம். ஏனெனில் சக அங்கத்தினர்கள் அனைவருமே இந்தியாவிலேயே (அல்லது எதையுமே எதிர்மறையாகவே பேசிவிடுவதாலேயே அறிவுஜீவியாகிவிடுவோரின் பரிபாஷையில், இந்தியாவிலாவது!) தங்கள் துறைகளில் குறிப்பிட்ட காலவரையறையில் எதையோ காத்திரமாய்ச் சாதித்தவர்கள்.

அகடெமிக்களின் அங்கத்தினர்கள் தேசிய அளவிலான பொறியியல் உருவாக்கங்களில் முக்கியமான பங்களிக்க முடியும். உதாரணமாக, சந்திரயானோ மங்கள்யானோ உருவாகுகையில் அடிக்கடிக் கூடும் பரிசீலனைக் குழுக்களில் இவ்வுறுப்பினர்கள் ஆலோசகர்களாய்ப் பணியாற்றுவார்கள் (பைசா ஒன்றும் கிடையாது; தேவையுமில்லை). ஒரு அறிவியல் துறையின் போக்கு, முதலீடு போன்றவற்றிற்கான இந்திய அரசாங்கம் கோரும் பரிந்துரைகளை தேசிய அகடெமிக்கள் (உறுப்பினர்களின் உப கமிட்டிக்கள் மூலம்) அவ்வப்போது வழங்க இயலும். உதாரணமாக, மரபணு மாற்றங்கள் ஏதுவான காய்கறிகள் பாதுகாப்பானவையா என்று ஒரு கமிட்டி சில வருடங்கள் முன்னர் பரிசீலித்து ரிப்போர்ட் கொடுத்திருந்தது. அன்றைய சுற்றுச் சூழல் அமைச்சருக்கு திருப்தியளிக்காத ரிப்போர்ட். உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். இப்படி தேசிய அளவில் சில பல செயல்பாடுகளில் இந்த அகடெமிக்களின் அங்கத்தினர்களால் பங்குகொள்ள முடியும்.

பீடிகை முடிந்தது. விஷயம் இதுதான்.

இந்த வருடத்திற்கான (2015) இந்திய தேசிய பொறியியல் அகடெமியின் மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் துறையில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு அங்கத்தினரில் அடியேனும் ஒருவன்.

*

பி.கு. 1 ஓரிரு மாதங்கள் முன்னர் மின்னஞ்சல், தபால் மூலமெல்லாம் அறிவிப்பு வந்தாலும், நானும் நம்பவில்லைதான். அகடெமியின் இணையப் பக்கத்திலும் பட்டியலில் என் பெயர் உள்ளதைத் தற்போதுதான் கவனித்தேன். இணையமே சொல்லிவிட்டதே, இனி நம்பிவிட வேண்டியதுதான்.

பி.கு. 2. எதற்கு என்னைப் பரிந்துரைத்தார்கள் என்றால் முக்கியமாக கண் தொடர்பான என் வெப்பவியல் ஆய்வுகளுக்கும், பொறியியலின் ஒரு உபதுறையில் (போரஸ் மீடியா) உலக அளவில் வல்லுநர் என்று அறியப்பட்டதற்காகவும், என்று அறிகிறேன். [கடந்த பத்து வருடங்களில், சார்ந்த ஆய்வுகளை தங்கள் (மேற்)படிப்பிற்காக என்னை நம்பி என்னுடன் வந்து மேற்கொண்ட அனைத்து இந்திய மாணவர்களுக்கும் நன்றி]

பி.கு. 3. ஆர்வமிருப்பவர்களுக்கு: என் ஆய்வுகளின் சில விளக்கப் பக்கங்களை இப்பக்கத்தில் உள்ள சுட்டிகளில் அணுகலாம்.

புத்தகம் – உலகே உன் உருவம் என்ன?

Standard

ulagam-s

இணையத்தில் எழுதிய பதினைந்து அறிவியல் கட்டுரைகளை ‘உலகே உன் உருவம் என்ன?’ என்கிற தலைப்பில் தமிழினி புத்தகமாய் வெளியிட்டுள்ளது. ஜனவரி 9 தொடங்கும் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கும். விலை, ரூபாய் 100. ஆன்லைனில் வாங்க: உடுமலை தளம் | என்.எச்.எம். ஷாப்

அறிவியல் சார்ந்த விஷயங்களைத் தீவிரம் குறையாமல் சற்றே நகைச்சுவையுடன், சாய்வுநாற்காலியில் உங்களைப் புரட்ட வைப்பதே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளின் நோக்கம்.

இப்புத்தகத்தை முன்வைத்து வெளியீட்டு விழாவில் பத்ரி பேசியதை விரைவில் கானொளியாய் இணைக்கிறேன்.

‘என் சிதைக்கு விறகுகளைத் தேடாதீர்கள், வெளிவராத என் அறிவியல் கட்டுரைகளையே உபயோகித்துக்கொள்ளுங்கள்’ என்ற பெ. நா. அப்புசுவாமி வாழ்ந்த நம் தமிழ்ச் சூழலில், வைத்த முற்றுப் புள்ளிகளெல்லாம் ஒருவனது அறிவியல் கட்டுரைத் தேகங்களெங்கும் மச்சங்களாகிச் சொந்தச் செலவின்றி இவ்வாறு நேர்தியான புத்தகமாகும் அதிநிகழ்வு நேர்வது, பீச் காற்றில் வேட்டியில் சிக்கிக்கொண்ட லாட்டரி சீட்டிற்கு இன்னும் ஏன் வாங்கிக்கொள்ள வரவில்லை என்று அதட்டிப் பரிசைக் கையில் கொண்டு கொடுத்துவிட்டுப் போவதைப் போன்றது; பரிசுத் தொகை எவ்வளவு என்பதை இத்தருணத்தில் ஆராய்வது அறிவு ஜீவி என்று தமிழ்ச் சூழல் நினைக்கவைத்துவிடும் என்பதும் சமகால கற்பிதமே.

(மேற்படி வாக்கியவகையில் மர்ஸெல் பூஸ்ட் ஃப்ரெஞ்சில் கதை எழுதினால் அதை ஆங்கில மொழியாக்கத்தில் வாசித்து இந்திரலோக இலக்கியவகை என்று சிலிர்ப்பவர்கள், தமிழில் அதையே மூனேமுக்கால் வாக்கியமாய்ப் பிரித்து எழுதினால்தான் தமிழனுக்குப் புரியும் என்று மேல் பெர்த்திலிருந்து பீட்டர் விடுவதும் த. சூ. அ.ஜீ.வனத்துவமே)

இவ்வகைப் புத்தகங்களை பதிப்பிப்பவர் சற்றேனும் பித்தா-கோரஸாய் இருக்கவேண்டும்.

பாரதி சொல்லிவிட்டானே என்றே உலகம் அழியாமலிருக்க இன்றும் மூன்று வேளையும் வயிறார உண்டுவிடும் தமிழ் மக்களின் அறிவியல் அறிவை எவ்வாறெல்லாம் வளர்ப்பது என்று தாங்கள் உண்ட மயக்கம் தெளியும்வரை முக்கிலிருந்து முகநூல்வரைக் கூடிக் கூடி விவாதிக்கும் அறிவார்வலர்கள், மாநிலத்தில் நிகழும் ஏதோ ஒரு புத்தகக் காட்சியில் வருடம் ஒருமுறையேனும் சந்தித்து இவ்வகைப் புத்தகப் பதிப்பாளர்களிடம் ‘நன்றி’ என்று ஒரே ஒருமுறைக் கூறிச் செல்வதும் அதற்கான ஒரு வழியே என்று ஏற்றுக்கொள்வார்கள்தான்; அறிவியல் சார்ந்த விஷயங்களை சில வருடங்களாய் எழுதிவரும் என்னைப்போன்றோர் அந்த யோசனையை வழங்கிவிடாத வரையில்.

வாசகர்கள் வாங்கி வாசித்தால் போதுமானது. நீ யார் அவர்களை வாங்கச் சொல்வதற்கு என்று உங்கள் மனம் வெகுண்டால், தணிப்பதற்கு ஒரு ‘அவ்வப்போது’ வை முன் வாக்கியத்தில் எச்சொல்லிற்கு முன்னாலும் இணைத்துக்கொள்ளுங்கள்.

அமெரிக்க தேசி – நூல் வெளியீட்டு விழா

Standard

invite_front

invite_back

அனைவரும் வருக! என்று சொல்லமாட்டேன். ஆனால் சென்னையில் இருந்துகொண்டு ஒரு ஞாயிறு காலையில் நீங்கள் வராமல் போனால், வந்திருந்தவர் அனைவரும் உங்களுக்கு இலக்கிய ஆர்வம் இல்லை என்று கருதிவிடலாம். மேலும், உங்களுக்கு என்னைப் பிடிக்காது என்று கருதுவதற்கான காரணத்தையும் உங்கள் வராமை எனக்கு வழங்கிவிடலாம். பார்த்துச் செய்யுங்கள்.

அமெரிக்க தேசி – பதாகை நேர்முகம்

Standard

அமெரிக்க தேசி நாவலை முன்வைத்து இலக்கியம் சார்ந்த கேள்வி பதில்களுடன் பதாகை இணைய சஞ்சிகை நேர்முகம்.

அறிவியல் நூல்கள் மூன்று  எழுதியுள்ள திரு அருண் நரசிம்மன் அவர்களின் அமெரிக்க தேசி என்ற சமூக நாவல் தமிழினி வெளியீடாக இவ்வாண்டு பதிப்பிக்கப்படுகிறது.  இவருடைய புனைவுகதைகளில் காணப்படும் தனித்தன்மையுடனான வடிவத்தை நாவலுக்கு எவ்வகையில் வளர்த்தெடுத்திருக்கிறார் என்று எதிர்பார்க்க வைக்கும் படைப்பு.   தன் நாவல் குறித்தும் இலக்கியம் தொடர்பான பிற விஷயங்கள்  குறித்தும் அவர் மின் அஞ்சல் உரையாடலில் பதாகையுடன் பகிர்ந்து கொண்ட கருத்துகள் இங்கு

பதாகை- அமெரிக்க தேசிஎன்ற தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதேசுதேசி விதேசி தெரியும், அது என்ன அமெரிக்க தேசி?

அருண்-  தலைப்பில் இரண்டு சிலேடைகளை யோசித்திருந்தேன்.

அமெரிக்காவில் இந்தியர்களை பொதுவாக ‘தேசி’க்கள் (desis) என்றழைப்பார்கள். தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா செல்லும் என் நாவல் கதாநாயகன் பெயர் தேசிகன். சிலேடைச் சுருக்கமாய் தேசி (அவனுக்கு தன் பெயரைச் சுருக்கினால் பிடிக்காது).
Continue reading

அமெரிக்க தேசி – நாவல்

Standard

novel-front-sஅமெரிக்க தேசி என் முதல் தமிழ் நாவல். சுமார் 700 பக்கங்கள். கெட்டி அட்டை. கனமான உள்ளடக்கம். விலை ரூபாய் 550.

[அமெரிக்க தேசி – பதாகை நேர்முகம் | முனைவர் கரு. ஆறுமுகத் தமிழன் உரை காணொளி | திரு. சேஷஸாயி பாராட்டுக் கடிதம்.]

தமிழினி வெளியீட்டில், ஜனவரி 2015 புத்தகக் காட்சியில் கிடைக்கும். தொடர்பு எண்: 9344290920.

ஆன்லைன் ஆர்டர் செய்ய | இந்தியாவில் — [ உடுமலை டாட் காம் ] அமெரிக்கா, கனடாவில் — [ இங்கு செல்லவும் ].

இனி நாவல் சார்ந்து ‘அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான’ பதில்கள்
Continue reading

அம்ருதாவில் அறிவியல்

Standard

ஓவியம், இலக்கியம், உலகத்திரை, பிற கலைகள் பற்றிய கட்டுரைகள், ஓரிரண்டு சமூகச்சாடல்கள், கவிதைகள், சிறுகதைகள், நாகரத்தினம் கிருஷ்ணா, இந்திரா பார்த்தசாரதி, அழகியசிங்கர் பக்கங்கள், விற்பனைக்கு தொட்டுக்கொள்ள சச்சின், சினிமா, அக்கபோர், நிரந்தரமாய் பட்டுப்புடவையில் அனுஷ்கா படம் என்று வெளிவரும் ‘அம்ருதா’ அச்சுஊடக மாதாந்திரியில் “வாழ்க்கை விஞ்ஞானம்” என்கிற பத்தித் தலைப்பின்கீழ் (என் தேர்வல்ல), ஒரு வருடம் எழுதிவிட்டேன். எனக்குத் தெரிந்தவரையில், வகையில், அறிவியல் கட்டுரைகளை.
Continue reading

அம்ருதா, அறிவுக்கண்

Standard

அம்ருதா (நவீன கலை இலக்கிய சமூக) மாதாந்திர இதழில் 2012 ஜனவரி முதல் எழுதத்துவங்கியுள்ளேன்.

தொடர்ந்து கட்டுரைகள் பிரசுரமானதும் மீள்பதிவுகளாய் இங்கு அவைகளின் முழுநீள முன்வடிவங்களை வெளியிடுகிறேன்.

இதேபோல் Federation of Science Clubs of TamilNadu என்பதின் லாபநோக்கற்ற பிரசுரமாய், பள்ளி கல்லூரிகளை சென்றடையும் அறிவுக்கண் என்கிற ஏட்டிதழ் வெளியாகிறது. வலைதளம் இருப்பதாய் நானறியேன். மாத இதழின் விலை 10 ரூபாய். இவர்களும் கேட்டுக்கொண்டதில், பல சிறு பாகங்களாய் தளத்திலுள்ள கட்டுரைகள் சிலதை அளித்துள்ளேன்.

கடையில் கால்குலஸ் வாங்குவோமா என்று இங்கு தொடங்கியுள்ள (இன்னும் எழுதவேண்டும்) கணித விளக்க கட்டுரையின் பகுதியுடன் சென்ற வருடம் தொடங்கி, இப்போது டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் (அச்சு இதழோ, மின் வடிவமோ எனக்கு தொடர்ந்து வருவதில்லை).

ஏட்டிலும் அறிவியலை வாசித்து, இணைய வசதி அண்டாத சக ஆர்வலர்களிடமும் இத்தகவலை கொண்டுசேர்க்குமாறு இணைய வாசகர்களை கோருகிறேன்.

ஹிண்டுவில் சங்கீதம் சார்ந்த கட்டுரை

Standard

சென்னை மார்கழி இசை விழாவை ஒட்டி, ஊடகங்களில் விமர்சன கச்சேரிகள் நடந்தேறியபடி. மாற்றாக ஆங்கில நாளிதழ் தி ஹிண்டு வின் வாசகர்களின் மென்புலன்கள் நோவா வண்ணம் அடியேனுடைய விமர்சனம் தவிர்த்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது.

கட்டுரைக்கு திரு.கேஷவ் வழக்கமான அவரது பாணி கோட்டு சித்திரம் தந்துதவியுள்ளது, என் பாக்கியம்.

ஒரே நேர்/இணைய சந்திப்பில் என் சங்கீத விமர்சனம் மற்றும் மென்நகைச்சுவை எழுத்து பிடித்துபோய், அவ்விரண்டில் முடிந்ததை இவ்வூடகத்தில் அரங்கேற்றிய இரு நண்பர்களுக்கும் நன்றி.

இசை விழா விமர்சன கட்டுரைகள் இங்கு தொடரும்.

இயற்கையின் நேனொடெக்னாலஜி

Standard

வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணிணிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் எனும் நுண்ணுடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்த்தியை நேனோ என்று பெயரிடும் அளவிற்கு நேனோ என்றதும் அறிவியலாளர்களுடன் நேனு நேனு என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் நேனோ டெக்னாலஜி என்கிற அறிவியல் துறை இன்று பிரபலம்.

இயற்கையை அறிதலுக்கு அறிவியல்சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ டெக்னாலஜி விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள், டெக்னாலஜிகள், இயற்கையில் நம்முலக ஜீவராசிகளிடையே ஏற்கனவே படைப்பில், உபயோகத்தில் இருக்கிறது. சிலவற்றை எனக்குப்புரிந்த அறிவியல் எல்லைக்குள், இயற்கையின் நேனொடெக்னாலஜி என்கிற இளகிய பொதுத்தரப்பின் கீழ் வரும் சில கட்டுரைகளில் விளக்கமுற்படுகிறேன்.

இதன் முதல் பாகம் தாமரை இலையும், மகா நீரொட்டா பரப்புகளும் தலைப்பில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்துள்ளது. படித்துப்பாருங்கள். இதே இதழில் ராமன் ராஜ குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி எழுதியுள்ள தெனாலிராமன் பூனையும், ச்ரோடிங்கர் பூனையும்!  கட்டுரையையும் படிக்காமல் விட்டுவிடாதீர்கள்.

என் கட்டுரையை மீள்பதிவாய் இங்கு பின்னர் வெளியிடுகிறேன். மற்றபடி, கட்டுரையின் வசனநடையும் கோமாளி உடையும், தீவிரத்தை உள்வாங்க ஏதுவாக்கும் குதூஹல மனநிலைக்கான பாவனைகளே. ஆங்கில nano தமிழில் நேனோவோ நானோவோ, நேனொ என்றே உச்சரிக்கப்போகிறேன். மைக்ரோ என்றால் ஏற்கனவே நுண் என்று பழக்கத்தில் உள்ளது (மைக்ராஸ்கோப் – நுண்னோக்கி). நேனோவை அப்படியே வைத்துக்கொண்டிருக்கிறேன். மைக்ரோ, நேனோ, பிகோ, ஃபெம்ட்டோ, அட்டோ போன்ற வார்த்தைகளை, சைக்கிள், பெடல் பிரேக், (குடிக்கும்)காபி என்பதுபோல அப்படியே புழக்கத்திற்கு கொண்டுவந்து உபயோகித்தாலும், விளக்கங்கள் கொடுத்தால் போதுமானது என்ற கருத்தில். இதற்கெல்லாம் கோபித்துக்கொண்டு, நீனு ”நேனொ”ன்னா நேனு ”நோநோ” என்று படிக்காமல்போய்விடாதீர்கள்.